என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 6 ஜூன், 2014

VGK 21 - மூ க் கு த் தி


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 12.06.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 21

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மூ க் கு த் தி 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



தள்ளாத வயதினில் தன்னந்தனியாக 
நகைக்கடைக்குச் சென்று வந்த 
ஓர் கிராமத்து முதியவரின் அனுபவங்கள். 

அந்த முதியவரே சொல்வது போல ... இதோ இங்கே !



எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பிப்போனால் ஒரு மணி நேரத்தில் டவுனுக்குப்போக இப்போதெல்லாம் ஏகப்பட்ட டவுன் பஸ்கள் விடியவிடிய விடப்பட்டுள்ளன. எவ்வளவு பஸ்கள் ஓடினாலும் கும்பல் தான் தாங்க முடியாமல் உள்ளது. 

ஜனங்களுக்கு அப்படி என்னதான் வேலையோ, என்னதான் அவசரமோ, படிக்கட்டுகள் இரண்டிலும் பத்து பேர்களுக்குக் குறையாமல் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

நான் இன்று புறப்பட்டது டவுனில் உள்ள ஒரு நகைக்கடைக்கு. அந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்க ஒரே ஒரு செட்டியார் கடையும், வைர நகைகளுக்கு ஒரு வடக்கத்திய சேட்டுக்கடையுமாக இரண்டே இரண்டு கடைகள் தான் இருக்கும். இரண்டுமே நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் பெயர்போன கடைகள். 

உள்ளே போனதும் இன்முகத்துடன் கடை முதலாளி வரவேற்பார். அமர ஒரு இருக்கை கொடுத்து, மின் விசிறியைத்தட்டி விட்டு, குழல்விளக்குகள் மூலம் அதிக வெளிச்சம் தர ஏற்பாடு செய்வார்கள். 

ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள மற்றவர்களைப்பற்றியும் நலம் விசாரித்து, கோடை வெப்பம் தணிய குளுமையான பானைத்தண்ணீர் அருந்தச்சொல்லி, அதன்பின் வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்.

மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள். 

நம் பழைய நகைகளை வாங்கி, ஒரு சொறசொறப்பான சாணைக்கல்லில் உரசிப்பார்த்து, தரத்திற்கு தகுந்தபடி, அதையே அழித்து, மேலும் கொஞ்சம் தங்கம் சேர்த்து புதியதாக நகைகள் செய்து தருவார்கள்.  

கூலி, சேதாரம், உபரித்தங்கம் முதலியவற்றிற்கு கணக்குப்பார்த்து வாங்கிக்கொள்வார்கள். அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்றும் நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.

இது ஒரு அவசர உலகம். நகைகளை உடனே வாங்கி உடனே அணிய வேண்டும் என்பதே பெரும்பாலானோர் விருப்பம். பழைய நகைகளைத் தனியாக விற்று காசாக்கிக் கொள்வதற்கும் வசதி. 

இன்று ஏராளமான நகைக்கடைகள். வியாபாரத்தில் நிறைய போட்டிகள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள். குளுகுளு வசதிகளுடன் பெரியபெரிய கடைகள். மாதாந்தர நகைச்சீட்டுச் சேமிப்பு, குலுக்கலில் பரிசு ..... இத்யாதி ..... !

நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல். கொட்டிக்கிடக்கும் நகைகள். டிசைன்கள். ஒவ்வொரு கடைகளிலும் கூட்டமான கூட்டங்கள். க்யூவில் நிற்க வேண்டிய நிலைமை.

கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில்,  பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.




பகுதி-2

வாசல் கண்ணாடிக்கதவை திறந்து விட்டார் ஒருவர், ராணுவ சிப்பாய் உடையில். கடையில் கூட்டமான கூட்டம். டவுனில் சினிமாக்கொட்டகை, ரேஷன் கடை, அடுத்தது டாஸ்மாக் கடையில் தான் கூட்டமாக இருக்கும் என்று பார்த்துள்ளேன், கேள்விப்பட்டுள்ளேன்.  அதற்கு அடுத்தபடியாக பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இப்போது ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், பண்டிகைகாலம் ஏதும் இல்லாதபோதும் கூட, மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து, போட்டிபோட்டுக்கொண்டு, ஏதேதோ வாங்கிச்செல்கின்றனர்.

மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், ஏதேதோ செய்திகள் படித்த ஞாபகம் எனக்குள் ஏற்பட்டது. 

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். மேலும் மேலும் உயரக்கூடும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இவ்வாறு கூடுகிறார்களோ என்னவோ?

எங்கிருந்து தான் எப்படித்தான், பணம் புரளுகிறதோ ! கிராமத்தானாகிய எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வறட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.

அந்த குளிரூட்டப்பட்ட கடையில் முதலில் என்னை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், ஒருவன் டிப்டாப் உடையில் என்னை நெருங்கி, “பெரியவரே, குடையை நீட்டிக்கொண்டு இப்படி குறுக்கே நிற்காதீர்கள், மற்றவர்கள் மேல் அது குத்திவிடும். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று வினவினான்.

”மூக்குத்தி ஒன்று பார்க்க வேண்டும்” என்றேன்.

“நேராகப்போய் அந்தக்கடைசியில் உள்ள லிஃப்டில் ஏறி நாலாவது மாடிக்குப்போங்க” என்றான்.

லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.  பேசாமல் மாடிப்படிகளில் ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.




பகுதி-3

“செயின், சங்கிலி, கிஃப்ட் அயிட்டம் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் வெளியே வாங்க” என்றார், லிஃப்ட் ஆபரேட்டர், முதல்மாடி வரும்போது. 



லிஃப்டில் இருந்த பெண்கள் அவரவர் கழுத்தில் இருந்த செயின் சங்கிலி பத்திரமாக உள்ளதா என்று தடவிப்பார்த்துக்கொண்டனர்.

“நெக்லஸ் பார்க்க யாராவது இருந்தா தயவுசெய்து வெளியே வாங்க”  என்றார் இரண்டாவதுமாடி வரும்போது.  



“தங்க வளையல், ப்ரேஸ்லெட்டுகள்” என்றார் மூன்றாவது மாடியில் லிஃப்ட் கதவைத்திறக்கும்போது. 




“தோடு முக்குத்தி” என்றார் நான்காவது மாடியில். 





  

ஒவ்வொரு மாடி வரும்போதும் லிஃப்டில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.  நான்காவது மாடியில் நான் லிஃப்டை விட்டு வெளியே வந்த பிறகும், சிலர் ஐந்தாவது மாடிக்குச்செல்ல லிஃப்டினுள் இருந்தனர். 

அவர்கள் அனைவரும் ஏதாவது வெள்ளிச்சாமான்கள் பார்க்கவோ அல்லது வாங்கவோ செல்பவர்களாக இருக்கலாம் என்று தோன்றியது, எனக்கு.



நாலாவது மாடியில் இருந்த விற்பனைப்பிரிவுக்குள் நுழைத்தேன், நான். அங்கும் ஒரே கூட்டம். ஒருபுறம் காதுத்தோடுகள். மறுபுறம் மூக்குத்தி வகையறாக்கள்.  

உட்கார இடமில்லாமல் ஒருவர் முதுகை ஒருவர் பார்த்த வண்ணம், உட்கார்ந்து சிலரும், நின்றுகொண்டே பலரும் ஏதேதோ நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

குறுக்கும் நெடுக்கும் ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களும், ஒருசில கைக்குழந்தைகளும் வேறு ஆங்காங்கே தென்பட்டனர்.

பொறுமையிழந்த நானும் முண்டியடித்தபடி மூக்குத்தி இருக்குமிடம் நெருங்கி, அப்போதுதான் காலியான ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றில், மஞ்சள் பையையும், மடக்கிய குடையையும் பத்திரமாகப்பிடித்தபடி, அமர்ந்து கொண்டேன்.

“பெருசுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு சீக்கரம் அனுப்புப்பா” சிறுசுகள் (வயதுப்பெண்கள்)  கூட்டத்திற்கு நெடுநேரமாக மூக்குத்திகளைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவன், மற்றொருவனிடம் சொன்னான்.

சுமார் ஐம்பது மூக்குத்திகள் பதித்த பலகையொன்று,  அந்த கண்ணாடி மேஜை மீது ஒரு வெல்வெட் துணிவிரிக்கப்பட்டு, அதன் மேல் வைக்கப்பட்டு, என் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.     

ஒத்தைக்கல்லு, மூணுகல்லு, அஞ்சுகல்லு, ஆறுகல்லு, எட்டுக்கல்லு, முழுவதும் வெள்ளைக்கல்லு, மேலே ஒன்று மட்டும் சிவப்புக்கல்லு, என பலவகைகள் இருந்தன. 

அவற்றில் ஒன்றிரண்டை கையில் எடுத்துப்பார்த்தேன். மிகவும் லேஸானதாக வெயிட் இல்லாமல், காற்றில் பறந்து விடும்போல இருந்தன.



“இரண்டு கிராமுக்கு மேல், நல்ல வெயிட் உள்ளதாக, உறுதியாக உள்ளதாகக் காண்பிப்பா” என்றேன்.

“இப்போதெல்லாம் யாருங்க வெயிட் உள்ள மூக்குத்தியாக விரும்புறாங்க? மூக்குக்கும் மூக்கோட்டைக்கும் சிரமம் இல்லாமல், மூக்குத்தி போட்டுள்ளோமா இல்லையா என்றே தெரியாதபடி, வெயிட் இல்லாமல் இருக்கணும்னு தான் சொல்றாங்க;  

சில நவநாகரீகப் பெண்மணிகள், மூக்கில் ஓட்டையே போடாமலும், மூக்குத்தியே அணியாமலும் இருந்து விடுகிறார்கள்; 

அப்படியே மூக்குத்தி போட்டாலும், ஒரே ஒரு சிறியகல் வைத்தது போதும் என்கிறார்கள்; 

’எட்டுக்கல்லு பேஸ்திரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்குன்னு’ சொன்னதெல்லாம் அந்தக்காலம் ஐயா” என்றான்.   



 



பகுதி-4

மிகவும் கஷ்டப்பட்டு, இந்தக்கடையின் நாலாவது மாடிக்கு வந்துவிட்ட நான், வேறு கடைகளுக்குப்போய், வெயிட் உள்ள மூக்குத்தி இருக்குமா என விசாரிக்க விரும்பாமல், அங்கிருந்தவற்றிலேயே சற்று பெரியதாக உள்ள ஒரு மூக்குத்தியை எடுத்து ”எவ்வளவு விலையாகும்” என்றேன். 

எடைபோட்டுப்பார்த்த அவன், ஒரு கிராமுக்கு சற்றே, ஒரு குந்துமணியளவு குறைவாக உள்ளதாகச்சொல்லி,  கூலி, சேதாரம், விற்பனை வரி, சேவை வரி என்று ஏதேதோ கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து, ரூபாய் 2622 ஆகும் என்றான். 

இதே பணத்துக்கு என் பொஞ்சாதிக்கு 12 பவுனில் இரட்டைவடம் சங்கிலி ஒன்று 1974 இல் வாங்கிய ஞாபகம் வந்தது. 

அப்போது ஒரு பவுன் அதாவது 8 கிராம் விலை ரூபாய் 200 க்குள் தான். ஒரு கிராம் தங்கம் வெறும் 25 ரூபாய்க்குள் தான்.  

40 வருடங்களில் 100 மடங்கு தங்கம் விலை ஏறியுள்ளது என்பதை என்னால் மனக்கணக்காகப் போடமுடிந்தது, கையிருப்பில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். 

எந்தப்பொருள் தான் விலை ஏறாமல் உள்ளது? வருமானமும் ஏறுது! போட்டிபோட்டுக்கொண்டு விலைவாசியும் ஏறுது! 

அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் தான் சாண் ஏறினால் முழம் சறுக்குவதாக ஒருவித ஏக்கப்பெருமூச்சு ஏற்படுகிறது.

“பில் போட்டுவிடலாமா? வேறு ஏதாவது பார்க்கிறீங்களா?” கடைக்காரன் என்னிடம் கேட்டான். ரூபாய் ஐயாயிரம் ஆனாலும் உறுதியாக கெட்டியாக மூக்குத்தி அமையவில்லையே என்று ஒரு மனக்குறை இருப்பினும் வேறுவழியில்லாமல், ”பில் போட்டுவிடுப்பா” என்று சொல்லி பணம் எடுக்க என் மஞ்சள் பைக்குள் கையை விட்டேன். 

பட்டத்தின் வால் போன்ற ஏதோவொரு கம்ப்யூட்டர் பில்லை, கார்பன் பேப்பருடன் ஒரு மெஷினிலிருந்து எடுத்து, அதன்மேல் ஸ்டாப்ளர் பின் அடித்து, என் பெயரைக்கேட்டு அதில் அதை எழுதி, என் கையில் கொடுத்தான். நான் பணத்தை எடுத்து அவனிடம் நீட்டப்போனேன்.

”கீழே கிரவுண்ட் ப்ஃளோரில் உள்ள கேஷ் கவுண்டரில் போய், இந்த பில்லைக்காட்டி  பணத்தைக்கட்டுங்கள். உங்கள் மூக்குத்தியும் அங்கே வந்துவிடும். அங்கேயே நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்” என்றான். 

பத்திரமாக பணத்துடன் என் மஞ்சள் பையையும், குடையையும் எடுத்துக்கொண்டு, தட்டுத்தடுமாறி, லிஃப்டில் மீண்டும் ஏறி கீழ்த்தளத்திற்கு வந்தேன்.

புளியங்கொட்டைக்கலரில் முழுக்கைச்சட்டை அணிந்த ஒருவன் என் எதிரில் தென்பட்டான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். 




“யாரு தம்பி” என்றேன். 

“நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்” என்றான்.

எனக்கு பஸ்ஸில் உட்கார இடம் கொடுத்து எழுந்து கொண்டான் ஒருவன், அவனாக இருக்குமோ? என்று நினைத்துக்கொண்டேன். சரியாக நினைவுக்கு வரவில்லை. பிறகு அவன் ஒருவித புன்சிரிப்பை உதிர்த்தவாறே என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றான்.

கேஷ் கவுண்டரில் ஒரே கூட்டம் அலை மோதியது. நான் அங்கு பணம் கட்ட நின்ற 10 நிமிடங்களில் சுமார் எட்டு லட்சங்களுக்கு மேல் கல்லாவில் வசூலாகியதை கவனித்தேன்.

இதேபோல கணக்குப்போட்டால் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கோடி வரை வியாபாரம் இருக்கும் என்று கணக்கிட முடிந்தது என்னால்.  

பலகோடிகள் முதல்போட்டு, பல பேர்களுக்கு வேலை கொடுத்து, சுறுசுறுப்பாக இயங்கும் பெரியதொரு நிறுவனம் அல்லவா. இவ்வாறு தினம் ஐந்து கோடியாவது வியாபாரம் ஆனால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும் என்றும் எனக்குத்தோன்றியது. 

ஒருவழியாக என் பில்லுக்கான பணத்தைச்செலுத்தினேன். பெரிய மனதுசெய்து ரூ. 2600 மட்டும் வாங்கிக்கொண்டு, ரூபாய் 22 ஐத்தள்ளுபடி செய்துவிட்டு, படபடவென்று ஏதேதோ ரப்பர் ஸ்டாம்புகள் குத்தி என் பெயரைச்சொல்லி பில்லை நீட்டினார், சிரித்த முகத்துடன், எல்லா விரல்களிலும் தங்கத்திலோ வைரத்திலோ மோதிரம் அணிந்திருந்த அந்தக்கடை முதலாளி . 

“என் நகை எங்கே?” என்று நான் அவரிடம் கேட்டேன்.  

”அதோ அந்தப்பக்கம் போய் பேக்கிங் செக்‌ஷனில் பில்லைக்காட்டுங்கள், நகையைத்தருவார்கள்” என்றார். 

அங்கு பார்த்தால் அங்கேயும் ஒரே கூட்டமாக ஜனங்கள்.   



  

பகுதி-5

அந்தத்தரைத்தளத்தின் கிழக்குப்பகுதி முழுவதும் மோதிரங்கள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. மேற்குப்பகுதியில் கேஷ் கவுண்டர் ஒரு மூலையில், வாயிற்கதவின் அருகே அமைந்திருக்க, மற்றொரு மூலையில் பேக்கிங் + பார்ஸல் ஒப்படைத்தல் நடைபெற்று வந்தது.  



மோதிரம் பார்க்க வந்த ஒருவர் எழுந்திருக்க, அவர் அமர்ந்திருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றைத்தாவிப்பிடித்து, அதில் நான் அமர்ந்து கொண்டேன். 

சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன்.   பணம் கட்டிய இடத்தில் நெடுநேரம் நின்றதில் என் கால்கள் கடுத்தன. மீண்டும் பார்ஸல் வாங்கும் பகுதியில் நிற்க சற்று தெம்பு வேண்டுமே!

புளியங்கொட்டை கலர் சட்டைப்போட்ட பையன் மீண்டும் என்னிடம் வந்தான். 

“ஐயா, வந்த காரியம் முடிந்து விட்டதா? பணம் கட்டிப்பொருளை வாங்கி விட்டீர்களா?” அன்புடன் விசாரித்தான்.

“பணம் கட்டிவிட்டேன், தம்பி.  நகையை மட்டும் தான் வாங்கணும். ஒரே கூட்டமாக உள்ளது. அதனால் சற்று நேரம் உட்கார்ந்து விட்டேன்” என்றேன்.

“மெதுவாகப்பார்த்து வாங்கி ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துட்டுப்போங்க, எங்கு பார்த்தாலும் கும்பலாகவும், திருட்டு பயமாகவும் உள்ளது” என்று கூறி விடை பெற்றுச்சென்றான். 

நம்ம கிராமத்துப் பக்கப்பையன், நல்ல பையன், நல்ல நேரத்தில் எச்சரித்து விட்டுபோகிறான் என்று நினைத்துக்கொண்டே, பொருட்கள் பார்ஸல் வாங்கும் பகுதியில் போய் நின்று கொண்டேன்.

கூட்டம் குறைவதாகவே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக க்யூ முறையில் ஒழுங்காக வாங்கிச் செல்வதாகவும் தெரியவில்லை.

மேலும்மேலும் பில்லுக்கான பணம் கட்டிவிட்டு வருபவர்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டே இருக்கிறது.  

நகையைப்பேக் செய்து கொடுக்கும் முன்பு, மீண்டும் ஒருமுறை தராசுத்தட்டில் வைத்து நிறுத்து, பில்லுடன் சரிபார்த்து, அதற்கான சிறிய பெரிய நகைப்பெட்டிகளில் போட்டு, கிஃப்ட் ஐட்டமாக பில்லில் உள்ள தொகைக்குத்தகுந்தபடி, பலவிதமான ஜிப் பைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், ஹேண்ட் பேக், சூட்கேஸ் முதலியன தரப்பட்டு வந்தன.

90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய ஒருவர், தனக்கு சூட்கேஸ் வேண்டும் என்று அங்கே மன்றாடிக்கொண்டிருந்தார். 

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைகள் வாங்கினால் தான் சூட்கேஸ் தருவோம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். 

வெறும் 300 ரூபாய் மதிப்புள்ள அந்த சூட்கேஸை எப்படியும் கிஃப்ட் பொருளாகப் பெற்றுவிடத்துடித்த அந்த ஆசாமி, ஏற்கனவே 90000 ரூபாய்க்கு நகைகள் வாங்கிய பின்னும், மேலும் 10000 ரூபாய்க்கு நகைகள் வாங்க ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என தன்னிடமிருந்த எல்லாவற்றையும் குடைந்து ஏதேதோ கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்கு பரிதாபமாக இருந்தது. 

கிஃப்ட் பொருட்களை இது வேண்டும் அது வேண்டும் என்று மாற்றி மாற்றி கேட்பவர்களால் மேலும் தாமதம் ஆகிக்கொண்டிருந்தது அந்தப் பார்ஸல் பகுதியின் வேலைகள். 

ஒருவழியாக பெரியவர், வயசானவர் என்ற தகுதியினால் ஒரு சிலர் என் மீது சற்றே இரக்கப்பட்டு,  எனக்கு முன்னுரிமை அளித்து, என் மூக்குத்தியை நான் பெற்றுக்கொள்ள என்னை முன்னே அனுப்பினர். 

எனக்கான நகைப்பெட்டியை, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் போட்டு, அதனுடன் ஜிப் வைத்த ஒரு சிறிய மணிபர்ஸ் போல ஏதோவொன்று போட்டு, பில், கியாரண்டி கார்டு, வேறு ஏதோ மாதாந்தர நகை சேமிப்புத்திட்டம் பற்றிய வழவழப்பான விளம்பரத்தாள் முதலியன போடப்பட்டு, என் பெயரைச்சொல்லி அழைத்து, ஒரு வழியாக என்னிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர். 

அதில் போடப்பட்டுள்ள அடசல் பேப்பர்களுடன் முக்கியமான அந்த சிறிய நகைப்பெட்டி உள்ளதா, அதற்குள் முக்கியமாக அந்த மூக்குத்தியும் உள்ளதா என ஒருமுறை சரிபார்த்துவிட்டு, அனைத்தையும் என் மஞ்சள் பைக்குள் திணித்துக்கொண்டு பத்திரமாகக் கடையைவிட்டு வெளியே வந்தேன். 

வயிறு பசிப்பதுபோல இருந்தது. காலையில் நீராகாரம் மட்டும் குடித்துவிட்டு கிராமத்திலிருந்து, வீட்டைவிட்டுப்புறப்பட்டது.  

மதியம் இப்போது பன்னிரெண்டரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்புறம் இருந்த ஓட்டலுக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து, வயிற்றுக்கு சாப்பிட ஏதோ ஆர்டர் கொடுத்தேன். நல்லவேளையாக ஓட்டலில் இப்போது கும்பல் அதிகமில்லை.




பகுதி-6

அந்த ஓட்டலில் எனக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் என்னைப்பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே,  ஓட்டலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.  

வயசுப்பையன் பாவம், அவனுக்கும் என்னைப்போலவே பசி எடுத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். 

அடிக்கும் வெயில் என் தலையைத்தாக்காமல் இருக்க, குடையை விரித்தபடி, பொடிநடையாக நடந்து, பேருந்து நிலையம் வந்து விட்டேன். அங்கும் ஒரே கும்பல். எங்கள் ஊர் பக்கம் செல்லும், ஒரு பஸ் உட்கார இடமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி போல, நிரம்பி வழிந்து, மிகவும் தள்ளாடியவாறு புறப்படத்தயார் ஆனது. 

நான் அடுத்த பஸ்ஸில் செல்லத்தீர்மானித்து, கும்பலோடு கும்பலாக நிற்கும் போதே, அடுத்த பஸ்ஸும் வந்துவிட்டது. 

டவுனில் வெயில் அடிக்கும் போதே மழையும், [கோடைமழை] படபடவென்று பெரும் தூரலாய்ப்போட்டது.

புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென என்முன் தோன்றி, என் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த என்னை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்தான்.

அவனுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், அடுத்த பஸ்ஸில் வருவதாகவும் சொல்லியவன், நான் குடை வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டேனா என்று உறுதி செய்துகொண்ட பிறகே புறப்பட்டான்.

அந்த பஸ் ஸ்டாண்டு கும்பலில் அவன் மறையும் வரை, நன்றியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, என் அருகில் அமரவந்த ஒரு இரட்டைநாடி மனிதரின் “குடையை மடக்கி நேராக வைத்து நகர்ந்து உட்காருங்க ... ஐயா” என்ற குரல் திரும்பச்செய்தது.

பஸ் எங்கள் கிராமத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் நான் எழுந்து படிக்கட்டுப்பக்கம் போய் இறங்குவதற்கு வசதியாக நின்று கொண்டேன். 

எங்கள் கிராமத்தில் மட்டும் மழைபெய்த அடையாளமே எதுவும் தெரியாமல், சுள்ளென்று வெயில் அடித்துக்கொண்டிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கிய நான், எங்கள் ஊர் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நின்று கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன். 

எனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கினேன்.

“என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன்.  

ஆமாம் என்பது போலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.






பகுதி-7

“பஸ்ஸில் ஏறும் போதோ, பயணம் செய்யும்போதோ, இறங்கும் போதோ கும்பலில் என் மஞ்சள் பையிலும் எவனோ ப்ளேடு போட்டுக்கிழித்து என் நகைப்பெட்டியையும் திருடி விட்டானப்பா;  

ஆனால், ’இதுபோலெல்லாம் நடக்கலாம் ஜாக்கிரதை’ என்று நீ என்னை நல்லவேளையாக அந்தக்கடையிலேயே உஷார் படுத்தியிருந்ததால், ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; 

பஸ்ஸில் பிட்பாக்கெட் போனது என் மஞ்சள் பையிலிருந்த காலி மூக்குத்தி டப்பா மட்டும் தான்.  அந்தக்காலி நகைப்பெட்டி போனால் போகட்டும் என்று என் மனதை சமாதானம் செய்துகொண்டு விட்டேனப்பா; 

என்னைச் சரியான நேரத்தில் உஷார்ப்படுத்திய நீ இவ்வாறு நகையைத்தொலைத்து விட்டு வந்து நிற்கிறாயேயப்பா!” என்று என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.

பிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி என் வீட்டுக்கு அவனை அழைத்தேன். 

என் அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.   

இந்தக்காலப் பயலுகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நல்ல பயலுகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் இவன்களுக்கு பதட்டம் ஜாஸ்தியாக இருக்கே தவிர,  பாவம் .... கவனம் பத்தாது என்று நினைத்துக்கொண்டேன். 

பிறகு நானும் ஒரு வழியாக, வெயிலுக்கு குடையைப்பிடித்துக்கொண்டு, மேலத்தெருவின் நடுவில் இருந்த, என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.  

புது மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்துப்பூட்டினேன். 

அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டைப் பையனையே நினைத்துக் கொண்டிருந்ததில், எனக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. மனதுக்கு மிகவும் வேதனையாகவே இருந்து வந்தது.




பகுதி-8

மாலை வேளையில் வழக்கம்போல மெயின் ரோட்டுப்பக்கம் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு, கையில் ஒரு முழுத்தேங்காயை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். 

அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன். 

நான் வாங்கிவந்த புதிய மூக்குத்தி பத்திரமாக என் வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் ரூபத்தில் வந்து உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் அடித்தேன்.

நான் உடைத்த அந்தத் தேங்காய் நன்கு தூள்தூளாக சிதறி உடைந்து விட்டதா என்று பார்க்க, அங்கிருந்த சதிர் தேங்காய் உடைக்கும் தொட்டியைக் குனிந்து நோக்கினேன்.  

அதில் நான் உடைத்த தேங்காய் சிதறல்கள் மட்டுமின்றி, எனக்கு அந்தக்கடையில் மூக்குத்தி போட்டுக்கொடுத்திருந்த அந்த மிகச்சிறிய நகைப்பெட்டியும் உடைந்திருக்கக்கண்டேன்.   

கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது.  

அந்த சிறிய நகைப்பெட்டிக்குள் மூக்குத்தி இல்லாததால் ஏமாற்றமடைந்த அவன், அந்த நகை எங்குதான் மறைந்து போயிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என் வருகைக்காக இந்தப்பிள்ளையார் கோயில் வாசலில், நின்று கொண்டிருந்திருப்பானோ? என நினைத்து, ஒன்றும் புரிபடாமல் குழம்பிய நான் அந்தப்பிள்ளையாரை நோக்கினேன்.



மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.




oooooOooooo


 VGK-19 - எட்டாக்க(ன்)னிகள்  


 

 

 

 


VGK-19 ' எட்டாக்க(ன்)னிகள் ’ 

சிறுகதைக்கான

விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

நாளை சனி  / ஞாயிறு  / திங்களுக்குள்

வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !



ஒவ்வொரு வாரப் போட்டிகளிலும் 

கலந்துகொள்ள மறவாதீர்கள் !!



என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

30 கருத்துகள்:

  1. முத்தான மூக்குத்தி ஆனந்தக்கண்ணீருடன் ஜொலிக்கிறது..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தொலைத்துவிடப் போகிறாரே என்ற பயத்திலேயே படித்தேன். நல்ல வேளை பிள்ளையார் காப்பாற்றி விட்டார். சூக்ஷ்மம் தெரிந்த பெரியவர்.வல்லானுக்கு வல்லான் இந்த வையகத்தில் உண்டு என்று காட்டிவிட்டார். மூக்குத்தி பத்திரம்.ஐயா.

    பதிலளிநீக்கு
  3. பின்தொடர்ந்த காரணம் இதுதானோ...? "இந்தக்காலப் பயலுகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை" என்பது உண்மை தான்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஊக்கம் அளிக்கும் செயல்... போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள் ஐயா... தொடர்கிறேன் மூக்குத்திசிறுகதையை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பார்கள்.
    அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. அன்றாடம் நாம் பார்க்கின்ற சமூக மற்றும் பொருளாதார அவல நிலையைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் ....என்ன தான் காலம் மாறி இருந்தாலும் பாதுகாப்பதில் பெருசுகளை மிஞ்ச முடியாது என்பது எவ்வளவு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..40 ஆண்டுகளில் 100 மடங்கு தங்கம் விலை ஏறி இருக்கும் பொருளாதாரத்தின் அவலமும் ஏதேனும் வாங்கியே தீருவது என்று சதா சர்வ காலமும் பெருகி வரும் சமூகமும் கூட்டத்துக்கேற்ற படி தொடர்ந்து வாங்கும் திறன் மாறி வருவதன் உண்மை நிலைமையும் காற்றைப்போல் பறந்து விடும் பொருட்களை வாங்கி அணிய விரும்பும் மக்களின் விருப்பங்களின் மாற்றமும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன...வியாபாரிகளின் எப்படியாவது லாபம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்ற நடைமுறை சிந்தனையும் அந்தக் கடையில் தொட்டதற்கெல்லாம் கூட்டம், 5 மாடி கட்டடமும் பகட்டும் உயர்ந்தாலும் வந்தவரை உபசரித்து இதமாக விசாரித்து காண்பித்த பானை நீரின் ஈரத்தை மக்களின் மனதில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது... எப்படியும் ஏமாற்றுவது என்று அலையும் பயலுவளையும் நமக்குப் படம் பிடித்துக்காட்டி இருப்பது சிறப்புதான்...மிக அருமையான கதை,...ஒரு குறும்படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ananthasayanam T June 7, 2014 at 2:58 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //அன்றாடம் நாம் பார்க்கின்ற சமூக மற்றும் பொருளாதார அவல நிலையைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் ....என்ன தான் காலம் மாறி இருந்தாலும் பாதுகாப்பதில் பெருசுகளை மிஞ்ச முடியாது என்பது எவ்வளவு அழகாக வெளிப்பட்டிருக்கிறது..40 ஆண்டுகளில் 100 மடங்கு தங்கம் விலை ஏறி இருக்கும் பொருளாதாரத்தின் அவலமும் ஏதேனும் வாங்கியே தீருவது என்று சதா சர்வ காலமும் பெருகி வரும் சமூகமும் கூட்டத்துக்கேற்ற படி தொடர்ந்து வாங்கும் திறன் மாறி வருவதன் உண்மை நிலைமையும் காற்றைப்போல் பறந்து விடும் பொருட்களை வாங்கி அணிய விரும்பும் மக்களின் விருப்பங்களின் மாற்றமும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன...வியாபாரிகளின் எப்படியாவது லாபம் பார்ப்பது ஒன்றே குறிக்கோள் என்ற நடைமுறை சிந்தனையும் அந்தக் கடையில் தொட்டதற்கெல்லாம் கூட்டம், 5 மாடி கட்டடமும் பகட்டும் உயர்ந்தாலும் வந்தவரை உபசரித்து இதமாக விசாரித்து காண்பித்த பானை நீரின் ஈரத்தை மக்களின் மனதில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பது தெரிகிறது... எப்படியும் ஏமாற்றுவது என்று அலையும் பயலுவளையும் நமக்குப் படம் பிடித்துக்காட்டி இருப்பது சிறப்புதான்...மிக அருமையான கதை,...ஒரு குறும்படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது...வாழ்த்துக்கள்...//

      பின்னூட்டமா அல்லது விமர்சனமா என சந்தேகம் ஏற்பட்டு நான் மிகவும் அசந்து போனேன்.

      முழுக்கதையையும் ஊன்றிப்படித்துவிட்டு, அழகழகாக பாய்ண்ட் பாய்ண்ட் ஆக முக்கியமானவற்றை சுருக்கிக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

      இந்தத்தங்களின் பாயிண்ட்களை அப்படியே எடுத்துக்கொண்டு சற்றே விஸ்தரித்து எழுதி யாரோ விமர்சனப்போட்டியில் பரிசு வாங்கப்போவதும் நிச்சயம்.

      போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு தாங்கள் டிப்ஸ் கொடுத்து உதவியுள்ளீர்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், குறும்படம் பார்த்தது போன்ற திருப்திக்கும், மதிப்புமிக்க வாழ்த்துகளுக்கும் அடியேனின் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள்.

      என்றும் பிரியமுள்ள தங்கள் VGK

      நீக்கு
    2. படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...அருமையான படைப்புகள்..பொருள் கொண்டதாகவும் உள்ளார்ந்த நகைச்சுவை சேர்ந்ததாகவும் உள்ளன..நான் இத்தனை காலம் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது..தொடர முயற்சி செய்கிறேன்...விமர்சிக்கும் அளவுக்கு விஷயம் தெரியாவிட்டாலும் படித்ததற்கு ஏதாவது நல்லதாக எழுத வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது...விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை...தங்கள் படைப்புகளை படிப்பதே ஒரு பரிசு என்று தான் எண்ணத் தோன்றுகிறது...உங்களிடம் நான் கொள்ளக்கூடிய ஒரு உரிமையில் ஏதாவது எழுதுகிறேன்...அவ்வளவே..பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகிறேன் ..

      நீக்கு
    3. Ananthasayanam T June 7, 2014 at 9:21 PM

      1 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir

      வாங்கோ, ஸார். வணக்கம். தங்களின் மீண்டும் வருகை என்னை அப்படியே சொக்க வைக்கிறது.

      தாங்கள் ஒருவித அப்பாவி முகத்துடன், ஒன்றுமே தெரியாத பச்சைக்குழந்தைபோல [நம் அநிருத் போல என்றும் சொல்லலாம்] முகத்தை வைத்துக்கொண்டு, கண்களைச்சுழட்டி, கழுத்தை சாய்த்துக்கொண்டு நேரில் பேசுவதுபோல கற்பனை செய்து கொண்டே படித்து மகிழ்ந்தேன். ;)))))

      //படிப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

      ஆஹா ! அடிக்கும் வெயிலுக்கு ஜில்லென்று ஓர் ஐஸ் கட்டியை என் தலையில் குறிபார்த்து வைத்து விட்டீர்கள்.

      //.அருமையான படைப்புகள்..பொருள் கொண்டதாகவும் உள்ளார்ந்த நகைச்சுவை சேர்ந்ததாகவும் உள்ளன..//

      அடடா, இதைக்கேட்க அடியேன் தன்யனானேன்.

      //நான் இத்தனை காலம் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது..//

      நீங்கள் படித்துள்ளதே எக்கச்சக்கம். எதேஷ்டம். தங்கள் படிப்புக்கும் அனுபவத்திற்கும் வெளிநாட்டுக்குப் போயிருந்தால் கோடிக்கணக்கில் அல்லவா மாதச்சம்பளம் கிடைத்திருக்கும் ! [அதுவும் வருமான வரியேதும் இல்லாமல்] தாய் நாட்டுப்பற்றல்லவா தங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ;)

      //தொடர முயற்சி செய்கிறேன்...//

      மிக்க மகிழ்ச்சி.

      >>>>>

      நீக்கு
    4. 2 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir

      //விமர்சிக்கும் அளவுக்கு விஷயம் தெரியாவிட்டாலும் படித்ததற்கு ஏதாவது நல்லதாக எழுத வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது...விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் உயரவில்லை...//

      தாங்களே விஷயம் தெரியாதவர் + இன்னும் உயரவில்லை என்று சொன்னால் பிறகு நாங்களெல்லாம் எங்களை என்னவென்று சொல்லிக்கொள்வது ?

      இந்த சிறுகதை விமர்சனப்போட்டி ஆரம்பிக்கும் முன்பெல்லாம் என் வலைத்தளத்துப் பக்கம், ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் கருத்துக்கள் எனக்குக் கிடைத்து வந்தன. இப்போது போட்டியில் கலந்துகொள்பவர்கள் யாரும் இங்கு வந்து கருத்துச்சொல்வது இல்லை. அப்படியே வருகை தந்தாலும் ஓரிரு வரிகளில் [தந்தி போல வாசகங்கள்] கருத்துச்சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள்.

      முன்பெல்லாம் கருத்தளிக்கும் 100+ நபர்களுக்கும் தனித்தனியே என் பாணியில் நான் பதிலும் கொடுப்பது உண்டு. அத்தகைய வித்யாசமான பதில்களை எதிர்பார்த்தே பலரும் கருத்தளிக்க வருவதும் உண்டு.

      நானே போட்டி நடத்துபவனாகப் போய்விட்டதால் இப்போது யாருக்கும் நான் பதில் அளிப்பதே இல்லை.

      என் இதயக்கனியான தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாலும், தாங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாதவர் என்ற தைர்யத்தாலும் தங்களுக்கு மட்டும் பதில் அளித்து வருகிறேன்.

      அப்போதெல்லாம் [2012 + 2013] என் பதில்களையும் சேர்த்து Total No. of Comments 200 to 250 போனதும் உண்டு.

      உதாரணமாக ஒருசில இணைப்புகள் இதோ தங்களின் மேலான பார்வைக்காக:

      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
      269 Comments
      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
      211 Comments
      http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
      211 Comments
      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html
      164 Comments

      >>>>>

      நீக்கு
    5. 3 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir

      //தங்கள் படைப்புகளை படிப்பதே ஒரு பரிசு என்று தான் எண்ணத் தோன்றுகிறது...//

      ஆஹா, இது எல்லாவற்றையும்விட ‘பிரும்மாஸ்திரம்’ போலல்லவா உள்ளது ! ;)

      //உங்களிடம் நான் கொள்ளக்கூடிய ஒரு உரிமையில் ஏதாவது எழுதுகிறேன்...அவ்வளவே..//

      தங்களுக்கு இல்லாத உரிமையா ? தாங்கள் என் மனதில் எப்போதுமே மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர். என் பிள்ளைகளிடமெல்லாம், அவ்வப்போது தங்களைத்தான் வாழ்க்கையில் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொல்வதும் உண்டு.

      >>>>>

      நீக்கு
    6. 4 of 4 VGK to Mr. T. Ananthasayanam Sir

      //பிழை இருப்பின் பொறுத்து அருள வேண்டுகிறேன் ..//

      இந்தத்தன்னடக்கம் தான் இன்று தங்களை மிகப்பெரிய பொறுப்பினை வகிக்கும் பதவிக்குக் கொண்டு வந்துள்ளது.

      In fact, தங்களின் கருத்துக்களில், தமிழ் எழுத்துக்களில், பிழை ஏதும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். எழுத்துப்பிழைகூட இல்லாமல் சுத்தமாக பளிச்சென்று [தங்களைப்போலவே] உள்ளது.

      பத்து தலைமுறையாக வேதம் படித்த பரம்பரையில் வந்தவன் நான், [எனக்கு வேத சாஸ்திரங்கள் எதுவும் சுத்தமாக ஒன்றுமே தெரியாது என்பது வேறு விஷயம்] . ஆனால் நான் சொல்வதும் என் முன்னோர்களின் தவப்பயனால் வேதவாக்காக பலிப்பது உண்டு.

      அறிவும், ஆற்றலும், தனித்திறமைகளும், பெளவ்யமும், எப்போதும் சிரித்த முகமும், சீரிய சிந்தனைகளும் இயற்கையாகவே கொண்டுள்ள தாங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நம் BHEL மஹாரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் DIRECTOR/ FINANCE ஆகவோ EVEN CHAIRMAN & MANAGING DIRECTOR OF BHEL ஆகவோ கூட TOP MOST POSITION னுக்கு வரப்போகிறீர்கள் என்பது நிச்சயம்.

      அந்தக் காட்சியினை கண்டு களிக்க நான் இருப்பது சந்தேகமே. ஆனால் இந்த என் பதிவு நிச்சயமாக இருக்கும். இதன் LINK ஐ சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நம் HEAD OFFICE டெல்லியிலிருந்து 10 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்று அன்று தங்களுக்கே புரியும். அட்வான்ஸ் நல் வாழ்த்துகள்.

      என்றும் பிரியமுள்ள VGK

      நீக்கு
  7. தங்களுடைய முயற்சியின் மூலமாக பல எழுத்தாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பெரிசுகளெல்லாம் உஷார். சிறிசுகள் ஜாக்கிரதை. மூக்குத்தி என்ன, எது வாங்கப்போனாலும் இதே அலைச்சல். வீடு திரும்புவதற்குள்
    அநேகப் பிரச்சினை. நல்ல உரைகல். அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. நல்லவேளையாக மூக்குத்தியைக் காப்பாற்றிக் கொண்டாரே. நகைக்கடையிலேயே சந்தேகம் வந்தது. :)

    பதிலளிநீக்கு
  10. உங்கள் படைப்புக்கள் அனைத்தும் நல்ல படிப்பினை சார். உங்கள் முயற்சி உச்சத்தைத் தொடுகின்றது. அத்துடன் நல்ல விமர்சகர்களையும் உருவாக்கி வருகின்றீர்கள். ஒரு சிறிய நகை வாங்குவதென்றாலும் எவ்வளவு அல்லாட வேண்டி இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  11. என்ன இருந்தாலும் பெரிசு பெரிசுதான்.

    பதிலளிநீக்கு
  12. உங்க கதைகள் மலமாகவும் விமரிசன போட்டி நடத்துவதின் மூலமும் பல திறமையான எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  13. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு கதைக்கு மட்டும் நான் விமர்சனம் எழுதி இருந்தேன்.

    ஆனா இதுக்கும் ‘வடை போச்சே’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 16, 2015 at 8:16 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு கதைக்கு மட்டும் நான் விமர்சனம் எழுதி இருந்தேன்.

      ஆனா இதுக்கும் ‘வடை போச்சே’//

      அடடா, வடை போகாமல் மட்டும் இருந்திருந்தால், அதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையில், எங்க ஜெயா ஒரு வைர மூக்குத்தியே வாங்கிப் போட்டுக் கொண்டிருப்பா, தன் அழகிய மூக்கினில்.

      மிகவும் வருத்தமாகவேதான் உள்ளது எனக்கும். :(

      ஆனால் ஜெயா அன்று எழுதி அனுப்பிய விமர்சனம் மட்டும் என்னிடம் பொக்கிஷமாகப் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது. :)

      -=-=-=-=-

      இதோ அந்தத்தங்கள் விமர்சனத்தின் ஆரம்ப வரிகள்:

      ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ – இது பழமொழி.
      அந்த மாதிரி இந்த மூக்குத்தி இருக்கே அது பெண்கள் அணியும் ஆபரணங்களிலேயே ரொம்ப, ரொம்ப சின்னது. இருந்தாலும் ரொம்ப பெருமை வாய்ந்தது.

      -=-=-=-=-
      அன்புடன் கோபு அண்ணா

      நீக்கு
  14. நக கடகளுல இன்னாமாதிரி நகைக இருக்குமினுட்டு வலாவாரியா சொல்லிபோட்டீக. கடயோட நடமுறைகளும் அளகா சொல்லினிங்க. அந்த பெரியவரு வெவரமான ஆளுதா. அந்த பயபுள்ளதா திருடனுக்கு தேளு கொட்டினாப்புல .ஆகிட்டான்.

    பதிலளிநீக்கு
  15. நகைக்கடை நடைமுறைகள் கடை அமைப்பு எந்த இடத்தில் எந்த நகையை பார்வைக்கு வைத்திருப்பார்கள் என்ற் அனைத்து விபரங்களும் சொல்லி இருக்கீங்க மூக்குத்தி வாங்க வீட்டு அம்மாவையும் கூட்டிண்டு போயிருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  16. ஜித்தனுக்கு ஜித்தன்...ஜீவிதத்தில் உண்டு. அழகுப் படங்கள். அருமையான காட்சியமைப்பு..

    பதிலளிநீக்கு
  17. அந்த இளைஞன் தொலைத்த நகை அவனுக்கு மீண்டும் கிடைக்க வேண்டிக் கொண்டு ஒரு சதிர் தேங்காய் அடிக்கிறார். தொட்டியை நோக்கும்போது தான் அவரிடம் இருந்து திருடப்பட்ட மூக்குத்தி டப்பா உடைபட்டுக் கிடப்பதைக் காண்கிறார். இந்த நேரத்தில்தான் அந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைக்காரன் மீது அவருக்கு சந்தேகம் வருகிறது. “You too Brutus” என்ற ஆங்கில வரிகள் நமக்குள்ளும் வந்து போகின்றது.

    அந்த நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத்துவங்க, மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான முதியவரை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! என முடித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், ஏழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    44 + 37 + 32 + 37 + 42 + 37 + 90 = 319

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/05/1-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/2-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/3-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/4-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/5-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/6-of-7.html

    http://gopu1949.blogspot.in/2011/05/7-of-7.html

    பதிலளிநீக்கு
  19. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  20. WHATS APP COMMENTS RECEIVED FROM Mr. K.GANESAN, RETIRED SENIOR MANAGER OF BHEL ON 30.01.2020

    -=-=-=-=-

    Dear VGK ji ,

    மூக்குத்தி கதை நீங்கள் கொடுத்த (26/01/2020) புத்தகத்தில் 3 ஆவது கதை. அன்றே படித்துவிட்டேன். எதார்த்தமான கதை. தொலைத்துவிடுவார் என நினைத்தேன். அருமை .👏👏👌👌

    -=-=-=-=-

    பதிலளிநீக்கு
  21. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 13.06.2021

    கஷ்டப்பட்டு வாங்கிய மூக்குத்தி களவு போய்விடக்கூடாது என்ற பதைபதைப்பு தொடர்ந்து கொண்டே வந்தது, அப்பாடா ஒரு வழியாக பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தீர்கள். மூக்குகுத்தாத ஆணாக இருந்தாலும் புது மூக்குத்தி அணிந்து கொண்ட மகிழ்ச்சி.

    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    பதிலளிநீக்கு