About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, July 27, 2016

பதிவர் ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் புதிய நூல் அறிமுகம் .......... பகுதி-2 of 2.

{ அட்டைப்படமே வித்யாசமான அழகோ அழகு ! }


இந்த நூலில் உள்ள மொத்தப் படைப்புகள் 15 ஆகும்.

(01) சொல்லூக்கி, (02) மணிக்கொச்சம், (03) சுட்ட வடை, (04) காலண்டர் தாள், (05) மனக்கத்தி, (06) காலடி மண், (07) கையெழுத்து, (08) ஜல்லிக்கல்லு, (09) இச்சி மரம் சொன்ன கதை, (10) ஒரு கையி ஒரு கவளம், (11) அடுப்புக்கல், (12) பொழுதொன்றின் நகர்வில், (13) ஒருநாள் ஒரு பொழுது,  (14) கரிசத்தரை, (15) அம்புக் குறி.

ooooooooooooooooooOoooooooooooooooooo

இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள ’நாவலாசிரியர் ம. கமலவேலன்’ (பாலசாஹித்ய புரஸ்கார் விருது பெற்றவர்) அவர்கள் சொல்லியுள்ள கீழ்க்கண்ட சில விஷயங்கள் என்னாலும் உணரப்பட்டவைகள் மட்டுமே.

”பெரும்பாலான கதைகளில் கதாநாயகனாக ஆசிரியர் விமலன் அவர்களே வலம் வருவதாக நான் உணர்கிறேன். பெரும்பாலான கதைகளில் கதாநாயகனுக்கு பெயர் இல்லாமலே உள்ளது. அதனால் சில இடங்களில்  குழப்பங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இதன் காரணமாக மீண்டும் முதலிலிருந்து படிக்க வேண்டியதாகி விடுகிறது. ஆசிரியரின் மொழிநடை பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.  நீள நீளமான வாக்கிய அமைப்புகள். நிறைய செய்திகளைச் சொல்ல நினைக்கிறார். அதனால் வாக்கியங்கள் வளர்கின்றன. இரண்டு மூன்று கதைகள் படித்த பிறகே அவரது மொழிநடை நமக்குப் புரிந்து விடுகிறது.  அதன்பிறகு கதைகள் படிப்பது லகுவாகிவிடுகிறது.

’சொல்லூக்கி’யில் போஸ்டர் ஒட்டுபவர்கள்

‘மணிக்கொச்சம்’ கதையில் மேடை காண்ட்ராக்ட் மற்றும் சவுண்ட் சர்வீஸ்

‘சுட்டவடை’யில் பார்ஸல் பண்ணும் Packing Technique

இப்படியாக யாரும் தொடாக ’கரு’வை  ஆசிரியர் எடுத்துச் சிறுகதைகள் படைத்துள்ளார்.

மில் தொழிலாளி, விவசாயக் கூலித்தொழிலாளி கதை மாந்தர்களாகக் காட்சிப் படுத்தப்படுகின்றார்கள். டீக்கடை, டீ மாஸ்டர், புரோட்டாவுக்கு மாவு பிசைபவர்கள் இவர்களையும் சிறுகதை ஆசிரியர் நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். 

தொகுப்பு என்பதால், டீக்கடை பெரும்பாலும் அனைத்துக்கதைகளிலுமே தொடர்ந்து வருகிறது எனலாம்." 

 oooooooooooooooooooooooooooooooooooooo

நான் இதிலுள்ள அனைத்துக்கதைகளையும் படித்து முடித்துவிட்டேன். இருப்பினும் அவற்றில் ஏதோ நான்கு கதைகளை மட்டும் நான் இங்கு எடுத்துக்கொண்டு, அவற்றையும் கொஞ்சமாக மட்டுமே தங்களுக்கு அடையாளம் காட்டி சிறப்பிக்க நினைக்கிறேன்.சிறுகதைத் தொகுப்பு நூலின் தலைப்பான 
’இச்சி மரம் சொன்ன கதை’

அவருக்குத்தெரிந்தே, வயது சுமார் 50 ஆண்டுகளுக்குக் குறையாத அடர்த்தியான மரங்களைப்பற்றியும், அதன் கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் என ஆரம்ப வர்ணனைகளே  அபாரமாகத்தான் உள்ளன. 

அடுத்து  டவுன் மில்லுக்கு கிராமத்திலிருந்து பருத்தி மூட்டைகள் இறக்க மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ள நடராஜன் பற்றிய வர்ணனைகள், அவர் வழக்கமாக ஜில்லென்ற பானைத்தண்ணீர் மட்டும் குடிக்கச் செல்லும் டீக்கடை .... அந்த டீக்கடை முதலாளி சின்னப்பா, உழைப்பாளியான நடராஜன் மீது காட்டிடும் பரிவு  .... நடராஜன் கிராமத்து வாய்க்காலில் மடை நீரைத் திறந்துவிடுபவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே அவருடன் கூடவே உழைத்தவராச்சே இன்றைய டவுன் டீக்கடை முதலாளி சின்னப்பா. 

கிராமத்து வாய்க்காலுக்கு ப்ளாஷ் பேக் ஆக நம்மையும் அழைத்துச் செல்கிறார் நடராஜன் என்ற கதாபாத்திரம் மூலம் கதாசிரியர் விமலன்.


நம்ம கோவிந்தையாவின் இளைய மகளும்,  நீண்ட தலை முடியுடைய, நன்கு நீச்சலும் தெரிந்த 19 வயது இளம் பெண் இடி மின்னலுடன் கொட்டும் மழையில்,  இரவு வேளையில் ஏன் இங்கு இந்த வாய்க்காலில் குளிக்க வந்தாள்? எப்படி அவள் தண்ணீரில் இறந்து போனாள்? 

அவளை சுடுகாட்டுக்குக் கொண்டுபோகும் முன்பு ஏன் அவளின் மிகநீண்ட தலைமுடியை முழுவதுமாகக் கத்தரித்து தன்னிடம் பத்திரப்படுத்திக்கொண்டாள்  .....  அவளின் தாய்? 

மகளின் தலைமுடியை இடுப்பில் ஆடையாகக் கட்டிக்கொண்ட நிலையில், அவள் தாயும் ஏன் பித்துப்பிடித்ததுபோல, அடுத்த மூன்றே மாதத்தில் ஓர் நிறைந்த அமாவாசை இரவினில், அதுவும் கலுங்குக்காட்டைத் தாண்டியிருக்கிற வேலாமரக் கல்லுக்கிடங்கில் இறந்துபோனாள்

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக கதை நம்மை எங்கெங்கோ அழைத்துச்சென்று மனதைக் கலங்க அடிக்கிறது ..... ’இச்சி மரம் சொன்ன கதை’ என்ற தலைப்பினாலோ என்னவோ? நூலை வாங்கிப் படித்துத்தான் பாருங்களேன்.
ஒரு நாள் ஒரு பொழுது

’தண்ணீரில் தாவித் திரியுமா பச்சோந்தி?’ .... என கதை ஓர் கேள்வியுடன் ஆரம்பிக்கிறது.

ஓர் கணவன் + மனைவி. அவர்களுக்கு ஒருபெண். ஒரு பிள்ளை. வரவுக்கும் செலவுக்கும் பட்ஜெட் உதைத்து துணிகள் உள்பட கடனில் வாங்கி காலம் தள்ளும்  மிகவும் நடுத்தர  குடும்பம். 

பெண் இப்போது  காலேஜ் போய் இருக்கிறாள். முதல் மாதமே, காலேஜில் ரெளடி எனப் பெயர் எடுத்தவன் இவளிடம் வம்பு செய்கிறான். சொல்லிச்சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இவள் ஒரு நாள் தன் செருப்பைக் கழட்டி அவனை அடிக்க ஓங்கிவிட்டாள்.  

அவனும் அதன்பின் அடங்கிப்போனான். இதைக்கேள்விப்பட்ட தாய் துடிக்கிறாள். ”படித்தது போதும் படிப்பை நிறுத்து” என்கிறாள்.  தந்தை, தன் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுகிறார். ”நான் செருப்பால் அவனை அடிக்கச்சொன்னேன். நம் பெண் செருப்பை மட்டும் காட்டியிருக்கிறாள். ஆனால் அடிக்கவே இல்லை. அதற்குள் அவனும் அடங்கிப்போய் விட்டான். இதெல்லாம் விடலைப் பருவத்தில் சகஜம் தானே!” என்கிறார்.

விளைந்து நிற்கிறாள் மகள்.  வீட்டில் அவளது அம்மாவின் நகை தவிர்த்து, தங்கம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பொட்டு கிடையாது. நாளைக்கே மாப்பிள்ளை அமைந்தாலும் பார்க்க வேண்டியதுதான்.

அப்பா-அம்மாவை தன் நண்பர்களாகவே நினைத்து அவ்வப்போது தன் தம்பியுடன் சேர்ந்து கேலி செய்யும் மகளின் குறும்புத்தனம் கதைக்குக் கூடுதல் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளது.கரிசத்தரை

இதில் கஸ்தூரியக்கா என்றோர் கதா பாத்திரம். அவளைப்பற்றிய வர்ணனைகள் ..... அவளின் கடந்தகால வாழ்க்கையில் .....

அவள் ருதுவான அன்றே, அவளின் பாசமிகு தந்தை சுப்புராம் கரிசல்காட்டில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்குப்போட்டுக்கொண்டு செத்துவிட்டார். இதைப் பற்றி வீட்டில் உள்ளோர் + உறவினர்கள் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள்.  வீட்டின் ஒரு பக்கம் புதிதாக மலர்ந்து ருதுவான இளம் பெண்.  மறுபக்கம் அவளின் பாசமிகு தந்தையின் இறந்த உடல். 

இறந்த அப்பாவின் உடல் அருகே, இன்றுதான் ருதுவான மகள் நீண்ட நேரம் அமர்ந்து அழக்கூடாது .... அது நல்லதல்ல .... எனச் சொல்கிறார்கள், உறவினர்களில் சிலர்.

இறந்துபோன சுப்புராமின் மாமனாரும் மாமியாரும் சுப்புராமின் தாய் தந்தையிடம் அன்று போடாத சண்டை இல்லை.  சுப்புராமின் சாவுக்குக் காரணம் ’கூடாத கூத்தியா சகவாசம்தான்’ என்பது அனைவருக்குமே தெரிந்திருப்பதால், பிறகு சம்பந்திகள் இருவரும் ஒருவாறு தங்களுக்குள் சமாதானம் அடைந்து, அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சுக்கள் சுவாரஸ்யமாகவே உள்ளன.  


கடைசியில் கஸ்தூரியக்காவும் அவள் குடும்பமும் என்ன ஆச்சு? எங்கே போச்சு? என்பதே கதையின் முடிவினில் ......காலண்டர் தாள் 

மறக்க முடியாத ஒருசில வசனங்கள்:

தண்ணீர் எடுக்கப்போகையில் முனியம்மாக்காவிடம் ராமநாதனின் மனைவி சொல்வது: 

“ஒரு மனுஷனுக்கு நிதம்மா கேக்குது, வெக்கங்கெட்டுப்போயி, இந்த வயசிலே இப்படி இருந்தா எப்படி?  நம்மாள அவரு வேகத்துக்கெல்லாம் ஈடு கொடுத்துப்போக முடியாது. அதான் விட்டுட்டேன். எங்கயும் போயி எப்பிடியும் திரிஞ்சுட்டு வரட்டும்னு. நல்ல வேளையா அங்கிட்டு இங்கிட்டுன்னு நாலுயெடத்துல வாய் வைக்காம ஒருத்திகிட்டயே போறாரே ... அதுவரைக்கும் உத்தமமுன்னு இருந்துற வேண்டியதுதான்”

”எனக்கென்னக்கா இப்ப ... எனக்கும், புள்ளைங்களுக்கும் அவரு சம்பாரிச்சு கொண்டுவந்து கொடுக்காமயா இருக்காரு? இல்ல ஊரு ஒலகத்தப்போல, கூத்தியா சகவாசம் ஏற்பட்டதும், பொண்டாட்டி புள்ளைகளை தெருவுல விட்டுட்டாறா என்ன?  விடுங்கக்கா ஊருக்குள்ள பொழுது போகாம நாலு கழுதைங்க நாலு பேசுதுன்னா நீங்களும் இதப்போயி பெரிசா”

“இது அவருக்காத் தெரியணும் இல்ல அவளுக்காவது தெரியணும். இல்லைன்னா அவளோட புருசங்காரன் இங்கயெல்லாம் வராதன்னு என்னைக்கி செருப்புட்டு நாலு போட்டு அனுப்புறானோ அன்னைக்கித்தான் விடிவு வரும், இந்தப் பிரச்சனைக்குன்னு நெனைக்கிறேன். அதுவரைக்கும் இப்படித்தான் இருக்கும் ஊரு ஒலகம் சிரிச்சு, சீப்பட்டுப்போயி”   ’பொழுதொன்றின் நகர்வில்’ என்ற கதையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒவ்வொன்றைப் பற்றியும் நான் இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் நீங்க எப்போ அந்த நூலை வாங்கிப்படிப்பது? அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.’இச்சி மரம் சொன்ன கதை’

அட்டைகள் நீங்கலாக 
176 பக்கங்கள்
விலை: ரூ. 120
ஓவியா பதிப்பக வெளியீடு
முதற்பதிப்பு ஜூலை 2015
OVIYA PATHIPPAGAM
17-16-5A, K.K. NAGAR
BATLAGUNDU - 642 202
TAMILNADU - INDIA
Phone: 04543-262686
Cell: 7667557114, 9629652652
e-mail: oviyapathippagam@gmail.com
vathilaipraba@gmail.com


திரு. விமலன் அவர்கள்
வீட்டு விலாசம்:
1/1866, ஜக்கதேவி நகர், 
பாண்டியன் நகர்,
விருதுநகர்-626 001
பேச: 94863 21112

விமலன் தம்பதியினருக்கு, இரு மகன்கள் உள்ளதாக இந்த நூலின் மூலம் நான் தெரிந்துகொண்டேன். மூத்த மகன் பெயர்: சந்துரு. இளைய மகன் பெயர்: சுப. இளங்கோ.

நூல் ஆசிரியர் ‘சிட்டுக்குருவி விமலன்’ அவர்களுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். அவர் மேலும் பல நூல்கள் வெளியிட்டு எழுத்துலகில், மென்மேலும் ஜொலிக்க வேண்டும் என நாம் அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

அன்புள்ள நூலாசிரியர் திரு. விமலன் அவர்களுக்கு,

தங்களிடம் எழுத்துத் திறமையும், எழுத்தார்வமும் அபரிமிதமாக உள்ளன. தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் எந்த ஒரு ஜடப் பொருளையும், மனிதர்களையும், உயிரினங்களையும், எந்த ஒரு வெகு இயல்பான மிகச் சாதாரண சம்பவங்களையும் எழுத்தில் அனாயாசமாகக் கொண்டுவந்துவிடும் ஆற்றலும் தனித்தன்மையும் தங்களிடம் நிறையவே உள்ளன. அதற்கு முதற்கண் உங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருப்பினும் தாங்கள் அவற்றைப் பயன்படுத்திடும் முறை மற்றவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டதாகவே உள்ளன. இதைத்தங்களின் தனிப்பாணி என நானும் நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளேன். 

தங்களின் இதுபோன்ற சிறுகதைகளில், ஒருசில சிறிய மாற்றங்களைத் தாங்கள் கொண்டுவருவீர்களானால், தங்களின் எழுத்துக்கள் மேலும் மெருகூட்டப்பட்டு, நன்கு பிரகாசித்து, ஜன ரஞ்சகமாக அமையவும், பல வாசகர்களைக் கவரும் விதமாக இருக்கவும் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்தாக இங்கு குறிப்பிட்டுச்சொல்ல விரும்புகிறேன். 

எனக்கு சிறுகதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் சற்றே ஆர்வம் உண்டு என்பதாலும், 2014-ம் ஆண்டில் பொங்கல் முதல் தீபாவளி வரை தொடர்ச்சியாக 40 வாரங்களுக்கு, என் வலைத்தளத்தினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html ’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ நடத்தி அதனால் எனக்குக் கிடைத்துள்ள பரந்துபட்ட வெவ்வேறு புதிய அனுபவங்களாலும், கீழ்க்கண்ட சிலவற்றை தங்களின் பரிசீலனைக்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

-=-=-=-=-=-=-=-

தாங்கள் இனி சிறுகதைகள் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளாக நான் கருதுபவைகள்:

(1) ஒவ்வொரு சிறு கதைக்கும் ஓர் ’கரு’ முக்கியமான தேவை. வலுவான கருவாக அது இல்லாவிட்டாலும்கூட, நம்மால் நம் வாசகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ’மெஸ்ஸேஜ்’ நம் கதைகளில் சொல்லப்பட வேண்டும். 

(2) எழுத்துக்கள் நன்கு சுருக்கப்பட்டு கதைக்கான ’கரு’ அல்லது நாம் சொல்ல நினைக்கும் ’மெஸ்ஸேஜ்’ உடன் அது ஒட்டி உறவாடி வர வேண்டும். 

(3) சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது சிறுகதைக்கான முக்கிய லட்சணமாகும். இல்லாவிட்டால் அது கதையா, கட்டுரையா, அடுத்தடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாத பல்வேறு சம்பவங்களைச் சொல்லிச்செல்லும் ஓர் எழுத்துக் கோர்வையா  என்ற மிகப்பெரிய சந்தேகத்தினை வாசகர்களுக்கு ஏற்படுத்தி விடக்கூடும். 

(4) ஒவ்வொரு வாக்கியத்திலும் தொடர்ச்சியான அதிக வார்த்தைகள் இன்றி, அவைகளை நன்கு சுருக்கி  குறைந்த எண்ணிக்கைகள் கொண்ட வார்த்தைகளுடன், சிறுசிறு வாக்கியங்களாக மட்டுமே தரப்பட வேண்டும். 

(5) மேலும் ஒவ்வொரு வாக்கியங்களுக்கும் ஆங்காங்கே ஓர் முற்றுப்புள்ளி வைத்து முடித்திடல் மிகவும் அவசியமாகும். 

(6) தாங்கள் எழுதிய ஒரு கதையை மனதில் வாங்கிக்கொண்டு படிக்கும் நான், மீண்டும் புத்தகத்தைப் பிரிக்காமலும்,  படிக்காமலும்,  அதனை அப்படியே கண் பார்வையற்ற வேறு ஒருவருக்கு சுவாரஸ்யத்துடன் கதையாகச் சொல்லிச்செல்லும் வகையில் கதையை நகர்த்திச் செல்லுதல் வேண்டும். 

(7) சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளியிடும்போது, ஒரு கதையில் வரும் சம்பவமே வேறொரு கதையில் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது ..... உதாரணமாக இந்தத் தங்களின் தொகுப்பு நூலில் உள்ள 15 சிறுகதைகளில், சுமார் 10 கதைகளுக்கு மேல் ‘டீ’க்கடைகள் இடம் பெற்றுள்ளன என்பதைச் சொல்லலாம். 

8) ஒருசில நகைச்சுவைக்காட்சிகளும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் (TWIST) கதையில் தங்களால் கொண்டுவர முடியுமானால், அவை பெரும்பாலான வாசகர்களால் எப்போதுமே ஆர்வத்துடன் வரவேற்கப்படும்.

-=-=-=-=-=-=-=-

எழுத்தினில் தனித்திறமைகளும், ஆர்வமும் உள்ள தாங்கள் எழுத்துலகில் மென்மேலும் ஜொலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,  ஏதோ ஓர் உரிமை எடுத்துக்கொண்டு, என் மனதுக்குப் பட்டதை தங்களுக்கு இங்கு அப்படியே சொல்லியுள்ளேன். 

ஏதேனும் தவறுதலாகவோ, அதிகப்பிரசங்கித்தனமாகவோ இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் என்னை மன்னித்துக்கொள்ள வேண்டுகிறேன்.என்றும் அன்புடன் தங்கள்


 
[ வை. கோபாலகிருஷ்ணன்]
Tuesday, July 26, 2016

பதிவர் ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் புதிய நூல் அறிமுகம் .................... பகுதி 1 of 2

என்னுடைய ’ஜீவி - புதிய நூல் அறிமுகம் - பகுதி-3’  பதிவு வெளியீட்டின் போது நம்  ’சிட்டுக்குருவி’ வலைப்பதிவர் திரு. விமலன் அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டமிட்டிருந்தார்:

சார் தங்களின் முகவரி தரலாமா?

எனது நூலை அனுப்பி வைக்கிறேன்.அவரின் சமீபத்திய புதிய நூல் வெளியீடான ‘இச்சி மரம் சொன்ன கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை, தன் கையொப்பமிட்டு எனக்கு 20.04.2016 அன்று அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார். 

அவருக்கு இங்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த நூலின் அட்டைகளே மரம் போல சொரசொரப்பாகவும் 
அதிலே ஒரு மனிதன் போலவும் வடிவமைத்திருப்பது 
எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது.

அட்டைப்படத்தைத் தேர்வு செய்து 
வடிவமைத்துள்ள
பதிப்பகத்தாருக்கு 
என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

அட்டைகள் நீங்கலாக 
176 பக்கங்கள்
விலை: ரூ. 120
ஓவியா பதிப்பக வெளியீடு
முதற்பதிப்பு ஜூலை 2015
OVIYA PATHIPPAGAM
17-16-5A, K.K. NAGAR
BATLAGUNDU - 642 202
TAMILNADU - INDIA
Phone: 04543-262686
Cell: 7667557114, 9629652652
e-mail: oviyapathippagam@gmail.com
vathilaipraba@gmail.com

இது விமலன் அவர்களின்  வெற்றிகரமான ஆறாவது நூல் வெளியீடாகும். 

கவிஞர். வதிலைபிரபா, வெளியீட்டாளர், ஓவியா பதிப்பகம் அவர்கள் இந்த நூலுக்கு பதிப்புரை எழுதியுள்ளார்.


oooooOooooo

நாவலாசிரியர் திரு. ம. கமலவேலன் (பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்) 116, மாசிலாமணிபுரம், திண்டுகல்-5 ... அலைபேசி: 9942173875 அவர்கள் இந்த நூலுக்கு வெகு அழகாக அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். அதிலிருந்து சில வரிகள் ....... இதோ:

இயற்கையை ரசிப்பவராக மட்டுமல்ல, இயற்கையை மதிப்பவராகவும் விமலன் விளங்குகிறார். சிவப்புச் சிந்தனைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார், பாயசத்தில் மிதக்கும் முந்திரிப்பருப்பு போல. முந்திரிப்பருப்பைத் தூர எறிந்துவிட்டு யாரும் பாயசத்தைக் குடிப்பது இல்லை.  

கதையைச் சொல்லிக்கொண்டே வரும்போது ஒரு நிகழ்வு, பிறிதொரு நிகழ்வு என, தான் பார்த்த கேட்ட அனுபவங்களை வாசகர்களோடு பரிமாறிக்கொள்ள விரும்புகிறார்.  அதுவும் அவரது பாணி என்றுதான் சொல்ல வேண்டும்.

தான் வாழும் சூழ்நிலையிலிருந்தே சிறு கதைகளை உருவாக்கியிருக்கிறார், விமலன். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

முயற்சியும் பயிற்சியும் மேலும்  பல வெற்றிகளை இலக்கிய உலகம்  அவருக்கு அளிக்கும் என்பதற்கு ‘இச்சி மரம் சொன்ன கதை’ தொகுப்பு ஓர் தொடக்கம் ஆகும்.


oooooOooooo

திரு. விமலன் அவர்கள்

’என்னுரையாக அல்ல..... சொல்ல முடிந்த சொல்லாய்.....’ என விமலன் அவர்கள் எழுதியிருப்பதில் ......  சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன் சைக்கிளில் செல்லும்போது தனக்குமுன் சென்ற சைக்கிளின் கேரியரில் கட்டப்பட்டிருந்ததோர் வெள்ளைத்துணி சுற்றிய பொருள் பற்றிய அவரின் ஆராய்ச்சி. அது அவருக்கு மட்டுமல்ல படிக்கும் நமக்கும் மனதைப் பிசைவதாக உள்ளது. 

இதுபோல அவர் சந்தித்துள்ள அனுபவங்களும், மிகவும் எளிமையான மக்களின்  அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களும், அவர் தன் கண்ணால் கண்ட மிக எளிமையான காட்சிகள் ஒவ்வொன்றுமே கதைகள் என்ற பெயரில் எழுத்தில் சொற்சித்திரமாகச் செதுக்கப்பட்டுள்ளன.   

இந்த அவரின் புதிய நூலினில் மொத்தம் 15 கதைகளை வழங்கியுள்ளார். பக்கம் எண்கள் 175 மற்றும் 176 ஆகிய இரண்டும், படிக்கும் நாம் நம் குறிப்புகளை எழுதிக்கொள்ள காலியிடமாக விடப்பட்டுள்ளது ஓர் புதுமையாக உள்ளது.

இனி இவர் இந்த நூலில் எழுதியுள்ள கதைகளைப்பற்றி இதன் அடுத்த பகுதியில் நாம் கொஞ்சம் நூல் அறிமுகமாகப் பார்ப்போம்.


தொடரும்......
  
என்றும் அன்புடன் தங்கள்


 
[ வை. கோபாலகிருஷ்ணன்]

Thursday, April 21, 2016

ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 20 (நிறைவுப்பகுதி)’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன்  ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து 
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி

முதற்பதிப்பு: 2016

வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979


அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225 

ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார்  ஜீவி.

இந்த நூல் அறிமுகத்தின், முதல் 19 பகுதிகளில் நாம் தொடர்ந்து ஜீவி சிலாகித்துச் சொல்லியுள்ள 37 பிரபல எழுத்தாளர்களில், 36 நபர்களையும் பற்றி பார்த்துவிட்டோம். இப்போது இந்த நிறைவுப்பகுதியில்  திரு. எஸ்.ரா. அவர்களைப்பற்றி மட்டும் நாம் பார்ப்போம். 
37) எழுத்துப் பயணி
எஸ். ராமகிருஷ்ணன்
[பக்கம் 249 முதல் 264 வரை]தமிழ் வாசிப்பு  உலகுக்கு  எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்.ரா. தான். வாசிப்பில்லாமல் எழுத்தாளர் இல்லை என்றாலும், வாசிப்பு உலகிலிருந்து வந்த எஸ்.ரா. என்று எஸ்.ரா. வின் வாசிப்பு அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜீவி பெருமையாகச் சொல்கிறார்.

தமிழில் சிறந்த நூறு கதைகளை பட்டியலிட எஸ்.ரா. முனைந்த பொழுது அந்த நூறில் தனது இரண்டு கதைகளையும் சேர்த்து கொண்டிருக்கிறார். 'தாவரங்களின் உரையாடல்' மற்றும் 'புலிக்கட்டம்' ஆகிய எஸ்.ரா.விற்குப் பிடித்த அவரது  இரண்டு கதைகளை இந்த நூலில் ஜீவி விமரிசிக்கிறார்.

  1. திரிகூட மலை தாண்டவராய சுவாமிகள் எழுதிய ''தாவங்களின் ரகசிய வாழ்க்கை' என்ற நூலைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் பற்றி அறிய வேண்டும் என்ற அசுர ஆவலில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வருகிறார் ராபர்ட்ஸன் என்று வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.  ஆறு விரல் பெண், வாசல் படியில் சேவலின் அறுபட்ட தலை ரத்தம் கசியக் கிடப்பதாக.... என்று கதை முடியும் வரை ஒரே 'பரபர' தான்..
              2. அடுத்த கதை 'புலிக்கட்டம்'  பிரமாதமான கதை.  
                  வாசித்துத் தான் அதன் ரசனையை அறிய வேண்டும். 
                  சொன்னால் சரிப்படாது.

இந்த இரண்டு கதைகளும் எஸ்.ரா. வுக்கு பிடித்த அவரது கதைகள் என்றால்,  தனக்குப் பிடித்த எஸ்.ராவின் 'வெறும் பிரார்த்தனை' கதையை எடுத்துக் கொண்டு ஜீவி பரவசப்படுகிறார்.

’எஸ்.ரா.’ அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகளான ‘காந்தியோடு பேசுவேன்’; ‘ஷெர்லி அப்படித்தான்’; ‘பாதியில் முடிந்த படம்’; ‘பிடாரனின் மகள்’; ’சஞ்சாரம்’ என்கிற நாவல் முதலிய பலவற்றையும் பற்றி இந்த நூலில் பேசப்பட்டுள்ளன. 

எஸ்.ரா. அவர்கள் நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் தனது ஆர்வத்தினைக்காட்டி தன் பங்களிப்பினைத் தந்துள்ளார்கள்.


இவர் எழுதிய முதல் கதை ‘தொலைந்துபோன கபாடபுரம்’ என்றாலும் இவரின் முதல் பிரசுரம் ’கணையாழி’ பத்திரிகையில் வெளிவந்த ’தண்டவாளம்’ என்பதே என்கிறார் ஜீவி.


நாவலுக்கு எஸ்.ரா.வின் 'யாமம்'  கதையை ஜீவி எடுத்துக் கொண்டிருக்கிறார்.  அந்த யாமம் எப்படி காமமாய் கதையெங்கும் விரிகிறது என்று ஜீவி சொல்லச் சொல்ல நம் வாசிப்பின் சுகம் எங்கேயோ போகிறது.

'யாமம்' வாசித்தது  அதி அற்புத அனுபவமாயிற்றாம், ஜீவிக்கு.

நமக்கும் தான் என்று சந்தோஷமாய்ச் சொல்லலாம்..  

எஸ். ரா. அவர்களின் ‘யாமம்’ தாகூர் இலக்கிய விருதினைப்பெற்ற புதினமாகும். இந்த விருதினைப்பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே என்கிறார் ஜீவி. 

-oOo-

ஜீவி சாரின் இந்த நூலில் 
’யாமம்’ பகுதியில் 
நான் மிகவும் ரஸித்த வரிகள்:

ஆக, யாமம் திரிபுகொண்டு காமமாய் நாவல் நெடுக பதுங்கிக்கிடக்கிறது. இரவின் இரகசியம், வாசனைகளின் சுகந்தம் ஆகிய எல்லாமுமே காமத்தீயைக் கொழுந்துவிட்டு எரியச்செய்கிறது. காமம் தான் கதைகளாகிய இந்த நிகழ்வுகளைக் கட்டிப்போட்ட சரடு. 

வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்திற்காக என்று காமம் வெவ்வேறு காரணங்களுக்கான தீர்வாக தன்னை நியாயப்படுத்திக்கொள்கிறது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடைந்த இழப்புகளும் ஏராளம்.

புதினத்திற்கு ’யாமம்’ என்று பெயரிட்டிருந்தாலும் காமம்தான் கதையின் ஓட்டத்திற்கு அச்சாணியாக இருக்கிறது. 

மொத்தத்தில் காமம் ஒரு தீ. அதன் கதகதப்பை நாடியோரை அது சுடாமல் விடாது. யாமம் தெரிவிக்கும் நீதியும் அதுவே. 

எஸ்.ரா.வும் தனக்கு வாய்ப்பிருந்தும், தன் எழுத்துக்களால் காமத்தீயை, விசிறி விசிறி அனலைக் கிளப்பாமல், அடக்கி வாசித்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.      

காமம் என்பது தேனும் கூட. காமத்தை சுகிப்பவன், தேனில் விழுந்த ’ஈ’யாகிறான். மாந்துகிறேன் பேர்வழி என்று ஒரு கிண்ணத் தேனின் மேற்பரப்பில் உட்கார்ந்த ஈ, அந்தத் தேனில் விழுந்தே கிடப்பது ... அதன் இறக்கைகள் நனைந்து, பிசுபிசுத்துப் பறக்க முடியாத நிலையையும் உருவாக்கலாம். தேனில் அமிழ அமிழ  அந்தத் தேன் கிண்ணத்திலிருந்தே அதனால் வெளியேற முடியாதபடிக்கு அதனை மூழ்கச் செய்யலாம். 

ஈ பறப்பதற்காகப் படைக்கப்பட்ட ஒன்று. தேனில் மூழ்குவதற்காக அல்ல, வெளியே வரவேண்டும்;  வந்து அது, அதன் இறக்கைகள் படபடத்துப் பறக்க வேண்டும்.

தேனையும், ஈயையும் கற்பனையில் உருவாக்கிய எழுத்தாளனும் தான் படைத்த ஈயைப்போல தேனிலேயே விழுந்து கிடக்கக்கூடாது. தேவைக்காகத் தேனும் வேண்டியிருந்தாலும், ஈயை வெளியேற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்குண்டு. விழுந்து கிடந்தால் ஈக்கும் அவனுக்கும் வித்யாசமில்லாது போகும்.

நவீன இலக்கியம் என்பதும் சதாசர்வ காலமும் தேனில் ஈயை மூழ்கடித்து மூழ்கடித்து, ஈயை முடக்கக்கூடிய வேலையும் அல்ல.

-oOo-

தேன் போன்ற இந்த ஜீவி சாரின் நூலாகிய தேன் கிண்ணத்தில், இதுவரை  ஓர் ஈ போல மூழ்கிப்போயிருந்த நான்,  தேனின் தீண்டலாலும், தேனின் சுவையாலும், அது எனக்களித்த சுகபோகங்களாலும், மயங்கிக்கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


பிசுபிசுத்துப்போய் இருந்த என் இறக்கைகளுடன், எப்படியோ ஒருவாறு சமாளித்துத் தட்டுத்தடுமாறி, [அடிக்கடி என் மேலிடத்தின் குறுக்கீடுகள் போன்ற மாபெரும் உதவிகளாலும்] ஒரு வழியாக இந்த நூலைப் படித்து முடித்து வெளியேறி விட்டேன். 


இந்த அருமையான தேனின் ருசியும், நினைவலைகளும் மட்டும் என்றும் நீங்காமல், நீண்ட நாட்கள் என் மனதினில் இடம் பெற்றிருக்கும். - VGK
என் முடிவுரை


கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம் ஜீவி சார் அவர்கள் தான் வாசித்து இன்புற்றுள்ள பிரபல எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளைப்பற்றி நன்கு திறனாய்வு செய்து, தனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொன்றையும் அழகாக நமக்கு பருக ஆரோக்யமான ஜூஸ் போல இந்த நூலில் கொடுத்துள்ளார்கள். 

உண்மையைச் சொல்லப்போனால், இவர் சுட்டிக்காட்டியுள்ள பிரபலங்களில் (சுஜாதாவின் ஒருசில சிறுகதைகளைத் தவிர) எதையுமே இதற்கு முன் வாசித்தறியும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. இவரின் இந்த நூல் வாயிலாக பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலரின் பெயர்களையும், எழுத்துலகில் அவர்களின் மிகப்பெரிய சாதனைகளையும். தனித்தன்மைகளையும், தனித்திறமைகளையும், தனிச்சிறப்புக்களையும் ஓரளவுக்கு இப்போது என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்துள்ளதில் தனித்திருப்தி ஏற்பட்டிருக்கிறது. 

இந்த நூலினை 26.02.2016 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் படிக்க எடுத்த நான், ஆரம்ப அட்டை முதல் நிறைவு அட்டை வரை ஒரு வரி விடாமல், மனதில் வாங்கிக்கொண்டு 05.03.2016 சனிக்கிழமை மதியம் 2 மணிக்குள் (ஒன்பது நாட்களுக்குள்ளாக) ரஸித்துப் படித்து முடித்துவிட்டேன். 

குளிக்கும் நேரம், சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களின் இந்த நூல் என் கைகளிலேயே தவழ்ந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வாசிக்காமல் இந்த நூலைக் கீழே வைக்கவே எனக்கு மனசு வரவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். பார்க்கப்போனால் இந்த நூல் பூராவும் இருப்பவை கட்டுரைகள் என்ற வகைப்பட்டன. கட்டுரைகள் எழுதுவதில் கதைகள் படிப்பதைப்போன்ற இவ்வளவு சுவாரஸ்யத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதுதான் ஜீவி சாரின் தனித்திறமையாக எனக்குத் தெரிகிறது. வாசித்துப்பார்த்தால் நீங்களும் அதைக் கண்டுகொள்வீர்கள். 

இந்த நூலில் குறையேதும் இல்லை என்பதே ஓர் சின்னக் குறையாகச் சொல்லலாம். 99.99% எழுத்துப்பிழைகளோ, அச்சுப்பிழைகளோ இல்லாமல் இருப்பது மேலும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இந்த 264 பக்கங்கள் கொண்ட நூலில் என் கண்களுக்குப் பட்டது மூன்றே மூன்று ... அதுவும் மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. (1) பக்கம் எண்: 127-இல் ஒரு வார்த்தையில் ‘று” என்று இருக்க வேண்டிய எழுத்து ‘ரு’ என அச்சடிக்கப்பட்டுள்ளது (2) பக்கம் எண் 159-இல் ’ஜீனோ’, ’மீண்டும் ஜீனோ’ என்று இருக்க வேண்டியது ’ஜெனோ’, ’மீண்டும் ஜெனோ’ என அச்சிடப்பட்டுள்ளது  (3) பக்கம் எண் 160-இல் ஒரு வார்த்தையில் ‘ய’ என்ற எழுத்து மட்டும் அச்சிடப்படாமல் விட்டுப்போய் உள்ளது. மொத்த நூலிலுமே என் கண்களில் பட்டது இவை மூன்றே மூன்று மிகச்சிறிய அச்சுப்பிழைகள் மட்டுமே. அந்த அளவுக்கு ஓர் ஈடுபாட்டுடன் மிகக் கடுமையாக உழைத்து இந்த நூலை ஜீவி அவர்கள் முழுமையாக MOST PERFECTION உடன் வெளியிட்டுள்ளார்கள். 

எழுத்துலகில் எத்கிஞ்சுது (கொஞ்சூண்டாவது) ஈடுபாடு உள்ள நான், இந்த நூலை படிக்க நேர்ந்ததை வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன். 

முழு மனத் திருப்தியுடன், இந்த அனுபவம் பெற காரணமாய் இருந்த இந்த நூலின் ஆசிரியர் ஜீவி சார் அவர்களுக்கு என் நமஸ்காரங்களுடன் கூடிய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


 


  


இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் ஓர் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.

ஜீவியின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' என்ற நூல் தமிழகத்தில்  கீழ்க்கண்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும்  என்கிற விவரம் நண்பர் ஜீவியின்  மூலமாக அறிந்தேன்.  இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க எண்ணமுள்ளவர்களுக்கு இந்தத் தகவல் உபயோகமாக இருக்கும் என்பதால் அதை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.


மதுரை: மல்லிகை புக் சென்டர், 11, மேலாவணி தெரு, 
ரயில் நிலையம் எதிரில், மதுரை. போன்: 2341739

கோவை: விஜயா பதிப்பகம், 20, ராஜ  வீதி, கோயம்புத்தூர். போன்:  2394614

ஈரோடு: பாரதி புத்தகாலயம், 39  SBI சாலை, ஈரோடு--1

பொள்ளாச்சி: நம்ம புக்ஸ், 12, பஜார் தெரு, பொள்ளாச்சி--1

சேலம்: பாலம் புக்ஸ், 36/2,  அத்வைத ஆசிரமம் சாலை, சேலம்-4. 
போன்:  2335952

தேனி: மாயா புக்ஸ், 28, மதுரை ரோடு, 
(பேருந்து நிலையம் எதிரில்), தேனி-1

சென்னை: சந்தியா பதிப்பகம், எண்: 77,  53வது தெரு, 9வது அவென்யூ, 
அசோக் நகர்,  சென்னை -600 083 போன்:  24896979

சென்னை: நியூ புக் லேண்ட்ஸ், 52/C,  வடக்கு உஸ்மான ரோடு, 
தி. நகர், சென்னை- 17


-oOo-

இன்று 21.04.2016 வியாழக்கிழமை 
’சித்ரா பெளர்ணமி’ 
என்ற நல்ல நாளில், இந்த என் தொடர் நிறைவடைந்துள்ளது 
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவருக்கும் சித்ரா பெளர்ணமி நல்வாழ்த்துகள்


சித்திரை மாதம் பெளர்ணமி திதியில், சித்திரை நக்ஷத்திரமும் கூடி வருவதால், சித்ரா பெளர்ணமி என அழைக்கப்படுகின்றது. மாதத்தின் பெயரும் நக்ஷத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பெளர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. 
இந்தப் பெளர்ணமி திதியும், சித்ரா நக்ஷத்திரமும், சித்திரை மாதமும் அம்மனுக்கு உரியனவாக இருப்பதனால், இந்த தினம் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்பான நாளாகும். 

அம்மனுக்குரிய இந்தச் சித்ரா பெளர்ணமி விரத நாளிலேயே, எமனின் சபையில் நம் பாவ புண்ணியக் கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்ரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுகிறது.


ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர் சித்திர குப்தனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் தொகுத்து அதற்கேற்ப மோக்ஷமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். 
எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் இந்த சித்திரை நக்ஷத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. 
அன்னை மீனாக்ஷி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், கள்ளழகர் மதுரை வைகையாற்றில் விழா காண்பதும், இதே சித்திரை மாத பெளர்ணமி தினத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


இறைவியாகிய அம்பாள், இயற்கையின் சக்தியாக, தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்த, அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் .... எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தாருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள். 


தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந்த நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால், நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.


அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. வெயிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை தானமாக அளிப்பது வழக்கம்.

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து, சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து, ஒரு மூங்கிலாலான முறத்தில், அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவைகளையும் தானம் செய்யலாம்.


'கொஞ்சம் வெட்டி பேச்சு'
வலைப்பதிவர்

சித்ரா

 'கொஞ்சம் வெட்டி பேச்சு' 

மிகப்பிரபலமானதோர் வலைப்பதிவரும், பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரமும், தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவரும், என்னை ’கோபு மாமா’ என அன்புடன் அழைப்பவருமான, நம் அன்புக்குரிய ’சித்ரா’ பிறந்த தினமும் ஒரு ’சித்ரா பெளர்ணமி’ அன்றுதான். அதனாலேயே அவருக்கு ‘சித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அதனாலேயே பெளர்ணமி முழு நிலவு போல சும்மா ஜொலிக்கிறாரோ என்னவோ, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு. :) 

சித்ராவின் தந்தை, பிரபலமான திரு. பொ.ம.ராசமணி அவர்கள் போலவே, சித்ராவும் மிகச் சிறந்ததோர் நகைச்சுவையாளர். 

ஜனவரி 2012 வரை, வலையுலகில் கொடிகட்டிப்பறந்து வந்த இவர், ஏனோ அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய பதிவுகள் ஏதும் தரவில்லை. 

இருப்பினும், சமீபகாலமாக சித்ரா பெளர்ணமி நிலவு போல ஃபேஸ்புக்கில் அடிக்கடி தோன்றி வருகிறார்.

 இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துகள் ..... சித்ரா. :)


 

அன்புடன் 
கோபு மாமாஇத்துடன் இந்தத்தொடரை நிறைவு செய்துகொண்டு 
தங்களிடமிருந்து தற்காலிகமாக 
விடைபெற்றுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள்,

(வை. கோபாலகிருஷ்ணன்)