என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஜா தி ப் பூ




ஜா தி ப் பூ

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு. 

பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்.

பின்புறம் ஒன்றும் முன்புறம் ஒன்றுமாக போடப்பட்ட இரண்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி.  பளிச்சென்ற தோற்றம். பார்த்தால் படித்த பெண்ணாகத் தோன்றுகிறாள். பூ வியாபரத்திற்குப் புதியவளோ! என்றும் புரியாத நிலை.

அந்தக்கோயில் வாசலில் பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் இந்தப் புதுப் பெண்ணின் வருகையால் கடந்த ஒரு வாரமாகப் படுத்துப்போனது.

இந்தப்பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அந்தப்பெண்ணை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பாழும் நெற்றியில் புதிதாகப் பட்டையிட்டுக்கொண்டு, அவளை பக்திப்பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.

இதுபோல எவ்வளவு பேர்கள் அவளிடம் வந்தாலும், வழியோ வழியென்று வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால், ஜொள்ளர்களை சமாளித்து, பூ வியாபாரத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், தன் கூடை முழுவதும் காலிசெய்துவிட்டு, கை நிறைய காசுகளுடன், கிழவியைப்பார்த்து கண் சிமிட்டியவாறே “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம்? என்பது போல, சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.

”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்.

ஆனாலும் அந்தப்பெண் போன பிறகே பாட்டிக்கு தன் பூ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பெண்ணைப் பற்றி பலரும் இந்தப்பாட்டியிடம் விசாரித்தார்கள். அந்தப்பெண் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊரு? இங்கே எங்கே தங்கியிருக்கிறாள்? என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஓர் ஆவலும் ஆர்வமும்.

”அந்தப்பாப்பா யாரோ எனக்குத் தெரியாதுப்பா; மொத்தத்தில் அது என் பிழைப்பைக் கெடுக்கத்தான் இங்கு வந்து போயிட்டு இருக்கு; இனிமேல் அது இங்கே செவ்வாய் வெள்ளி மட்டும் தான் வருமாம், இன்னிக்கு என்னிடம் சொல்லிட்டுப்போச்சு” என்று கிழவி தன்னிடம் விசாரித்த பலரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த ஒரு இளைஞன் மட்டும் கிழவியின் காதருகே போய் “பாட்டி, அந்தப்பொண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்ன்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்றான் சற்றே தயங்கியவாறு. 

இதைச்சொன்ன அந்த இளைஞனை, அந்தப்பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சின்ன வயதிலிருந்தே பழக்கம் உண்டு. செல்லமாக அவனை பேராண்டி என்று தான் கூப்பிடுவாள்.

தினமும் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன்.

ஒரு நாள், உடல்நலமின்றி இருந்து, பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக்கிழவியை, பாசத்தோடு குடை பிடித்து, அவளின் பூக்கூடையுடன், அவளின் குடிசை வீடு வரை கூடவே போய், அவளை அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன்.  

இந்தத்தள்ளாத வயதிலும், பூத்தொடுத்து பூ வியாபாரம் செய்து உழைத்து சாப்பிடும் அந்தக் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. மேலும் கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப்போகும் முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசிவிட்டுத் தான் போவான்.

சிறு வயதில் ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

“இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ,  இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” என ஒவ்வொன்றையும் அவனுக்கு அந்தப்பாட்டி பொறுமையாகச்சொல்லிப் புரிய வைத்திருக்கிறாள்.

”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.

தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு, உள்ளூரிலேயே பேங்க் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்துள்ளது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் அந்தப்பூக்காரப் பாட்டியிடம் பகிர்ந்துகொண்டு, அவள் அவனை மனதார வாழ்த்துவதில் பேரின்பம் கொண்டு வருபவன் அவன்.

பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும், அந்த இளம் பூக்காரப்பெண்ணை, பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை.

வழக்கம்போல் அந்தப்பூக்கார கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும் படியாக வேண்டினான். அப்போது கோயில் மணி அடித்தது நல்லதொரு சகுனமாகத் தோன்றியது அந்தப்பாட்டிக்கும், அவளின் பேராண்டிக்கும்.

உயர்நிலைப் படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு தன் வீட்டுக்கு வந்துள்ள தன் பேத்தி, தான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், தனக்குப் போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதாகவும், நான் உன் பேத்தி தான் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளதை அந்தப்பூக்காரக் கிழவி தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

விளையாட்டாக பூ வியாபாரம் செய்ய இங்கு வந்து போன தன் சொந்தப்பேத்திக்கு, அதுவே பூச்சூடி மணமகளாக மாறும் பாக்யத்தைத் தந்துள்ளதிலும், அதுவும் இந்தத் தனக்கு மிகவும் பழக்கமான, ரொம்ப நல்ல பையன் தன் பேத்தியை தன் மனசார விரும்புவதையும் நினைத்துப் பூரித்துப்போனாள். 

எல்லாம் அந்தக் கோயில் அம்பாளின் அனுக்கிரஹம் தான் என்று வியந்து, சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள் அந்தப் பூக்காரக்கிழவி. 

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது. 
  








-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


இந்தச் சிறுகதை ‘வல்லமை’ மின் இதழில் 
30.09.2011 அன்று வெளியிடப்பட்டது
http://www.vallamai.com/archives/8633/

புதன், 28 செப்டம்பர், 2011

ச கு ன ம் [சிறுகதை - இறுதிப்பகுதி 2 of 2]



ச கு ன ம் 

சிறுகதை [பகுதி 2 of  2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:

இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.

ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

=========================

ஆபீஸுக்கு வந்த எனக்கு சிறிது நேரத்திலேயே, என் மனைவியிடமிருந்து டெலிபோனில் அவசர அழைப்பு வந்தது. 

“காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, படித்துறையில் படியேறி வந்த ஸ்ரீமதி பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த அடி பட்டுவிட்டதாம். பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்களாம். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லி விட்டாராம்.  சொந்தபந்தம் எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். மூத்த பிள்ளையும், நாட்டுப்பெண்ணும் (மருமகளும்), பேரன் பேத்தியும் பம்பாயிலிருந்து கிளம்பி விட்டார்களாம்; 


எது எப்படியிருந்தாலும் நானும் என் அம்மாவும் ஸ்ரீரங்கம் போய் வைகுண்ட ஏகாதசியான இன்று பெருமாளை ஸேவித்து விட்டு வந்துவிடுகிறோம்” என்று தகவல் சொல்லிவிட்டு, தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.


ஆபீஸ் முடிந்து மாலை நான் வீட்டுக்கு வந்தேன். உள்ளே நுழையும் போதே சமையலறையிலிருந்து கும்முனு ஏதோ ஒரு புதிய வாசனை. என் மாமியார் வந்தாலே இப்படித்தான். சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது புதுசுபுதுசாக திண்பண்டங்கள் செய்து அசத்தி விடுவார்கள். 


திரட்டுப்பால் செய்து கொண்டிருப்பது போலத்தெரிய வந்தது. அந்த திரட்டுப்பாலை மாப்பிள்ளைக்கு மாமியார், ஒரு பெரிய வெள்ளி டவரா நிறைய வெள்ளி ஸ்பூன் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, சுவையாக நானும் ருசித்தேன். என் அருகே குடிநீர் கொண்டு வந்து வைத்த மனைவியிடம் “நீயா செய்தாய்? சூப்பரா இருக்கு!” என்று சும்மாவாவது கேட்டு வைத்தேன்.


அவள் வழக்கம் போலவே, ”உங்க மாமியார் தான் ஆசை ஆசையாக உங்களுக்குப் பிடிக்குமேன்னு செய்திருக்கிறார்கள்; எனக்கு இதெல்லாம் பொறுமையாக, பதமா செய்ய வராதுங்க” என்று ஒப்புக்கொண்டாள்.


அம்மா சமையலில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தால், அவர்களின் பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள். இது பல இடங்களில் நான் சோதித்துக் கண்டு பிடித்த உண்மை. 


தன் மகள் நன்றாக படித்து முன்னேறட்டும் என்று மிகவும் செல்லமாக வளர்த்து, சமையல் அறைப்பக்கமே அவர்களை வரவிட மாட்டார்கள். சமையல் சம்பந்தமாக எதுவும் சொல்லித்தரவும் மாட்டார்கள். தானே ஒண்டியாக சமாளித்துக்கொள்வார்கள். இது போன்று செல்லமாகவே வளர்ந்துவிட்ட பெண்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் ஆகிவிடும். புகுந்த வீட்டிற்குப்போகும் அந்தப் புதுப்பெண்ணுக்கு தினப்படி சமையல் செய்யப் பழகுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.  



=================================================
[திரட்டுப்பால் பற்றிய ஒரு சிறு விளக்கம்:  


நல்ல கெட்டியான தரமான பாலை நன்கு சுண்டக்காய்ச்சி அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து, செய்யப்படும் ஒரு இனிப்பான தின்பண்டம். முறைப்படி பக்கத்திலேயே இருந்து, நல்ல பதமாகச் செய்தால் சுருள் சுருளாக, திரித்திரியாக ஜோராக அமையும். கையில் ஒட்டாதவாறு,சுருண்டு பாகுபதமாக தித்திப்பாகவும், பால் வாசனையாகவும் மிகவும் சுவையாக இருக்கும். பக்குவமாக பதமாகச் செய்யாவிட்டால் வெங்காயச்சட்னி போல் ஆகி வாயில் ஆங்காங்கே ஈஷிக்கொள்ளும். அது ருசிப்படாது.


சாகும் தருவாயில் இருக்கும் மிகவும் வயதான பெரியவர்களுக்கு, வாய்க்கு ருசியாக இதுபோல திரட்டுப்பால் செய்து சாப்பிடக் கொடுப்பது அந்தக்கால வழக்கம். 


இப்போதும் கூட திருமணங்களில் பிள்ளை வீட்டார் முதன் முதலாக திருமண மண்டபத்திற்குள் நுழையும் போது மாலையிட்டு, பன்னீர் தெளித்து சந்தனம், சர்க்கரை, கல்கண்டு தட்டை நீட்டி வரவேற்றவுடன், முதல் வேலையாக, மாப்பிள்ளையைப் பெற்ற தாயார் கையில், பெண்ணைப் பெற்ற தாயார், முதன்முதலில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய கொண்டுவந்து கொடுப்பது, இந்த திரட்டுப்பால் என்ற ஸ்வீட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது] 
============================================  

அன்று இரவே ஒரு சம்புடத்தில் திரட்டுப்பாலை கணிசமான அளவு எடுத்துக்கொண்டு, படுத்த படுக்கையாக இருக்கும் ஸ்ரீமதிப்பாட்டியைப் பார்க்க முதல் மாடிக்கு நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். இதுவரை எப்போதுமே என்னைப்பார்த்ததும் சிரித்த முகத்துடன் “வாடா, சிவராமா” என்று வாய் நிறைய வரவேற்று, கலகலப்பாகப் பேசி வந்து கொண்டிருந்த பாட்டியைப் படுத்த படுக்கையாய்க் கண்டதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 


கொஞ்சமாகத் திரட்டுப்பாலை எடுத்து நானே பாட்டியின் வாயினுள் ஊட்டி விட்டேன். அவர்கள் லேசாக அதை சுவைத்து தொண்டைக்குள் விழுங்கியது போலத் தோன்றியது எனக்கு. எப்போதும் என்னைப்பார்த்தால் “சிவராமா! நீ மஹராஜனா நீண்ட நாள் செளக்யமா, சந்தோஷமா, இருக்கணும்டா” என்று சொல்லி ஆசீர்வதிப்பார்கள். நான் கொடுத்த சிறிதளவு திரட்டுப்பாலை அவர்கள் ஏற்றுக்கொண்டு சுவைத்தது, இப்போது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.


என் மாமியார், சம்புடத்தில் இருந்த திரட்டுப்பாலை அங்கே கூடியிருந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் விநியோகித்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம். ”எப்படி மாமி இவ்வளவு ருசியா, கையிலே ஒட்டாதபடி சுருள்சுருளாகப் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டு அதற்கான செய்முறையைச் சொல்லச்சொல்லி மனதில் எழுதிக்கொண்டனர். 


அந்தப் பாட்டியின் இரண்டாவது மகன் நேராக எங்கள் மாமியாரிடம் வந்தார். நாங்கள் திரட்டுப்பால் கொண்டு சென்ற சம்புடத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார். திரட்டுப்பால் சரிபாதி விநியோகிக்கப்பட்டு, மீதி பாதி அப்படியே அந்த சம்புடத்தில் இருந்தது.  அதை வாங்கிக்கொண்டவர், நேராக சமையல் அறைப் பக்கம் போனார். அப்படியே அதை முழுவதும் வழித்து முழுங்கி சுத்தமாக ஃபினிஷ் செய்துவிட்டு, அந்தப்பாத்திரத்தையும் கையோடு தேய்த்து அலம்பிக் கொண்டு வந்து எங்களிடம் ஒப்படைக்கும் போது ஒரு சிறிய ஏப்பமும் விட்டார்.


“டாக்டர் என்ன சொன்னார்?” ஒரு மரியாதைக்காக நான் கேட்டு வைத்தேன்.


“தலையில் அடி பலமாக விழுந்துள்ளது; ரொம்ப வயசாகி விட்டதாலே, பிழைப்பது ரொம்பவும் சிரமம். எல்லோருக்கும் தகவல் கொடுத்திடுங்கோன்னு சொன்னார்; அண்ணா மன்னி குழந்தைகள் எல்லோரும் வந்துண்டே இருக்கா; என்ன செய்யறது, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்”, என்று சொல்லிக்கொண்டே திரட்டுப்பாலை முழுவதுமாக முழுங்கிய மகிழ்ச்சியிலும், மிகவும் கஷ்டப்பட்டு சற்றே அழுகையை வரவழைக்க முயற்சித்தார்.


“கவலைப்படாதீங்கோ; தங்கள் அம்மா எப்படியும் பிழைச்சுடுவான்னு எனக்குத் தோணுது, ராத்திரி வேளையிலே ஏதாவது உதவி தேவைன்னா, தயங்காம என்னை வந்து கூப்பிடுங்கோ” என்று ஆறுதல் சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பினோம்.


ராத்திரி பதினோரு மணி இருக்கும். எங்கள் பில்டிங்கே அதிருவது போல ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.  உடனே நான் புறப்பட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். 


கங்கை நீர் அடைத்து வைத்த சொம்பை உடைத்து பாட்டியின் வாயில் கொஞ்சம் ஊற்றி, உடம்பு பூராவும் தெளித்தேன். சுவற்றின் மூலையில் தீபம் ஒன்று ஏற்றி வைக்கச்சொன்னேன்.  பாட்டியின் தலைப்பக்கம் தெற்கே இருக்குமாறு மாற்றிப்போட்டேன். கைக் கட்டைவிரல்கள் இரண்டையும், கால் கட்டைவிரல்கள் இரண்டையும் சேர்த்து சிறிய துணி ஒன்றினால் இறுக்கமாகக் கட்டிவிட்டேன்.


தூரத்து சொந்தமான ஸ்ரீமதிப்பாட்டியின் இறுதிச்சடங்குக்கு, வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து,  என்னால் முடிந்த சரீர ஒத்தாசைகளும் செய்தேன்.


மறுநாள் காலை மூத்தபிள்ளை, நாட்டுப்பெண் (மருமகள்), நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணத்தை எதிர்கொண்டு நிற்கும் பேத்தி,  பள்ளியில் படித்து வரும் பேரன்,  அனைவரும் வந்திறங்கி, பாட்டியின் காரியங்கள் யாவும் ஜாம் ஜாம் என்று நடைபெறத்தொடங்கின. 


அக்கம்பக்க வீடுகளில் குடியிருப்போர், உற்றார், உறவினர் என நிறைய கும்பல் கூடி விட்டது. இறந்தவர் பல்லாண்டுகள் நன்றாக வாழ்ந்து, வயது எண்பதையும் தாண்டியிருப்பதால் இது ஒரு ‘கல்யாணச் சாவு’ தான் என்று கலகலப்பாக எல்லோரும் பேசிக்கொண்டனர்.    


’ஆஹா! ஏகாதசி மரணம், துவாதசி தகனம்’ கிடைத்துள்ளது இந்தப் புண்யவதிக்கு என்றனர் ஒருசிலர்.


‘சாதாரண ஏகாதசியா என்ன! வைகுண்ட ஏகாதசியாக்கும்!! என்றனர் மேலும் சிலர்.


எனக்கும் அவர்கள் கூறுவது மிகவும் நியாயமாகவே பட்டது.


‘சாவிலும் இதுபோல, ஒரு நல்ல சாவு, டக்குணு கிடைக்கணும்பா’ என்றனர், அடுத்தடுத்து அதை எதிர்நோக்கிக் க்யூவில் காத்திருக்கும், பெரிசுகளில்  சிலர்.


காவிரிக்கரையில் உள்ள ஓயாமாரியில் பாட்டியை நல்லடக்கம் செய்து விட்டு, எல்லோருமாக பாட்டிக்காக காவிரியில் தலை முழுகிவிட்டு, வீடு திரும்பினோம்.


வீட்டு வாசலிலேயே அனைவரும் கால் அலம்பிய பிறகு, தலைவாழை இலை போட்டு, பாயஸம், பச்சடி, முப்பருப்பு வகைகளுடன் அனைவருக்கும் வயிறார விருந்து சாப்பாடு போடப்பட்டது, எங்கள் வீட்டிலேயே. 


காவிரிக் கரையிலேயே அனைவருக்கும் சாப்பாட்டுக்கு அழைப்பு கொடுத்து விட்டோம். இறந்தவர் நமக்கு அளிக்கும் பிரஸாதமாக ஏற்று, சொந்த பந்தங்கள் அனைவரும் இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வது தான் வழக்கம்.  சமையல் செய்த புண்ணியத்தை என் மாமியாரும், அனைவருக்கும் பரிமாறிய புண்ணியத்தை என் மனைவியும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். 


சாப்பாடு முடிந்ததும், கை அலம்பிய கையோடு, வந்தவர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டனர். 


[இறந்தவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றால், புறப்படும்போது, ’போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக்கூடாது. அவ்வாறு சொன்னால் திரும்ப இதுபோல மற்றொரு துக்கத்திற்கே, திரும்பி வருகிறேன் என்று சொல்லுவது போல ஆகும்; அதுபோலவே ஏதாவது நேர்ந்துவிடக்கூடும் என்ற காரணமாகத்தான் ’போய் வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்று வைத்துள்ளனர்.]


சாப்பாடு முடிந்தபின், பாட்டியின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டிலேயே தனியாக இருக்கும் ரூம் ஒன்றில், மேற்கொண்டு நடைபெற வேண்டிய பதிமூன்று நாட்கள் காரியங்களைப்பற்றி தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.     


அந்த ரூமுக்கு வெளியே நான் சற்று ஓய்வாகப் படுத்திருந்ததால் அவர்கள் பேச்சு என் காதிலும் அரைகுறையாக விழுந்து கொண்டிருந்தது.


”நம் அம்மா நல்லா, திடமாகத்தானே இருந்தார்கள்! தன் பேத்தி கல்யாணத்தைக்கூட பார்க்காமல், இப்படித் திடீரென்று போய்ச் சேர்ந்துடுவாள்ன்னு, நான் எதிர்பார்க்கவே இல்லை” மூத்தவர் இளையவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  


”நேத்திக்கு காலையிலே தூங்கியெழுந்து வழக்கம்போல காவிரிக்குக் குளிக்கப் போகும்போது நல்லாத்தானே இருந்தாங்க!  விடியற்காலம் ஐந்து மணியிருக்கும். இந்த ஒத்தப்பிராமணன் சிவராமன் தான் படியேறி எதிரே வந்தான். அவன் முகத்திலே தான் முதன் முதலாக முழிச்சாங்க; 


எனக்கு அப்போதே மனசுக்கு ஒரு மாதிரி கருக்குனு தோணிச்சு. இப்போ என்னைத் தாயில்லாப் பிள்ளையாக ஆக்கிவிட்டு, இப்படி அநியாயமாப் போய்ட்டாங்க” என்று அந்த 50 வயதான தடிப்பிரும்மச்சாரி தன் அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் நன்றாகவே விழுந்தது.  உடனே ஒரு நிமிடம் நான் மிகவும் அதிர்ச்சியானேன்.


நல்லவேளையாக இந்தப்பேச்சு என் மனைவி காதிலோ, என் மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல இதை அவர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சண்டைபோட்டு, மண்டையை உடைத்து, இன்றைக்கே இன்னொரு சாவு இங்கு ஏற்படுமாறு செய்து விடுவார்கள்.


எவ்வளவு வருஷங்கள் ஆனாலும், இந்தத் தடிப்பிரும்மச்சாரி போன்ற ஒரு சில, நன்றிகெட்ட அசட்டு மனிதர்களின் மூட நம்பிக்கையை, நாம் முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.


தன் வயதான தாயாரை காவிரி ஸ்நானத்திற்கு கூட்டிச்சென்றவர், அவர்கள் நல்லபடியாக காவிரிப் படித்துறையில் படியேறி வரும்போது ஜாக்கிரதையாகப் பார்த்து கையைப்பிடித்து கூட்டி வந்திருக்க வேண்டும்.


அதை பொறுப்பாகச் செய்யாமல், அந்தப்பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட, கூடப்போன இவரின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்போது, வீட்டை விட்டு புறப்பட்ட போது நான் எதிரே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதாக என் மீது பழியைப் போடுகிறார்.  


மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், நன்றிகெட்ட ஜன்மங்கள் என்று நினைத்துக்கொண்டேன்.


”எல்லாம் அதுஅது தலைவிதிப்படி நடக்க வேண்டிய நேரத்தில், நடந்து கொண்டே தான் இருக்கும். எம தர்மராஜாவிடமிருந்து யாரும் தப்பவே முடியாது. ஏதோ இந்தக்கிழவி தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொண்டு, கடைசிவரை வைராக்கியமாக இருந்து, டக்குனு மகராஜியாப் போய்ச்சேர்ந்துட்டா. யாருக்கும் கடைசிவரை எந்த சிரமமும் கொடுக்கவில்லை”இற்ந்துபோன பாட்டியின் மூத்த மருமகள், ஒரு மூலையில் ஓரமாக முடங்கிக்கிடந்த வேறொரு காது கேளாத கிழவியிடம், கத்திப் பேசிக்கொண்டிருந்தாள். 


வெய்யிலில் பாட்டி காரியமாக அலைந்துவிட்டு, பலமான விருந்து சாப்பாடும் சாப்பிட்ட எனக்கு கண்ணைச் சொக்கியதால், தூக்கம் வருவது போல இருந்தது.


“சிவராமா! நீ மஹராஜனா நீண்டநாள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா ” என்ற ஸ்ரீமதிப்பாட்டியின் குரல் வைகுண்டத்திலிருந்து ஒலிப்பது போல இருந்தது எனக்கு.




-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-




பின்குறிப்பு


சகுனம் பார்த்து, நல்லது நடக்குமா கெடுதல் நடக்குமா என்று ஓரளவு யூகித்து, அதன்படி நடப்பது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள். நம்பிக்கைகள். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. 


ஆனால் சகுனம் பார்ப்பதாகச் சொல்லி. எந்த விதத்திலாவது பிறர் மனம் புண்படுமாறு நடந்து கொள்வது, மிகமிகத் தவறான செயலாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். 


கணவர் இறந்ததும் மனைவியும் உடன்கட்டை ஏறுவது அல்லது கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏறச்செய்வது என்ற கொடுமைகள், நம் நாட்டிலேயே ஒரு 200 வருஷங்கள் முன்புவரை கூட, நடந்துள்ளதை நாம் சரித்திரத்தில் படித்துள்ளோம். பிறகு இவைகளை தடைசெய்து, சட்டம் இயற்றி விட்டதில் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. 


இந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிந்த பிறகும் கூட, கணவனை இழந்த பெண்களை அலங்கோலப்படுத்தி, தலை முடியை நீக்கி, வெள்ளை ஆடைகள் மட்டும் அணியச்செய்து, பூவோ, நெற்றிப்பொட்டோ வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், காது தோடுகள், மூக்குத்தி, கை வளையல்கள் முதலியன அணியக்கூடாது என்றும், சுப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பல்வேறு தடைகள் செய்து பாடாய் படுத்தி வந்துள்ளனர். 


இது பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்பட்ட கொடுமைகள். மனைவியை இழந்த ஆணுக்கு இது போல எந்த ஒரு கொடுமைகளும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.   


கணவரை இழந்த ஒரு பெண்மணி தன் சொந்த மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் நடக்கும்போது, மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக திருமண மேடையில் அமர்ந்து நடைபெறும் சந்தோஷ வைபவங்களைக் கண்குளிரக் காண முடியாமல் கூசிக்குறுகி நிற்க வேண்டும் என்றால், அவர்களின் மனநிலை எவ்வளவு கஷ்டப்படும் என்று நாம் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


நாளடைவில் இது போன்ற கொடுமைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்து கொண்டு தான் வருகிறது. கணவரை இழந்த பெண்கள் விரும்பினால் இன்று மறுமணம் புரிந்து கொள்ளவும் தடை ஏதும் இல்லாமல் இருந்து வருகிறது.


மக்களின் இத்தகைய மனமாற்றங்கள் சந்தோஷம் தரக்கூடிய, வரவேற்க வேண்டிய நல்லதொரு சமூகப் புரட்சியாகவே மலர்ந்துள்ளது.  


=========================================


எனவே என் அருமை தோழர்களே / தோழிகளே !


காலத்திற்கு தகுந்தாற்போல நாமும் நம்மை மாற்றிக்கொள்வோம். சகுனம் பார்க்கிறேன் என்று சொல்லி, எந்த விதத்திலும் பிறர் மனதை நோகடிக்காமல் இருப்போம்.  பிறர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம். 


==========================================


  






மேலும் ஒரு குட்டியூண்டு கதை:


ஒரு அரசர் அதிகாலையில் எங்கோ புறப்பட்ட போது பூனையொன்று குறுக்கே போனதாம். சகுனம் சரியில்லை என்று நினைத்த அந்த அரசர், தன் பயணத்தை ரத்து செய்து விட்டாராம். 


மேலும் குறுக்கே சென்ற பூனையை பிடித்துப்போய் அடைத்து இன்று முழுவதும் உணவு கொடுக்காமல் வைத்து, மறுநாள் காலை அதைக் கொன்று விட உத்தரவு இட்டாராம்.


இது தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த மகாராணியின் கனவில் அந்தப்பூனை போய் பேசியதாம்:

“எனக்குத்தான் இன்று சகுனம் சரியில்லை போலிருக்கிறது. இன்று முதன்முதலாக இரை தேட நான் புறப்பட்ட போது அரசர் தான் குறுக்கே வந்தார்; அதனால் தானோ என்னவோ எனக்கு இன்று முழுப்பட்டினியும் நாளை மரண தண்டனை கிடைத்துள்ளது; 


எனவே மஹாராணியாரே! நீங்கள் யாரும் இனி, நாளை முதல் அரசர் முகத்தில் முதன் முதலாக விழிக்காதீர்கள்”  என்று எச்சரிக்கை விடுத்ததாம்.  


மேலும் அது சொன்னதாம்: “நான் மட்டும் இன்று குறுக்கே போகாமல் இருந்து, அரசர் வேட்டைக்குச் சென்றிருந்தால், விதிப்படி அவர் பாம்பு கடித்து இறந்திருப்பார்; அதை நான் தான் தடுத்து விட்டேன்” என்றதாம். 


திடுக்கிட்டு எழுந்த ராணி தன்னை விதவையாக்காமல் தடுத்த அந்தப்பூனையை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தாளாம். அத்தோடு மட்டுமல்லாமல் தன் அந்தப்புரத்தில் அந்தப் பூனையும் தன்னுடனேயே படுத்துக்கொள்ள இட வசதி செய்து கொடுத்தாளாம். 


அன்று முதல், தனக்கும் ராணிக்கும் இடையே புதிதாகப் புகுந்து விட்ட இந்தப்பூனையால், அரசர் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய் விட்டதாம். 


-oOoOo-



திங்கள், 26 செப்டம்பர், 2011

ச கு ன ம் [சிறுகதை - பகுதி 1 of 2]


ச கு ன ம் 

சிறுகதை [பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அன்று வைகுண்ட ஏகாதசி. விடியற்காலம் மூன்று மணிக்கே நான் அலாரம் வைத்து எழுந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிக்கும் ஆவலில் வெளியூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கப்போகும் என் மாமியாரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துவர நான் திருச்சி ஜங்ஷனுக்குச் செல்ல வேண்டும். அவர்களை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து என் ஆபீஸுக்குச்செல்ல வேண்டும்.

குளித்து முடித்துப் புறப்படத் தயாரானேன்.

“நாலு மணிக்கு பால் பூத் திறந்துவிடும்; தயவுசெய்து இரண்டு அரை லிட்டர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொடுத்துட்டுப் போயிடுங்கோ; ஜங்ஷனுக்கு போகவர ஆட்டோ பேசிக்கொண்டு விடுங்கோ” புது டிகாக்‌ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை சுடவைத்துக் கலந்த காஃபியை நீட்டியவாறே அன்புக் கட்டளையிட்டாள் என்னவள்.  


காஃபியை என் கையில் கொடுத்தவள்,  வாசலைப்பெருக்கி, தண்ணீர் தெளித்து, சிறிய கோலம் ஒன்றை அவசர அவசரமாகப் போடலானாள். [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும்] 

அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில், காலை ஆறு மணிக்கு மேல்தான் லிஃப்ட் இயக்கப்ப்ட வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. இரண்டாவது மாடியிலிருந்து முப்பத்தாறு படிகள் இறங்கி, தெருக்கோடியில் உள்ள பால் பூத்துக்கும் ஆட்டோவிலேயே சென்று, பால் பாக்கெட்டுகள் வாங்கிவந்து, ஆட்டோக்காரரை ஐந்து நிமிடம் நிற்கச்சொல்லி விட்டு வாங்கி வந்த புதுப்பாலை என் மனைவியிடம் கொடுக்க மீண்டும் படியேறினேன்.

நான் படியேறி மேலே போகும்போது, எண்பது வயதைத்தாண்டிய ஸ்ரீமதிப்பாட்டியும், ஐம்பது வயதாகியும் பிரும்மச்சாரியான அவர்களின் இரண்டாவது மகனும், முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி காவிரி ஸ்நானத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் அவர்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவே உள்ளனர். எனக்கும் தூரத்து சொந்தம் தான். அந்தக்கால உடம்பு. வெய்யிலோ, மழையோ, பனியோ, குளிரோ வருஷம் முழுவதும் விடியற்காலம் நாலு மணிக்குள் எழுந்து, ஐந்து மணிக்குள் கிளம்பி, போகவர சுமார் இரண்டை கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, விபூதியைக் குழைத்து இட்டுக்கொண்டு, சிவப்பழமாக சொட்டச்சொட்ட ஈரத்துணியுடன், காலை ஏழு மணிக்குள் திரும்பி வந்து விடுவார்கள்.  

அந்த ஸ்ரீமதிப்பாட்டியின் கணவர் இருந்தவரை, அவருடனேயே தான் காவிரி ஸ்நானத்திற்கு சென்று வந்தார்கள். முகம் பூராவும் பசுமஞ்சளுடன் பார்க்கவே பறங்கிப்பழம்போல நல்ல சிவப்பாக,நெற்றியிலும், நடுவகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொண்டு, தீர்க்க சுமங்கலியாகவே சிரித்த முகத்துடன் அழகாக அம்பாள் போல காட்சியளித்தவர்கள் தான். இப்போது கணவர் காலமானபின் கூடத்துணைக்கு தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு தினமும் விடியற்காலம் காவிரிக்குச் சென்று வருகிறார்கள். 

பெரும்பாலும் நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து ஆபீஸ் போக அவசரமாகச் செல்லும் போது, அநேகமாக இவர்கள் இருவரும் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, சிவப்பழமாக எதிரே தென்படுவார்கள்.

ஆரம்ப நாட்களில் எனக்கு நேர் எதிராக வராமல், நான் ஆபீஸுக்கு நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில், சற்றே தயக்கத்துடன் ஒதுங்கி நின்று, வழிவிட்டு விடுவார்கள், அந்தப் பாட்டி.

ஒரு நாள், எனக்கு எதிரே ஏதோ யோசனையில் நடந்து வந்து விட்ட அவர்கள் என்னைப்பார்த்து,  “சிவராமா, ஓரமா ஒரு நிமிஷம் உட்கார்ந்து விட்டு, பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு போப்பா” என்றார்கள் அந்த ஸ்ரீமதிப்பாட்டி.








“பாட்டி, நான் சகுனம் ஏதும் பார்ப்பதே கிடையாது. தினமுமே உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து கொண்டும் தான், ஆபீஸுக்குப்போய் கொண்டிருக்கிறேன்;  

மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, இந்தத் தள்ளாத வயதிலும், மிகவும் மனோ தைர்யத்துடன், தினமும் காவிரி ஸ்நானம் செய்து கொண்டு, பசி பட்டினி இருந்து தினமும் ஜபம், தபம், விரதம் முதலியவற்றை அனுஷ்டித்துக்கொண்டு, பழுத்த பழமாக இருந்து வருகிறீர்கள்.  நான் அலுவலகம் செல்லும்போது தாங்கள் என் எதிரே நடந்து வருவதை, ஒரு மிக நல்ல சகுனமாகவே எடுத்துக்கொள்கிறேன்; 

தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது ஒருவர் மற்றொருவரை விட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் நியதி தானே!

அதனால் என் எதிரில் தாங்கள் வர நேரும்போது, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒதுங்கி நிற்காமல் சர்வ சாதாரணமாகவே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றேன். 

இதைக்கேட்டதும் ஸ்ரீமதிப் பாட்டிக்கு ஒரே சந்தோஷம். 

“சிவராமா, நீ மஹராஜனா நீண்ட நாட்கள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா” என்று வாயார வாழ்த்தினார்கள்.

இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.

ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

தொடரும் 




[ இந்த சிறுகதையின் இறுதிப்பகுதி வரும் வியாழன் 29.09.2011 அன்று வெளியிடப்படும் ]




வியாழன், 22 செப்டம்பர், 2011

ஏமாற்றாதே ! ..... ஏமாறாதே!!





 ஏமாற்றாதே ! ... ஏமாறாதே ! 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



காலை நேரம். தன் தள்ளாத வயதில், அந்தக்கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய, அந்தத் தெருவோரமாக, சாக்குப்பையை விரித்து, காய்களை சைஸ் வாரியாக அடுக்கி முடித்தாள்.  

வெய்யில் ஏறும் முன்பு காய்களை விற்றுவிட்டால் தேவலாம். வெய்யில் ஏற ஏற உடம்பில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு, படுத்துத்தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

அந்த அரசமர பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பொதுக்குழாயில் குடிநீர் அருந்திவிட்டு, சற்றுநேரம் அந்தமரத்தடி மேடை நிழலிலேயே தலையை சாய்த்து விட்டு, பொழுது சாய்ந்ததும் வெய்யில்தாழ வீட்டுக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.

இளம் வயதில் ஒண்டியாகவே நூற்று ஐம்பது காய்கள் வரை உள்ள பெரிய மூட்டையை, தலையில் சும்மாடு வைத்து சுமந்து வந்தவள் தான். இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது.

ஒரு காய் விற்றால் ஐம்பது காசு முதல் ஒன்னரை ரூபாய் வரை இலாபம் கிடைக்கும். பேரம் பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப் பொருத்து லாபம் கூடும் அல்லது குறையும். ஏதோ வயசான காலத்தில் தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பண உதவி செய்யலாமே என்று நினைப்பவள்.

வரவர கண் பார்வையும் மங்கி வருகிறது. கணக்கு வழக்கும் புரிபடாமல் குழப்பம் ஏற்படுகிறது. அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எண்ணெயில் ஊறி பிசுக்கு ஏறிய நோட்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை.

“சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” குரல் கொடுத்தாள்.

“தேங்காய் என்ன விலைம்மா?” வந்தவர் கேட்டார்.

“வாங்க சாமீ .... எடுத்துட்டுப்போங்க .... எவ்வளவு காய் வேணும்?”  

“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும்” என்றார்.

“பெரிய காய் ஏழு ரூபாய் சாமீ; சின்னக்காய் ஆறு ரூபாய்” என்றாள் கிழவி.

“விலையைச் சொல்லிக்கொடுத்தால் ஒரு பத்து பன்னிரெண்டு காய் எடுத்துக்கொள்வேன்” என்றார்.

“பன்னிரெண்டு காயாவே எடுத்துக்கோ சாமீ; மொத்தப் பணத்திலே ஒரு ரெண்டு ரூபாய் குறைச்சுக்கொடு சாமீ” என்றாள்.

“பெரியகாய் பன்னிரெண்டுக்கு எழுபது ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.

“கட்டாது சாமீ. ஒரு காய் விற்றால் நாலணா [25 பைசா] தான் கிடைக்கும்” என்றாள். 

அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, “மீதிப்பணம் கொடு” என்றார் அவசரமாக.

“ஆறே முக்கால் [Rs. 6.75 P] ரூபாய்ன்னா பன்னிரெண்டு காய்களுக்கு எவ்வளவு சாமீ ஆச்சு?” கிழவி கேட்டாள்.

“எண்பத்து ஒரு ரூபாய் ஆகுது. அவ்வளவெல்லாம் தர முடியாது. முடிவா ஆறரை ரூபாய்ன்னு போட்டுக்கோ. பன்னிரெண்டு காய்க்கு எழுபத்தெட்டு ரூபாய் எடுத்துண்டு, மீதி இருபத்திரண்டு ரூபாயைக்கொடு, நாழியாச்சு” என்றார். 

அவளும் சற்று நேரம் மனக்கணக்குப்போட்டு குழம்பி விட்டு, அவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சா, சாமீ?” என்று ஒரு சந்தேகமும் கேட்டு விட்டு, அவர் கொடுத்த நூறு ரூபாய்த் தாளைப் பிரித்துப்பார்த்து விட்டு, மீதித்தேங்காய்களின் மேல், அந்த ரூபாய் நோட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டு, ”முதல் வியாபாரம் சாமீ” என்று சொல்லி விட்டு, தன் சுருக்குப்பையில் பணத்தைப்போட்டு இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.


அது போலவே பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. தப்பித்தவறி பேரம் பேசுபவர்களை ஒரு மாதிரியாக பட்டிக்காட்டான் என்பது போலப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்.

தெருவோரம் காய்கறி வியாபாரம் செய்யும், அதுவும் ஒருசில வயதானவர்களிடம் தான், பேரம் பேசுவார்கள், விலையைக் குறைப்பார்கள், அசந்தால் ஏதாவது ஒன்றை காசு கொடுக்காமல் கடத்தியும் வந்து விடுவார்கள். அதில் ஒரு அல்ப ஆசை இவர்களுக்கு.  


கீரை வகைகள், காய்கறிகள், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் முதலியன விற்கும் தெருவோர ஏழை மற்றும் வயதான வியாபாரிகளிடம் தான் இவர்கள் பாச்சா பலிக்கும்.


அவர்களும் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். 


நாலு அல்லது ஐந்து பேர்கள் உள்ள சிறிய குடும்பத்திற்கே காய்கறி வாங்க தினமும் 60 முதல் 100 ரூபாய் வரை தேவைப்படுகிறது. குழம்புத்தானுக்கு ஐந்து அல்லது ஆறு முருங்கைக்காய் வாங்கினாலே, அதற்கு மட்டுமே 15 அல்லது 20 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது? எல்லாப்பொருட்களின் விலைகளுமே அடிக்கடி ஏறித்தான் வருகிறது.  


சொல்லப்போனால் இந்த காய்கறிகள் மட்டுமே, ஷேர் மார்க்கெட் போலவே,  சில சமயங்களில் ஏறினாலும் பலசமயங்களில் கிடுகிடுவென்று இறங்கி விடுவதும் உண்டு. விளைச்சல் அதிகமானால், வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகள் போட்டாபோட்டியில் குறைக்கப்படுவது உண்டு. விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அழுகிவிடும் அபாயமும் உண்டு.  மற்ற பொருட்கள் அப்படியில்லை; ஏறினால் ஏறினது தான். இறங்கவே இறங்காது.


பார்க்க மனதிற்கு நிறைவாகவும்,காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 


ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார், அந்த வியாபாரியும். 



இன்று இந்தக்கிழவியிடம் தேங்காய் வாங்கியவர் ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான், அதுவும் கடவுளுக்காகவே வாங்கியுள்ளார்.  அந்த மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையடிவாரத்தில் உள்ள கீழ்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மற்ற பத்து பிள்ளையார்களுக்கு ஒவ்வொன்றும் என மொத்தம் 12 சதிர் தேங்காய்கள் அடிப்பதாக வேண்டுதல் செய்து கொண்டுள்ளார்.   

சதிர் தேங்காய் உடைக்கும் அவருடன் ஏழைச்சிறுவர்கள் ஒரு கும்பலாகப் போய், உடைபட்டுச் சிதறும் சதிர் தேங்காய்களை பொறுக்குவதில் தங்களுக்குள் முண்டியடித்து வந்தனர்.

கிழவியிடம் வாங்கிய அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும்,  பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவரின் நெடுநாள் பிரார்த்தனை இன்று தான் ஒருவழியாக நிறைவேறியது. இந்தப்பிள்ளையார்களுக்கு சதிர் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு விளையாட்டு போல 10 வருஷங்கள் ஆகிவிட்டன.  திருச்சியிலுள்ள அந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்வ்யூவுக்கு வந்த போது வேண்டிக்கொண்டது.  

பிறகு அவருக்கு வேலை கிடைத்தும் அவசரமாக போபாலில் போய் வேலைக்குச் சேர வேண்டும் என்று உத்தரவு வந்ததால், வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. 


இப்போது அவர் மீண்டும் திருச்சிக்கே பணி மாற்றத்தில் வந்தாகி விட்டது. இனியும் பிள்ளையாருக்கான பிரார்த்தனையை தாமதிக்கக்கூடாது என்று, இன்று பிரார்த்தனையை நிறைவேற்றக் கிளம்பி விட்டார்.   

’பத்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;

இன்று சுளையாக எழுபத்தெட்டு ரூபாய்களை செலவழிக்க நேரிட்டு விட்டது. அநியாயமாக இப்படி ஒரு தேங்காயையே ஆறரை ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது; 

நான் புத்திசாலித்தனமாக அந்தக்கிழவியிடம் சுட்டு வந்த ஒரு காய் மட்டும் தான் லாபம். அதையும் சேர்த்துக் சராசரியாகக் கணக்குப் பார்த்தாலும், ஒரு காய் ஒன்று [78/13 = 6]ஆறு ரூபாய் வீதம் அடக்கம் ஆகிறது என்று, கடவுளுக்கு வேண்டிக்கொண்டதற்கு பலவிதமான லாப் நஷ்டக் கணக்குகள் பார்த்து, 12 காய்களையும் சதிர் காய்களாக அடித்து விட்டு, மீதியிருந்த ஒரே ஒரு தேங்காயுடன் வீட்டை அடைந்து, அதைத் தன் மனைவியிடம் கொடுத்தார்.

அதிகாலையிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டுப் போனவர்; பசியோடு வருவாரே என்று அவசர அவசரமாக சமையலை முடித்து விட்ட அவரின் அன்பு மனைவி, தேங்காயை உடைத்துத் துருவிப் போட்டு விட்டால், சூடாக சாப்பாடு பரிமாறி விடலாம் என்று தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டாள்.

தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெய்யிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ள தன் கணவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டாள்.

”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது!! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பித்தாள்.

இதற்கிடையில் ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.

மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.


அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.   


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

புதன், 21 செப்டம்பர், 2011

அட்டெண்டர் ஆறுமுகம்


அட்டெண்டர் ஆறுமுகம்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின் மிகவும் தயங்கியவாறே, மேனேஜர் அறைக்குள் மிகவும் பெளவ்யமாக நுழைந்தார் அட்டெண்டர் ஆறுமுகம். 

வயது ஐம்பத்தாறு. சற்றே கருத்த நிறம். ஒல்லியான தேகம். நெட்டையான உருவம்.   இடுங்கிய கன்னங்கள். முரட்டு மீசை. காக்கியில் யூனிஃபாஃர்ம் பேண்ட், சட்டை; கழுத்துக்காலரில் எப்போதும் ஒரு கர்சீஃப். அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவித புன்னகையுடன் கூடிய ஏக்கப்பார்வையும், கூழைக் கும்பிடுவும் தான் ஆறுமுகத்தின் அங்க அடையாளங்கள்.

”கும்புடறேன் எஜமான்” ஆறுமுகம் குழைந்தார்.

”என்ன ஆறுமுகம்? என்ன தயங்கித் தயங்கி நிற்கிறீங்க! என்ன வேணும் சொல்லுங்க!!” மேனேஜர் அவர்கள் கனிவுடன் வினவினார்.

”ஐயா, என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன். புரோக்கர் நல்ல இடமா ஒன்னு பார்த்துச் சொல்லியிருக்காரு. மேற்கொண்டு பேசி முடிக்கணும். சரிப்பட்டு ஒத்து வந்தால் வரும் தை மாசமே முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்” என்றார்.

”ரொம்ப சந்தோஷம், ஆறுமுகம். ஏதாவது பி.எஃப். லோன் அவசரமா சாங்ஷன் செய்யணுமா? வேறு ஏதாவது உதவிகள் தேவையா? நீங்க தான் இந்த ஆபீஸிலேயே ரொம்ப நாள் சர்வீஸ் போட்ட பழைய ஆளு. சங்கோஜப்படாம எந்த உதவி வேண்டுமானாலும் தைர்யமாக கேளுங்க” என்றார் மேனேஜர். 

“உங்க புண்ணியத்திலேயும், கடவுள் புண்ணியத்திலேயும், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி, பொண்ணு பிறந்த நாளிலிருந்து இன்னிக்கு வரை, அவள் கல்யாணத்துக்கு வேண்டிய, பணம், நகை நட்டு, பாத்திரம் பண்டம் எல்லாம் ஓரளவு சேர்த்து வைச்சுட்டேனுங்க, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”வெரிகுட், அப்புறம் என்ன ஆறுமுகம்; சீக்கிரமாப்போய் பேசி முடிச்சுட வேண்டியது தானே” என்றார் மேனேஜர்.

“பேசி முடிச்சுட்டா, பத்திரிகை அடிக்கணுமே, ஐயா” என்றார் ஆறுமுகம்.

”பத்திரிகை அடிப்பதிலே என்ன பெரிய பிரச்சனை? நானே வேண்டுமானால் என் செலவிலேயே அடித்துத் தரட்டுமா? டிசைன் செலெக்ட் செய்யணுமா? வாசகம் ஏதாவது அழகாக எழுதித்தரணுமா? ப்ரூஃப் கரெக்ட் செய்து தரணுமா? சொல்லுங்க ஆறுமுகம்! என்னிடம் நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க? 

”ஐயா, நானும் இந்த ஆபீஸிலே சேர்ந்து இன்னியோட முப்பத்து ஆறு வருஷமாச்சு. இருபது வயசுலே இங்கே வேலைக்குச்சேர்ந்தேன். இன்னும் இரண்டு வருஷத்திலே ரிடயர்ட் ஆகப்போகிறேன்; 

நானும் உங்களை மாதிரி என் சர்வீஸிலே ஒரு இருபது மேனேஜர்களைப் பார்த்து விட்டேன்.  டிரான்ஸ்ஃபரில் இங்கே வருவீங்க. ஒரு வருஷமோ இரண்டு வருஷங்களோ இங்கே இருப்பீங்க. பிறகு மூணாவது வருஷத்திற்குள் பிரமோஷனில், இங்கிருந்து வேறு ப்ராஞ்சுக்கு மாற்றலாகிப் போயிடுவீங்க;

ஆனால் என் நிலைமையை சற்றே யோசனை செய்து பாருங்க.  1975 இல் நான் இந்த ஆபீஸிலே சேரும்போது அட்டெண்டர்.  1990 இல் எனக்கு ஒரு பொஞ்சாதி அமைந்தபோதும் நான் அட்டெண்டர். இப்போ 2011 இல் என் பொண்ணைக் கட்டிக்கொடுக்க நினைக்கும் போதும் அதே அட்டெண்டர். நாளைக்கே நான் ஒரு வேளை ரிடயர்ட் ஆனாலும், (முன்னாள்) அட்டெண்டர்; 

எனக்கே என்னை நினைக்க ஒரு வித வெட்கமாகவும், வேதனையாகவும், வெறுப்பாகவும் உள்ளது; இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எப்போதும் ஒருவித மன உளைச்சலைத் தந்து வாட்டி வருகுது, ஐயா ;

வருஷாவருஷம் இன்க்ரிமெண்ட் கிடைக்குது. சம்பளம் உயருது. பஞ்சப்படியும் உயருது, ஓவர்டைம் பணம் கிடைக்குது, போனஸும் கிடைக்குது;

இவையெல்லாமே கிடைத்து ஓரளவுக்கு கெளரவமாக வாழ்ந்தும்,  என் பொண்ணுக்கு சம்பந்தம் பேசும் இடத்தில் நான் இன்ன கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்று பெருமையாகச் சொன்னவுடன், அங்கு என்ன வேலை பார்க்கிறீங்க என்று எதிர் கேள்வி கேட்குறாங்க;

நாளைக்கு மாப்பிள்ளையா வரப்போகிறவருக்கும், தன் மாமனார் ஒரு அட்டெண்டர் என்றால், அவரிடமிருந்து எனக்கு ஒரு மரியாதை கிடைக்குமா என்றும் நினைக்கவே சற்று சங்கடமாக உள்ளது,  ஐயா;

இதையெல்லாம் ஐயா கொஞ்சம் நினைத்துப்பார்த்து மேலிடத்தில் சொல்லி ஏதாவது ஒரு மாற்று வழி பண்ண வேண்டும்” என்றார் ஆறுமுகம்.


அதிகம் படிக்காதவராக இருப்பினும், அனுபவ அறிவினாலும், ஆர்வத்தினாலும் பல விஷயங்களில் மிகவும் கெட்டிக்காரரான ஆறுமுகத்தின் கோரிக்கையிலுள்ள நியாயமானதொரு சமூகப்பிரச்சனையை முற்றிலும் உணர்ந்து கொண்டார், மனிதாபிமானம் மிக்க அந்த மேனேஜர். 








அடுத்து வந்த இயக்குனர்கள் கூட்டத்தில் இந்த விஷயத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்துப் பேசி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி செய்தார், அந்த மேனேஜர்.


படிக்காதவர்களாக இருப்பினும், கடைநிலை ஊழியர்களில் 10 ஆண்டுகள் பணியாற்றி முடித்தவர்களுக்கு ஜிராக்ஸ் ஆப்பரேட்டர்கள் என்றும், 20 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு ரிக்கார்டு கிளார்க்குகள் என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அலுவலக குமாஸ்தாக்கள் [Office Clerk] என்றும் உடனடியாக பதவி மாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


ஆர்டரை கையில் பெற்ற ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேனேஜரை தனிமையில் சந்தித்து நன்றி கூறினார்.


”பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்து, மாப்பிள்ளை வரப்போகும் அதிர்ஷ்ட வேளை தான், நம் அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு பிரமோஷன் வந்துள்ளது” என்று அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கொ ட் டா வி








கொட்டாவி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




”பட்டாபி, உன்னை எப்போது வேண்டுமானாலும் ஜீ.எம் (General Manager) கூப்பிடக்கூடும். தயாராக இருந்து கொள். உன்னைப்பற்றி நிறைய பேர்கள் ஏதேதோ அவரிடம் ஏத்தி விட்டுள்ளார்கள் என்று தெரிகிறது” என்று தன்னுடன் படித்தவனும், தற்போது ஜீ.எம் அவர்களுக்கு செகரட்டரியாக இருப்பவனுமாகிய கிச்சாமி எச்சரித்து விட்டுப்போனதும், நிதித்துறை குட்டி அதிகாரியான பட்டாபிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. 

இப்போது தான் சமீபத்தில் வட இந்தியாவிலிருந்து பணி மாற்றத்தில் [On Transfer] இங்கு வந்துள்ள ஜீ.எம் அவர்கள் மிகவும் கெடுபிடியானவர். எதற்கும் வளைந்து கொடுக்காதவர் [Straight Forward ஆன ஆசாமி]. கண்டிப்பும் கறாரும் மிகுந்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு உதாரண புருஷர். தயவு தாட்சிண்யமே பாராமல் தவறு செய்பவர்களை தண்டித்து விடுபவர் என்றெல்லாம் அலுவலகத்தில் ஒரே பேச்சாக உள்ளது.

பட்டாபியைப் பொருத்தவரை பெரிய தவறு ஏதும் செய்துவிடவில்லை தான். கடந்த ஒரே மாதத்தில் மட்டும், நாலு வெவ்வேறு பிரபல தமிழ் வார இதழ்களில், பட்டாபி எழுதிய சிறுகதைகள்,”கொட்டாவி” என்ற புனைப்பெயரில் பிரசுரமாகியுள்ளன. 

அந்த அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில், பரவலாக இதைப்பற்றியே பேச்சு. பலரும் பட்டாபியின் கற்பனைத் திறனையும், நல்ல எழுத்து நடையையும்,  கதையின் சுவாரஸ்யமான கருத்துக்களையும், மனதாரப் பாராட்டவே செய்தனர். 

ஒரு சிலருக்கு மட்டும் அவர் மீது ஏதோ கோபம். பொறாமை என்று கூடச் சொல்லலாம். ஆபீஸில் தாங்கள் மட்டும்தான், வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக வேலை பார்ப்பதாகவும், ஆனால் இந்தப் பட்டாபி ஏதோ கதை எழுதுவதாகச்சொல்லி, எப்போதும் கதை பண்ணிக்கொண்டு திரிவதாகவும், ஒருவிதக் கடுப்பில் இருந்து வந்தனர்.  

அவர்களில் யாராவது இவரைப்பற்றி புது ஜீ.எம். அவர்களிடம் போட்டுக் கொடுத்திருக்கலாம் என்ற பயம், பட்டாபியைப் பற்றிக்கொண்டது.

ஜீ.எம். கூப்பிடுவதாகப் பட்டாபிக்கு அழைப்பு வந்தது. பட்டாபி அவசர அவசரமாக ஒன் பாத்ரூம் போய்விட்டு, முகத்தை நன்றாக அலம்பித் துடைத்து விட்டு, சட்டைப்பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்து, நெற்றியில் சிறியதாக விபூதி பூசிக்கொண்டு, எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, செகரட்டரி கிச்சாமியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, ஜீ.எம். ரூமுக்குள் மெதுவாக பூனைபோல நுழைந்து, மிகவும் பெளவ்யமாக நின்றார்.


”அதிகாரிகளுக்கு முன்னும், கழுதைக்குப் பின்னும் நிற்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் உதைபட நேரிடும்” என்று எப்போதோ யாரோ சொல்லிக்கொடுத்த அறிவுரைகள் நினைவுக்கு வந்தது, பட்டாபிக்கு. 

ஃபைல்களில் மூழ்கியிருந்த ஜீ.எம். தன் தலையை சற்றே நிமிர்த்திப் பார்த்ததும், இரு கைகளையும் கூப்பி “நமஸ்காரம் ஸார்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டார், பட்டாபி.

“வாங்க ... நீங்க தான் பட்டாபியா, உட்காருங்கோ” என்றார் ஜீ.எம்.

“தேங்க்ஸ் ஸார்” என்று சொல்லியபடியே ஜீ.எம். இருக்கைக்கு முன்புள்ள டேபிள் அருகே இருந்த மிகப்பெரிய குஷன் சேர்களில் ஒன்றின் நுனியில் மட்டும், பட்டும் படாததுமாக பதட்டத்துடன் அமர்ந்தார், பட்டாபி.

“நீங்க ஏதேதோ கதையெல்லாம் எழுதறேளாமே; எல்லோருமே சொல்றா. அதைப்பற்றி என்னவென்று விசாரித்து விட்டு, உங்களை டிரான்ஸ்பர் செய்யலாம்னு இருக்கேன்” என்றார் ஜீ.எம்.

“சார், சார் ... ப்ளீஸ்.... அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஏதாவது செஞ்சுடாதீங்கோ. நான் பிள்ளைகுட்டிக்காரன். வயசான அம்மா, அப்பா இருக்கா. நான் அவாளுக்கு ஒரே பிள்ளை. எனக்கும் என் மனைவிக்கும் சுகர், ப்ரஷர் எல்லாமே இருக்கு. என் மூணு குழந்தைகளும் முறையே எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறார்கள்; 


ஏதோ உள்ளூரிலேயே வேலையாய் இருப்பதால் ஒரு மாதிரியாக என் லைஃப் ஓடிண்டு இருக்கு. எங்கக் கூட்டுக் குடும்பம் என்கிற குருவிக்கூட்டை தயவுசெய்து கலைச்சுடாதீங்கோ. உங்களுக்குப் புண்ணியமாப்போகும்; 


நான் வேணும்னா இனிமே இந்த நிமிஷத்திலிருந்து கதை எழுதுவதையே விட்டுடறேன். தயவுசெய்து இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சு விட்டுங்கோ” என்று கண் கலங்கியபடி மன்றாடினார் பட்டாபி.


”நோ...  நோ... மிஸ்டர் பட்டாபி, நீங்க இந்த டிரான்ஸ்ஃபரிலிருந்து தப்பிக்கவே முடியாது. நான் ஒரு முடிவு எடுத்தேன் என்றால் எடுத்தது தான்” என்று ஜீ.எம். சொல்லும்போதே அதை ஆமோதிப்பது போல டெலிபோன் மணி அடித்தது. 


ரிஸீவரைக் கையில் எடுத்து, “யெஸ்; கனெக்ட் தி கால்” என்றவர் யாருடனோ என்னென்னவோ வெகுநேரம் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்த வண்ணமும், இருந்தார். 


பட்டாபிக்கு மனது பக்பக்கென்று அடித்துக்கொண்டு ப்ளட் பிரஷர் எகிறியது. எந்த பாஷை தெரியாத ஊரோ அல்லது தண்ணியில்லாத காடோ என சோகத்தில் ஆழ்ந்திருந்தார் பட்டாபி. அந்த ஏ.ஸீ. ரூம் குளிரிலும் இவருக்கு மட்டும் வியர்த்துக் கொட்டியது.       


டெலிபோன் உரையாடல் முடிந்ததும் ஜீ.எம். இவரை நோக்கினார்.


“பயப்படாதீங்க மிஸ்டர் பட்டாபி. பத்திரிக்கை துறையுடன் பல்லாண்டு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள தங்களைப் பிரமோட் செய்து நம் விளம்பரத்துறைக்கு மேனேஜராகப் போடப் போகிறேன்;


நீங்கள் தற்போது வேலை பார்க்கும் அக்கவுண்ட்ஸ் பிரிவிலிருந்து வணிக விளம்பரப்பிரிவுக்குத்தான் லோக்கல் டிரான்ஸ்ஃபர்; அதுவும் மேனேஜர் ப்ரமோஷனுடன்; அட்வான்ஸ் கன்கிராஜுலேஷன்ஸ்; 


பை-த-பை நீங்க இதுவரை எழுதின கதைகள் எல்லாம் எனக்கு ஒரு செட் கம்ப்ளீட்டாக வேணும். ரொம்ப நாட்கள் டெல்லியிலேயே இருந்து விட்டதால், தமிழில் கதைகள் படிக்க செளகர்யப்படாமல் போய் விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் தமிழில் சிறுகதை படிக்க மிகவும் ஆர்வமுண்டு;


நீங்க தொடர்ச்சியா தமிழ் பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கணும். பட்டாபின்னு .... ஸாரி .... கொட்டாவின்னு ஒரு பிரபல எழுத்தாளர் இவ்வளவு பெரிய நம் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அது நம் நிறுவனத்திற்கே ஒரு பெருமை இல்லையா! என்று மனம் திறந்து பாராட்டிவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற ஜீ.எம். பட்டாபியின் கரங்களைப் பிடித்து குலுக்கி விட்டு “ஆல்-தி-பெஸ்ட்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


நன்றி கூறி விடை பெற்ற பட்டாபிக்கு புதிய ஜீ.எம். ஒரு தங்கமானவர் என்பதை உரசிப் பார்த்த பிறகே உணர முடிந்தது.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-