என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 21 மே, 2017

'நாலடி கோபுரங்கள்’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்

திருமதி.

ஜெயஸ்ரீ

அவர்கள்

 


 


மின்னூல்கள் மூலம்
இவரைப்பற்றி நாம் அறிவது

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.




என் பார்வையில் 
’நாலடி கோபுரங்கள்’ 
மின்னூல்

மொத்தம் 82 பக்கங்கள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு நூலாகிய இதில் மொத்தம் நான்கு சிறுகதைகள் உள்ளன. அவற்றின் தலைப்புகள்:

(1) 11-12-13
(2) தாய்மையின் தாகம்
(3) நாலடி கோபுரங்கள்
(4) கண்கள் மாற்றும்

ஒவ்வொரு கதை பற்றியும், சுருக்கமாக ஒருசில வரிகள் மட்டும் இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.



(1) 11-12-13

கதையின் புதுமையான தலைப்பு: 11-12-13 

மிகவும் அருமையான விறுவிறுப்பான கதை. அசத்தலான உரையாடல்கள். இந்தக் கதையில் நான் எதைப் பாராட்டிச் சொல்வது, எதைப் பாராட்டாமல் விடுவது என்பதுதான் எனக்குள்ள மாபெரும் சிக்கலாக உள்ளது. ஒவ்வொரு சம்பவத்தையும் அவ்வளவு அழகாக நேரேட் செய்து எழுதியுள்ளார்கள்.

மதுரைப் பக்கத்து ஒரு கிராமத்து ஏழைப் பெண். பெயர் உமா. பிரஸவத்திற்காக மதுரை டவுனில் உள்ள புகுந்த வீட்டிலிருந்து, தன் பிறந்த வீட்டுக்கு (கிராமத்திற்கு) வந்திருக்கிறாள். அவளுக்கு இது தலைப்பிரசவம். படிப்பறிவு அதிகம் இல்லாத தாய், தந்தை. பட்டணத்தில் சினிமாவில் சண்டைக்காட்சிகள் சிலவற்றில் டூப் போட்டு நடித்துவரும் ஓர் தம்பி. எப்போதாவது சில சமயம் மட்டும் இங்கு தன் வீட்டுக்கு வருவான். 

தனக்கு நல்ல படியாக பிரஸவம் ஆகுமா? தாயும் சேயும் காப்பாற்றப்படுவோமா? பிறக்கப்போவது தன் மாமியார் சொல்லியனுப்பியுள்ளபடி ஆண் குழந்தையாக மட்டுமே இருக்குமா? அவ்வாறு இல்லாது போனால் 20 பவுன் நகையல்லவா கொண்டுவரணும்ன்னு அந்த மாமியார் சொல்லி அனுப்பியிருக்கிறாள், அதைத்தன் ஏழைத்தாயினால் கொடுக்க முடியுமா? என்ற பலவித கவலைகள் உமா என்ற அந்த வெள்ளந்தியான பெண்ணுக்கு. 

அருகில் உள்ள டவுனில் பிரபலமாக உள்ள டாக்டரம்மாவைத் தன் தாயுடன் சந்திக்கச் செல்கிறாள். தன் கவலைகள் அத்தனையும் ஒவ்வொன்றாக அந்த டாக்டர் அம்மாவிடமும், தன் அம்மாவிடமும் அழுது புலம்புகிறாள். அந்தப்பெண்ணின் தவிப்புக்களை ஜெயஸ்ரீ மேடம் தன் எழுத்துக்களில் வடித்துள்ளது மிகவும் அருமையோ அருமையாக உள்ளது. 

டாக்டரம்மா அவளுக்கு நம்பிக்கை அளிக்கிறாள். ”எல்லாம் சரியாகத் தான் உள்ளது. இன்னும் நான்கு நாட்களில் அதாவது வரும்  11.12.13 அன்று நல்லபடியாக நார்மலாகவே பிரஸவம் நிகழும். 10-ம் தேதியே இங்கு வந்து அட்மிட் ஆகிவிடு.  உன் கூடவே நான் இருப்பேன். எதற்கும் நீ கவலைப்படாதே” என்கிறாள்.  

வீடு திரும்பும் வரை தாயுக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்கள் நூலில் படித்தால் மட்டுமே ருசிக்கும். நடுவில் அவர்கள் இருவரும் இளநீர் குடிக்கும் இடமும், இளநீர் வியாபாரியும் இவர்களும் பேசும் பேச்சுக்களும் இளநீர் போன்ற நல்லதொரு ருசியாக உள்ளன. 


மகளுக்கும் தாய்க்கும் நடக்கும் ஓர் சின்ன உரையாடல்:

”எம்மா....... இந்தக் கொளந்த பொண்ணாப் பொறந்துடுமா?”

”ஏண்டி...... இந்த இளுவு இளுக்குறே... நீ எனக்கு சொகப்பிரெசவம்... நீ பொட்டை தானே முதல்ல....  உனக்கு என்ன வந்துச்சு..? எதுவா இருந்தா என்ன களுத, கை காலு நல்லா இருந்தா அதுவே போதும்”.

”இல்ல..... பொம்புளப் புள்ள பொறந்தா, பொறந்த வூட்டுலேந்து வரக்கொள்ள ஒரு இருபது பவுனு சேர்த்து எடுத்தாடின்னு என் மாமியா சொல்லிச்சு. அதான் ஒரே வெசனாமாருக்கு. நீ இருக்குற இருப்புல, பாப்பாவாப் பொறந்துச்சுன்னு வெய்யி, இருவது பவுனுக்கு எங்குட்டுப் போறது?”

”எடு வெளக்கமாத்த. சொமக்கறது நீயு.. அந்த எடுபட்ட சிறுக்கிக்கு இருபது பவுனு கேக்குதோ? அங்கனயே நீ இத்தச் சொல்லியிருக்கலாமில்ல.. நாலு வார்த்தை நாக்கப் புடுங்றாப்போல கேட்டு வெச்சிட்டு வந்திருப்பனே. அவ கிடக்கா விடு. அதுக்கா இம்புட்டு ரோசனை. புள்ளயப்பெத்து ஆறு மாசம் வீட்டோட செவனேண்டு இரு சொல்றேன். பெறவு பாரு தன்னால வளிக்கு வருவாப்பல”.


  
அதன்பின் பஸ் பிடிக்கக் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஓர் சைக்கிள் ரிக்‌ஷாவில் அவர்கள் இருவரும் ஏற நேரிடுகிறது. சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கும் இவர்களுக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் நல்லதொரு தமாஷ் மட்டுமல்லாமல், மேலும் நாம் படித்து அறியப்போகும் கதைக்கு மிக நல்லதொரு அச்சாரமாக அமைந்துள்ளது.  

தட்டுத்தடுமாறி இவர்கள் ஒருவழியாக தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தால்,  சினிமாவில் க்ரூப் டான்ஸ் ஆடும் க்ரேஸ் என்ற எவளோ ஒருத்தி அங்கு இவர்கள் வீட்டுக்குள் அமர்ந்திருக்கிறாள். 

யார் என்று கேட்டால் .... ”சினிமாவில் டூப் போடும் ஸ்டண்ட் மாஸ்டரான உங்கள் பிள்ளை ‘குஸ்தி குமாரின் காதலி’ நான். எனக்கு வரும் 11-12-13 அன்று பிறந்த நாள். அன்றைக்கே நானும் குமாரும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளோம். அவர்தான் என்னை இங்கு கூட்டியாந்தார் .... இப்போது எனக்கு டிஃபன் வாங்கியார வெளியே போயிருக்கிறார்” என்கிறாள்.

”அவன் டிஃபன் வாங்கி வருவதற்குள் இங்கிருந்து நீ மரியாதையாக ஓடிப்போய்விடு” என குஸ்தி-குமாரின் அம்மா அவளை மிரட்டுகிறாள். ”அவர் வந்து அவ்வாறு சொல்லிவிட்டால், நான் போய்விடுகிறேன்” என்கிறாள், சென்னையிலிருந்து மதுரைப் பக்கத்திற்கு வந்துள்ள பெண்ணான அந்த கிரேஸ். 

இதற்கிடையில் வெளியே சென்ற குஸ்தி-குமார் டிஃபன் பொட்டலத்துடன் வீட்டுக்குள் நுழைய வீட்டிலுள்ள ஒருவருக்கொருவர் குஸ்தி ஏற்பட்டு விடுகிறது. கோபத்தில் குஸ்தி குமார் தன் வயதான தாயாரையும், வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் அக்கா உமாவையும் அடித்து நெற்றியில் காயப்படுத்தி விடுகிறான். 

இதைப் பார்த்து அரண்டுபோய், அவனின் சுயரூபம் தெரிந்து, அவன் மேல் வெறுப்புக்கொண்ட, கிரேஸ் அவசரம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதி அங்கு வைத்துவிட்டு, அந்த அவர்களின் வீட்டைவிட்டுத் தப்பி ஆட்டோவில் ஏறி, ஆட்டோக்காரருக்கு ரூ. 300 பேசி, சென்னை பஸ்ஸை அவசரமாகப் பிடிக்க மாட்டுத்தாவணிக்குப் பறக்கிறாள். நடுவில் ஆட்டோக்காரர் தயவால், ரோட்டுக்கடையொன்றில் நான்கு இட்லிகளைப் பார்ஸலாக வாங்கி அவசரமாக தன் வயிற்றுப்பசிக்கும் சாப்பிட்டுக்குக் கொள்கிறாள்.  

இப்படியொரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தப்பிச்சென்று விட்டாளே என ஆத்திரம் அடைகிறான் குஸ்தி குமார்.  இதனால் மிகவும் ஏமாற்றமடைந்த குமார், கிரேஸ் என்ற அந்தப்பெண்ணை எப்படியாவது மதுரைக்குள் மடக்கிவிட திட்டமிட்டு, அவசரம் அவசரமாக ஊர் பூராவும் தேடிக்கொண்டு செல்கிறான். 

11-12-2013 நெருங்கி விடுகிறது. அன்று அதே ஆஸ்பத்தரியில் பெட் நம்பர் 11-இல் ஒருவரும், 12-இல் ஒருவரும், 13-இல் ஒருவரும் அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை பெறுகிறார்கள். யார் யார் அட்மிட் ஆனார்கள், எதற்காக அட்மிட் ஆகிறார்கள். யார் யாருக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. உமாவுக்குக் குழந்தை பிறந்ததா? அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? குமார்-கிரேஸ் லவ் மேரேஜ் என்ன ஆச்சு? எல்லாவற்றிற்கும் விடைகள் இந்த மின்னூலில் உள்ளன. அவசியம் படித்துப் பாருங்கள்.


(2) தாய்மையின் தாகம்


இது ஒரு மிகச்சிறப்பான படைப்பாக உள்ளது. இதில் வரும் கதாநாயகியான உமா வேலைக்குச்சென்று தனிமையில் தங்கி வாழும் ஓர் முதிர்க்கன்னியாக இருக்கிறாள்.

உமாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறாள். அக்கம் பக்கத்துக்கு குழந்தைகள் அனைவருமே உமா ஆன்டியுடன் மட்டுமே தங்களின் பெரும் பொழுதினை விளையாடியும், பாடங்கள் படித்தும், அவளிடம் பாடங்களில் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டும், அவள் உதவியால் வீட்டுப்பாடங்களை முடித்தும் தங்களின் வகுப்புக்களில் கூடுதலாக மார்க் வாங்கி வருகிறார்கள்.  

’பெற்றால் தான் பிள்ளையா?’ என நினைத்து சந்தோஷமாக அந்தக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள், உமா. இருப்பினும் தன்னை ’அம்மா’ என்று ஏதேனும் ஒரு குழந்தையாவது அழைக்காதா என்ற நியாயமான ஏக்கமும் மனதில் உள்ளது அவளுக்கு.

ஒருநாள் ஏதோவொரு சிறு பிரச்சனை ஏற்பட்டதில், அனைத்துக் குழந்தைகளின் தாய்மார்களும், தங்கள் குழந்தையை இனி அந்த உமா ஆன்டி வீட்டுக்குச் செல்லக்கூடாது என தடை போட்டு, கண்டித்துக் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். இதனால் உமாவுக்கு மட்டுமல்லாது அந்தக் குழந்தைகளுக்கும் தவிப்பு ஏற்பட்டு விடுகிறது. பெற்றோர்களும் அடுத்த ஓரிரு நாட்களிலேயே, உமா ஆன்டியைப் பார்க்காததால் ஏற்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளின் ஏக்கங்களையும், மனவாட்டங்களையும் பார்த்து சகிக்க முடியாமல் தவித்துப் போய் விடுகின்றனர்.

இதன் நடுவே வெளியூரில் உள்ள உமாவின் அண்ணனும் அண்ணியும் உமாவுக்குத் திருமணம் முடிக்க நினைக்கிறார்கள். ஊருக்கு உடனே புறப்பட்டு வரச்சொல்லுகிறார்கள். 

ஏற்கனவே பத்து வயதில் ஓர் பெண் குழந்தையுள்ள, மனைவியை இழந்து ஆறு வருடங்கள் ஆன ஒருவருக்கு இரண்டாம் தாராமாக வாழ்க்கைப்பட வேண்டி உமாவை அவளின் அண்ணி வற்புருத்திக் கேட்டுக்கொள்கிறாள்.  
மிகவும் விறுப்பான இந்தக் கதையில் மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை இந்த மின்னூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கோ.



(3) நாலடி கோபுரங்கள்

இதுவரை நான் படித்துள்ள கதைகளிலேயே ஒரு மிக அருமையான கதையாக இதனை நினைத்து நான் எனக்குள் மகிழ்ந்து கொண்டேன். மிகவும் உன்னதமான இந்தக்கதையின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் எத்தனை எத்தனையோ ஆழமாக கருத்துக்களை எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளார்கள் இந்தக்கதாசிரியர்! 

கதைக்கான தலைப்பு மிகப்பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்த உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே உருவத்திலும், உயரத்திலும், நிறத்திலும், குணத்திலும் வேறு பட்டவர்களாகவே உள்ளனர். 

குண்டு-ஒல்லி-நடுத்தரம்; உயரம்-குட்டை-நடுத்தரம்; சிகப்பு-கருப்பு-மாநிறம்; அழகானவர்-அழகற்றவர்; மனத்தாலும் குணத்தாலும் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உயரத்தில் சுமார் மூன்றரை அடிக்கு மேல் வளராத, ’ராஜா’ என சுருக்கமாக அழைக்கப்படும் ’ராஜராஜன்’ என்ற பெயருள்ள ஒருவரின் சோகக் கதையான இது படிக்கப்படிக்க என் நெஞ்சைப் பிழிந்து விட்டது. அவர் பிறரிடம் கேட்ட ஏச்சுக்களும், பேச்சுக்களும், அவர் தன் வாழ்க்கையில் பட்ட அவமானங்களும் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துக்களில் படித்த நான் நிஜமாலும் ஆங்காங்கே கண்ணீர் விட்டு அழுதே விட்டேன். மிக உன்னதமான எழுத்தாளரான ஜெயஸ்ரீ அவர்களின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ளணும் போலத் தோன்றியது.  
பொதுவாகப் பிறரைப்போல நார்மலாக இல்லாமல், இவ்வாறு ஒரு சின்ன குறையுடன் உயரம் குறைந்து பிறந்துவிட்ட இதில், இவருடைய குறையாக நாம் எதைச் சொல்லமுடியும்? இவருக்கும் பிறரைப் போன்ற நல்ல மனஸோ, ஆசாபாசங்களோ, உணர்வுகளோ இருக்கத்தானே இருக்கும். 

இவர் பிறக்கக் காரணமாக இருந்த இவரின் பெற்றோர்களுக்கே ஒரு ஸ்டேஜில் இவர் மேல் வெறுப்பு ஏற்பட்டு, அதனால் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுச் சண்டைகளால், இவரின் இந்த அதிசயப் பிறப்பினை மட்டுமே காரணமாகக் காட்டி, அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவது கொடுமையின் உச்சக்கட்டமாக உள்ளது.  

’காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று சொல்வார்கள் இந்த மனிதர்கள். அது காக்கைகளுக்கு மட்டுமே பொருந்தி, மனிதர்களுக்குப் பொருந்தாதோ என்னவோ. 

இதில் .. கூடப்படித்த மாணவர்களின் கிண்டல் கேலிகளையோ, தெருவில் செல்லும் பிற பொது ஜனங்களின் ஏச்சு பேச்சுக்களையோ, அலுவலக சக ஊழியர்களின் அலட்சியங்களையோ இங்கு என்னால் ஒவ்வொன்றாகச் சொல்லில் எடுத்துரைக்க முடியாமல் உள்ளன. கதாசிரியரின் ஒவ்வொரு சொற்களும் ஈட்டியாகப் பாய்ந்து,  யாருக்குமே இதுபோன்றதொரு கஷ்டம் வரக்கூடாது என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. 

இந்தக்கதையினில் ராஜாவுக்கு,  அவன் வாழ்க்கையில் ஓர் தன்னம்பிக்கை அளித்து, அவனின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, அவனை வாழ்க்கையில் முன்னேறச்செய்ய உதவியுள்ள ஒரே கதாபாத்திரம் அவனுடன் பள்ளியில் படித்த மாணவி ’ரேணுகா’ என்பவள் மட்டுமே.

ரேணுகாவுக்கும் நம் ராஜாவுக்கும் நிகழ்ந்த ஓர் உரையாடலை மட்டும் இங்கு நான் அப்படியே உங்கள் பார்வைக்குக் கொடுக்க விரும்புகிறேன்.


அம்மாவும் அப்பாவும் இணைந்ததற்கு ஆதாரமா நான் வந்து பொறந்தேன் .... அதே நான் இப்படி வந்து பொறந்ததால் அவா ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படிப் பிரிஞ்சு போயிட்டாளே ....  என்னோட துரதிஷ்டத்தை நினைச்சு நினைச்சு என் மனசும் உடல் போலக் குறுகிப்போச்சு.

பள்ளியில் ஒருநாள் இதையே நினைச்சுக்கிட்டு நான் தனியா அழுதுண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். கூடப்படிக்கும் ரேணுகாதான் என் அருகில் வந்து............ 

“ஏண்டா ராஜா அழறே? என்ன விஷயம்? பரிட்சையில் ஃபெயில் ஆயிட்டயா என்ன?

“இல்லை... நான் அதுக்கு அழலை”

”பின்ன.... ஏன் அழற ராஜா?”

”எனக்குச் சிரிக்கத் தெரியலையே... சிரிக்க முடியலையே.... என்ன செய்வேன், ரேணுகா. என்னைப் பார்த்தால் எல்லோரும் சிரிக்கறா.... என்னால் சிரிக்க வைக்க மட்டும்தான் முடிகிறது;

வீட்டில்தான் என்மீது அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு நினைச்சா இங்க க்ளாஸிலேகூட என்னைப் பார்த்தாலே எல்லோரும் கேலி செய்யறா. அப்பாவும் எங்களை விட்டுட்டு வீட்டை விட்டே எங்கேயோ போயிட்டா. இப்போ நான் வாழறதே வீண்;

இன்னிக்கு சயன்ஸ் பீரியடுலே பசங்க ’இவன் தான் ஹூமன் ஹைப்ரீட்’ அல்லது ’மனித பொன்சாய்’ எனச் சொல்லிச் சிரிச்சப்போ... அப்படியே ஏதாவது கடல்ல விழுந்து செத்துப் போயிடலாமான்னு தோன்றது ரேணுகா.... அப்படியே நான் விழுந்து செத்தாலும் என்னைப் பிணமா பார்க்கிறவாகூடத் தொட பயந்துண்டு தொட மாட்டாளேன்னு கவலையா இருக்கு.

”என்ன ராஜா நீ.... இப்படி அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே. பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம்ன்னு என் அம்மா சொல்லுவா. ஆனால் எந்த ஒரு உபயோகமும் இல்லாத யாருமே பிறப்பதும் இல்லையாம்.  சிறு துரும்பும் பல்குத்த உதவும்ன்னு கேள்விப் பட்டிருக்க தானே....? உயரமானவரோட பல் என்பதால் யாராவது கத்தி, கபடா, கடப்பாறையைப் பல் குத்த உபயோகிப்பாரா?  நீயே நினைச்சுப்பாரேன். அதுமாதிரிதான் நீயும்... ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா நடக்கும்.... உயிர் வாழ உயரம் மட்டுமே தகுதி இல்லைன்னு நீ புரிஞ்சுக்கோ”.

”நீ பேசும்போது கேட்க நன்னாத்தான் இருக்கு. நீ மட்டும் என்மேல் இருக்கும் அன்பில் என் குறை தெரியாம பேசற .... ரேணுகா.”

”உனக்கு என்ன குறை? உயரம் மட்டும் தானே. அதெல்லாம் ஒருகுறையே இல்லை. உன்னையாச்சும் எல்லோரும் குள்ளன்னு மட்டும்தான் சொல்றா. ஆனா இந்த உலகத்திலே எல்லோரும் எப்படியெல்லாம் இருக்கா தெரியுமா? எல்லாத்தையும் விடக் கொடுமை என்னவா இருக்குன்னு நினைக்கிறே நீ....?

போன வாரம் என் அம்மாவோடு என் மாமாவாத்துக்குப் போயிட்டு திரும்பி வந்துண்டு இருந்தோம். அப்போ எங்க கம்பார்ட்மெண்ட்டுக்குள் நாலு பேர் பிச்சை கேட்டுக்கொண்டு வந்தாங்க. எங்கம்மா சொன்னாங்க... அவங்க திருநங்கைகளாம். அப்படி இருக்கவங்களை வீட்டை விட்டுத் துரத்திப்புடுவாங்களாம். அவங்க இப்படித்தான் கூட்டம்கூட்டமா கைத்தட்டி எல்லோர்கிட்டயும் கையேந்தி ஜீவனம் நடத்துவாங்களாம். எவ்வளவு கஷ்டம் இல்லையா? ஒரு பெண் தன்னைப் பெண் என்று சொல்லமுடியாத நிலை. ஒரு ஆண் தன்னை ஆண் என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலை. இதைவிட நீ தேவலைடா ராஜா. நீயாவது உன் குறையை வாய்விட்டுச் சொல்லிடறே ... பேச முடியாதவா எல்லாம் என்ன பண்ணுவா ... யோசிச்சியா?

நம்ம இங்க்லீஷ் டீச்சர்கூட அன்னிக்குச் சொன்னாளே .... ’காலில் செருப்பு இல்லையேன்னு கவலைப்படுபவன்... ரெண்டு காலுமே இல்லாதவனைப் பார்க்கும் வரையில்தான் அப்படிக் கவலைப்பட முடியும்ன்னு’ .... நீயும் அவங்க சொன்னதைக் கேட்டல்ல.

”ம்ம்... கேட்டேன். நம்ம இங்க்லீஷ் டீச்சர் ரொம்பவும் நல்லவர். என்னிடம் ரொம்ப அன்பா பேசுவார்”                                    

ராஜாவுக்கு எதுவோ கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. 

”ரேணுகா நீ சொல்வது ஒரு விதத்தில் சரிதான். இருந்தாலும் எனக்குள் இருக்கும் பையனைப்பற்றி இவர்கள் ஏன் யாரும் புரிந்துகொள்வது இல்லை. எனக்கு நேர்ந்த இந்தச் சின்ன மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கும் இல்லையா? இது எனக்கு மட்டும் விதிச்ச விதியா என்ன?

”ராஜா.... அவர்கள் உன் வெளி உருவத்தை மட்டும்தான் பார்த்து கேலியும் கிண்டலும் செய்ய முடியும்.  அதுவே நீ நன்கு படித்து உன்னை ஒரு நிலைக்கு உயர்த்திக்கொண்டால், அவர்களுக்கு உன் இந்த உயரம் இணையாகி கண்ணுக்கு உன் குறையே தெரியாது. உன் உயரமே மறந்து மறைந்து போகுமடா ... நீ வேணாப் பாரேன்.  என்னிக்காச்சும் நான் சொன்னதை நீ நினைத்துப் பார்க்கும் காலம் வரும்”.

அதற்குள் பள்ளிக்கூட மணி அடிக்க இருவரும் கலைந்து போனோம். இன்றும் அது என் நினைவுக்குள் இருக்குது.

ரேணுகா அன்று என் பதினைந்து வயதில், என் சின்ன மனதில், அன்போடு விதைத்த சின்ன நம்பிக்கை விதைதான்.. இன்று வரை எனக்குள் மரமாக வளர்ந்து என்னை ஒரு உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் நானும் இந்த சமூகத்தின் சாட்டைப் பார்வையிலிருந்து தப்பிக்க எனக்குள் நானே ஒரு முகமூடி போட்டுக்கொண்டு, கூடாரத்திற்குள் எல்லோரும் சுற்றிலும் கைக்கொட்டிச் சிரிக்க, நான் ஒரு ஓரமாக பல்டி அடித்துக்கொண்டு, பந்து விளையாடிக்கொண்டும், தொப்பியைத்தூக்கி எறிந்துகொண்டும் இருந்திருப்பேன். இப்போ நாலடி இருக்கும் எனக்குள் ஒரு நாலடியாரே குடியிருக்கிறார்.  



கதையின் இறுதிப் பகுதியில் ராஜா மேலாளராக உள்ள அந்த அலுவலகத்தில் ஓர் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. யாராலும் துணிந்து செய்ய முடியாத ஒரு செயலை, ஆபத்பாந்தவனாக,  ராஜாவால் மட்டுமே செய்ய இயல்கிறது. அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் சுரக்கிறது. 

ராஜாவின் பிறவிப்பயன் என்னவென்பதே ராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் அன்றைக்கு மட்டுமே தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவரை இதுவரை கிண்டலும் கேலியும் செய்து வந்தவர்கள் வெட்கித் தலை குனிய நேரிடுகிறது. 

இதுவரை நாலடி கோபுரமாகவே பார்த்துப்பழகியவர்கள் கண்களுக்கு, இன்று மனிதாபிமானம் மிக்க ராஜா நானூறு அடி கோபுரமாக, மிக உயர்ந்து நிற்கிறார். 

அனைவரும் அவசியமாக ரஸித்துப் படிக்க வேண்டியதோர் அருமையான கதை இது. 


(4) கண்கள் மாற்றும்

அறுபத்து ஐந்து வயதான மாமியார். இதுவரை குடும்பத்துக்கு உதவியாக நல்ல உழைப்பாளியாக இருந்தவள் மட்டுமே. இப்போது கொஞ்சம் நாட்களாக கண்களில் ஏதோ பிரச்சனை. கண்களின் பார்வை  மங்கி வருகின்றன.  

ஊசி குத்துவது போன்ற தன் பேச்சுகளாலேயே மனதை நோகடிக்கும் ஓர் பொல்லாத மருமகள். இவளை மருமகளாகக் கொண்டுவர தான் பட்ட பாட்டையும், தன் மகனை சம்மதிக்க வைத்ததையும் நினைத்துப் பார்த்து மருகுகிறாள். கண் டாக்டரிடம்கூட கூட்டிச் செல்ல மறுக்கும் மருமகள். எல்லாம் வெளியூர் போயிருக்கும் உங்கள் மகன் இன்னும் இரண்டு நாட்களில் வருவார் .... அவர் கூட்டிட்டுப்போவார் என்கிறாள் வெகு அலட்சியமாக. அவன் கூட்டிக்கிட்டுப்போவான் என்று சொல்ல நீ யார்? என மனதுக்குள் நினைத்துக்கொள்கிறாள், அந்த மாமியார்.

வயதான அந்தத்தாயின் மகனும், மற்ற எல்லா ஆண்களையும் போலத் தன் மனைவிக்குப் பரிந்தே போக வேண்டிய நிலையாகத்தான் உள்ளது.


இடையில் நிகழும் ஒருசில சுவாரஸ்யமான காட்சிகளும் உரையாடல்கள்களும்:

”கீதா, இன்னைக்கு என்ன தேதி…? ”

”ஏன் உங்களுக்கு முதலமைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன..? தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா? என்றாள் …” அவள் குரலில் தான் ஏகப்பட்ட நையாண்டித்தனம்.

”இந்த மாதம் பத்தாம் தேதி இங்கே பக்கத்து தெருவிலே ஏதோ ஒரு அறக்கட்டளையும் அரவிந்த் கண் மருத்துவமனையும் சேர்ந்து ‘இலவசக் கண் பரிசோதனை முகாம்’ போடறாளாம். எதிர் வீட்டு கோமதி நேற்று தான் சொன்னா.. ”என்ன மாமி உங்களுக்கு இப்போல்லாம் சரியா கண் தெரியலையா? எல்லாத்தையும் தடவி எடுக்கறேளேன்னு சொல்லிட்டு, அந்த முகாமுக்கு போங்க, கண் புரை இருந்தா அறுவை சிகிச்சை இலவசமாகவே பண்ணுவாங்கன்னு. அதான் தேதியைக் கேட்டேன் தெரிஞ்சுக்கலாமேன்னு தான்”.

மாட்டுப்பெண் கீதா அவள் பெண் ஹரிணிக்கு தலை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டதும், எதிராளாத்து கோமதியா..? அவள் எதுக்கு இங்கே வந்தாள் ? அவகிட்டே நீங்க என்ன வம்பு பேசினேள்? இங்கே இருந்துண்டு அங்கே எங்களைப் பத்தி குற்றம் சொல்லிக் கொடுத்திருப்பேள், வேறென்ன, திங்கறது ஒரு இடம், கோள் சொல்றது இன்னொரு இடமாகும்” என்றபடி ‘நேராக் காட்டேண்டி’ என்று சொல்லி ஹரிணியின் தலையில் ஒரு இடி இடித்தாள் கீதா. 

-oOo-

வீடு பூரா பூரியும் கிழங்கு மசாலாவும் மணத்துக் கொட்ட, ஆசையாய் காத்திருக்கிறாள் மாமியார்.  ஆனால் அவளுக்கு மட்டும் கேழ்வரகு கஞ்சி தான் வருகிறது.


சபலத்தில் வாய் விட்டு கேட்டும்கூட, ”உங்களுக்கு சக்கரை இருக்கோன்னோ… பொறிச்சது, வறுத்தது இதெல்லாம் உடம்புக்கு ஆகாது… ஆசைக்கு ஒண்ணு ஆஸ்த்திக்கு ஒன்ணுன்னெல்லாம் இனிமேல் நாக்குக்காக வாழக்கூடாதாக்கும்” என்று நீட்டி முழக்கி கூனிக் குறுக வைக்கிறாள் கீதா என்ற அந்த ராக்ஷஸி 

-oOo-

”அவளைப் பொறுத்தவரை பையனைக் கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவிட்டால், அத்தோடு கடமை முடிந்து போச்சுன்னு விலகிண்டுடணுமாம். இல்லாவிட்டால் ராமா கிருஷ்ணான்னு ஒரு ஓரத்துல கிடைக்கணுமாம்;


அதெப்படி முடியும்? எத்தனை வருஷங்கள்… ஓடியாடிய உடம்பு. மனசுலயும், உடம்புலயும் இன்னும் தெம்பும், திடமும் இருக்கும் போது, எப்படி ஓரமா ஒதுங்கி வாழ முடியும்? நானும் நாலெழுத்து படிச்சவள் தான். சம்பாதிச்சவள் தான். முதுமை இப்போ தான் வந்தது. அந்தக் காலத்துல நான் பண்ணின வேலைகளிலே கால் பங்கு கூட இப்போ இவள் பண்றது கிடையாது. அதுக்குள்ளே போய் ரேழியில கிடன்னு சொன்னால் எப்படி?

இப்போது கொஞ்சம் கண் பார்வை மங்கியுள்ளதே தவிர, மூக்கோ, நாக்கோ, காதோ இன்னும் செயல்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என நினைத்துக்கொள்கிறாள் மாமியார். 

”கணவன் என்பவன் ஒரு பெண்ணுக்கு ஒரு இரும்பு வேலி மாதிரி. அவர் இருக்கும் வரை இப்படியெல்லாம் ஒரு நாளாவது பேசியிருப்பாளா இவள்… அவர் போனதுக்கப்பறம் தான் இப்படி என்கிட்ட வாலாட்டறாள். வெங்கிட்டுக்கு பார்த்துப் பார்த்து தலையில் கணம், மடியில் கணம், தோளில் கனம் பார்க்காமல், அவனையும் சம்மதிக்க வைச்சு இந்தக் கல்யாணத்தை முடிக்க நான் பட்ட பாடு நேக்குத் தான் தெரியும்” என மனதுக்குள் புலம்புகிறாள் அந்த மாமியார்.

-oOo-

வாசலில் காய்கறிக்காரியிடம் கீதா பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

”ஒரே விலை…ஆறு பூ ஐம்பது ரூபாய்…..” அவளது கறாரான குரலுக்கு எதிர் பேசாது…

”சரி எடுத்துக்க தாயீ … பூ நல்ல வெளஞ்சது தாயி ... பார்த்த்தியா எம்புட்டு பெரிசா இருக்குண்டு... அய்யர் ஊட்டம்மா எடுக்கும்னு தான் நானும் அம்புட்டையும் அள்ளியாந்தேன். வெலை கட்டாது தான்... என்ன செய்யிறது? தலை பாரமாச்சும் குறையுமே… வெய்யில் கொஞ்சமாவா அடிக்குது... சரி பணத்தை கொடு… இன்னும் நாலு வீடு போகணும்... என்றவள் பாட்டிம்மா இல்லியா?” என்கிறாள்.


”பாட்டிம்மா வாங்கினா ஒரு பூ தான் வாங்குவா….? இந்தாப் பணம் வாங்கிட்டு நடையைக் கட்டு….” என்றவள் கை கொள்ளாத வாழைப்பூக்களை கொண்டு வரும்போதே ”பாட்டிம்மா இல்லியா தோட்டிம்மா இல்லையான்னு ஒரு கேள்வி, என்னமோ இவளோட அவ கூட ஒட்டிட்டு பொறந்தா மாதிரி” ன்னு சொல்லிக் கொண்டே வந்து டைனிங் டேபிள் மேல் பூக்களை தொப்பென்று வைக்கிறாள் ... மருமகள் கீதா.

”இதோ.. இன்னைக்கு வாழைப்பூ உசிலி பண்ணிட்டு, வாழைப்பூ தொக்கு பண்ணிடலாம்னு தான் இத்தனை வாங்கினேன்… கொஞ்சம் ஆய்ஞ்சு வெச்சு பொடிஸா நறுக்கித் தாங்கோ…” என்றவள் கூடவே கத்தி ஒன்றையும் கொண்டுவந்து அருகில் வைத்தபடி சொல்லிவிட்டுப் போகிறாள்.



”போச்சுடா….. என் அரை குறை கண்ணை வெச்சுண்டு வாழைப்பூ நறுக்குவதாவது?” முடியாதுன்னு சொல்லவும் மனசு வராது.




கமகமவென்று வாழைப்பூவின் வாசனை அந்த இடத்தை ஆட்கொண்டது. அந்த மனத்தை ஆசைதீர முகர்ந்து பார்த்துக் கொண்டாள் … ”நல்லவேளை மூக்கு நன்னா வேலை செய்யறது….” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.... அருகில் யாருமில்லை என்ற தைரியத்தில்.



”ஏன்….நாக்குக்கு என்ன குறைச்சல்? அதான் நாலு முழம் நீளர்தே… அதை பண்ணித் தா…. இதைப் பண்ணித்தான்னு… காதோ கேட்கவே வேண்டாம்… பாம்புக் காது... நான் அங்க பேசினா இங்கேர்ந்துண்டு என்ன சொல்றே?ன்னு கத்துவேள். ம்ம்ம்…கொஞ்சம் சீக்கிரம் நறுக்கிடுங்கோ. நான் சமையலை முடிச்சுட்டு கொஞ்சம் வெளில போகணும்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்த போது மனசுக்குள் ஏனோ… ”இன்னும் நான் யாருக்காக இந்த உயிரை வெச்சுண்டு இருக்கணும்னு” தோணித்து அந்த மாமியாருக்கு. 

”எத்தனையோ கஷ்டப்பட்டாச்சு. கடைசி காலத்துலயாவது நிம்மதியா எனக்காக வாழணும்னு தோணறது. எனக்குன்னு நிறைய நிறைவேற்றிக்காத ஆசைகளை இன்னும் மனசுக்குள்ள வெச்சுண்டிருக்கேனே ... கூண்டுக்குள் கிடக்கும் குருட்டுப் பறவை போன்ற நிலைமைக்கு நானும் வந்தாச்சு.... சிவ சிவா,” எனப் புலம்புகிறாள்.

வெங்கிட்டுவும் ஊரிலிருந்து வந்தான். நேரம் பார்த்து அவனிடம் சொன்னாள் அந்தத்தாய். அதுக்கு உடனே அவள் மேலேயே வார்த்தையால் பாய்ந்தான். அது தான் வேதனை.

”நானா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு அடம் பண்ணினேன் . நீயாத் தானே இவளைப் பார்த்துட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தைக் கால்ல நின்னு அழிச்சாட்டியம் பண்ணினே. இப்போ எனக்கே தலைக்கு உசந்த பெண்குழந்தை இருக்கு. இன்னும் உன்னால தான் அவளை ஏத்துக்க முடியலை. கண்ணுக்கு பார்க்கணும்னு சொல்லு. பார்த்து விடறேன். அதை விட்டு அவாளை பத்தி எங்கிட்ட ஓதாதே. ஒண்ணும் நடக்காது. என்ன நடந்தாலும் நீ தான் அனுசரித்துப் போகணும். வயசாறதில்லையா…?”



இதைக் கேட்டதும், மேற்கொண்டு பேச அந்தத்தாயிடம் எதுவுமில்லை. சொல்ல நினைத்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள். கண்கள் மடை திறக்கக் காத்திருந்தது அதையும் அப்படியே உள்ளே அடக்கினாள். இனி அழக்கூடாது. தயங்கியபடி, ”அப்போ….வெங்கிட்டு…எ..ன்..னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துலே சேர்த்துடேன், புண்ணியமாய் போகும்...” தயங்கியபடியே சொன்னாள்.



”ஓ….அப்படியா…ம்ம்ம்.. அவளும் அதைத் தான் சொன்னாள். இதோ பாரும்மா... என்னாலே ரெண்டு பக்கமும் தவில் மாதிரி அடி வாங்க முடியலை. உன் இஷ்டப் படி செய்யறேன்” என்றவன் ஒருவித நிம்மதியுடன் எழுந்து கொண்டான்.



”சீ....இதுதானா நீ?” அவன் சொல்வதைக் கேட்கக் கேட்க பூமி பிளந்து தன்னை இழுத்துக் கொள்ளாதா என ஏங்குகிறது அந்தத்தாயின் உள்ளம். இனியும் இங்கு இருப்பதில்….. மனம் யோசிக்க முடியாது ஸ்தம்பித்தது.

மேற்கொண்டு என்ன ஆச்சு? மின்னூலில் படித்து அறியவும். மிகவும் அருமையான சுபமான, சுகமான, வித்யாசமான முடிவாகவே கொடுத்துள்ளார்கள், திருமதி ஜெயஸ்ரீ அவர்கள்.



புதிய மின்னூல் ஆசிரியர் ‘ஜெயஸ்ரீ’ அறிமுகம்

’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை

’தொலைத்ததும் கிடைத்ததும்’ - மின்னூல் - மதிப்புரை

’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் - மதிப்புரை

’காய்க்காத மரமும்....!’ - மின்னூல் - மதிப்புரை

’டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் - மதிப்புரை

  

  
  
 

   



     

  



   


அறுசுவை விருந்தென 
 தனது ஆறு மின்னூல்களை இதுவரை
 அன்பளிப்பாக எனக்கு அனுப்பி வைத்து 
வாசிக்க வாய்ப்பளித்துள்ள
 திருமதிஜெயஸ்ரீ மேடம் 
அவர்களுக்கு 
என் அன்பான நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்







 

இந்த  மின்னூல்களை முழுமையாகப் படிக்க விரும்புவோர் இதோ 
இந்த இணைப்பிற்குச் சென்று BUY NOW என்பதை க்ளிக் செய்யவும். 
மின்னல் வேகத்தில் மின்னூல்கள் உங்களை வந்தடையும்.    

 படிச்சு ..... சும்மாக் கலக்குங்கோ !

 

’ஜெயஸ்ரீ’ 
அவர்களின் மின்னூல் மதிப்புரைகள் இத்துடன்
தற்காலிகமாக நிறைவடைகின்றன.


 





என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]