என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 11 நவம்பர், 2015

நேயர் கடிதம் - செல்வி. மெஹ்ருன் நிஸா


செல்வி. 
 மெஹ்ருன் நிஸா 
அவர்களின்  
உருக்கமான நேயர் கடிதம்

 


 குரு வணக்கம்


என் குருஜி கோபு சாரின் வலைத்தளத்தினில் 
2014ம் ஆண்டு நடைபெற்ற 40 வார 
‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ பற்றியும், 
அவற்றில் பங்குகொண்டு வெற்றி பெற்றுள்ள 
பலரின் மிகச்சிறப்பான விமர்சனங்களையும், 
இறுதியில் 2014 அக்டோபர் மாதத்தில் 
அந்தப்போட்டிகளில் கலந்துகொண்டுள்ள 
பலரும் எழுதியிருந்த நேயர் கடிதங்களையும் பார்த்து, 
படித்து எனக்குள் பரவஸப்பட்டு மிகவும் மகிழ்ந்து போனேன்.    

அந்த நேயர் கடிதங்களுக்கான இணைப்புகள்:




2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் எழுதப்பட்டிருந்த மேற்படி நேயர் கடிதங்களில், குருஜி கோபு சார் 2014ம் ஆண்டு தன் வலைத்தளத்தினில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ பற்றிய அருமை பெருமைகளையும், குருஜி கோபு சாரின் கதை எழுதும் தனித்திறமைகள் பற்றியும், விலாவரியாக ஒவ்வொருவராலும் சொல்லப்பட்டிருந்தன. எனக்கு அவைபற்றியெல்லாம் ஏதும் விபரமாக அப்போது தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறு நிறைய பேர்களுடைய நேயர் கடிதங்களைப் படித்ததும், எனக்கும் அதுபோல ஒரு நேயர் கடிதம் நான் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ..... புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக..... 


இந்த 2015ம் ஆண்டு குருஜி கோபு சார் நடத்திவரும் 
100% பின்னூட்டமிடும் போட்டியில் http://gopu1949.blogspot.in/2015/03/120404.html கலந்துகொண்டு நானும் இப்போது வெற்றி பெற்றுள்ளதால், அதைப்பற்றியே ஓர் நேயர் கடிதம் எழுதி இப்போது அனுப்ப மிகச்சரியான சந்தர்ப்பமும் அமைந்துள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.  

மற்ற பதிவர்களுக்கெல்லாம் குருஜி கோபு சாருடன் பல வருஷங்களாகப் பழக்கம் இருக்கும் என நினைக்கிறேன். குருஜிக்கும்கூட ஒவ்வொருவரிடமிருந்தும் வேவ்வேறு மாதிரியான அனுபவங்கள் இதுவரை கிடைத்திருக்கக்கூடும். குருஜி மற்ற பதிவர்களின் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தி ஊக்கம் கொடுத்து வருவதை தங்களில் பலரும் தெரிந்திருப்பீர்கள் 

எனக்கு குருஜியோட இப்போ ஒரு ஆறு மாதங்கள் முன்புதான் பழக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் தான் பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தேன். பிறகு என் மனசு பூராவும் ஒரே உதறல்தான். நம்மளப்போய் ஃப்ரெண்டா ஏத்துக்கிடுவாங்களா என்று. அடுத்த நாளே அக்ஸப்ட் பண்ணி சந்தோஷமான ஷாக் கொடுத்து விட்டார்கள். பெரிய மனுஷங்க எப்போதுமே பெரிய மனுஷங்கதான்.  

அதுசமயம் வலைப்பதிவு பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. குருஜியின் பதிவுகள் சிலவற்றைப் படித்தேனே தவிர என்னால் அவற்றிற்கு பின்னூட்டம் இட இயலவில்லை.  நாமும் நம் பெயரில் தனியே ஓர் வலைப்பதிவு வைத்துக்கொண்டால் மட்டுமே, பிற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடமுடியும் என பிறகு நான் தெரிந்துகொண்டேன். எங்கெங்கேயோ தேடிப்பிடித்து நானும் ஓர் வலைப்பதிவு தொடங்கிவிட்டேன். ஆனால் முதலில் ஆரம்பித்த அது என்னவோ சொதப்பிக்கிச்சு. 

மறுபடியும் வேறு ஒரு பெயரில் மீண்டும் புதிதாக வலைப்பதிவு ஒன்று ஆரம்பித்தேன். அதன்பிறகு மட்டுமே குருஜி பக்கம் வந்து கமெண்ட்ஸ் போட முடிந்தது. வலைப்பக்கம் தொடங்கியபிறகு ஏதேனும் அதில் நான் எழுதணும் இல்லையா. என்ன எழுதுவது என்றே எனக்கு எதுவும் புரியவில்லை. குருஜியின் அற்புதமாக பதிவுகளையும், அதில் அவர் காட்டிவரும் அழகான படங்களையும், அதற்கு அவருக்குக் கிடைக்கும் பலரின் சூப்பரான பின்னூட்டங்களையும் பார்த்து, படித்து, எனக்குள் நான் பெருமூச்சு விட்டுக்கொண்டேன். 

பதிவுகளில் படங்களை இணைப்பது எப்படி என்று கேட்டு, குருஜியைத் தொந்தரவு செய்து நச்சரித்துக்கொண்டே இருந்தேன். சின்னக்குழந்தைக்குச் சொல்லி புரிய வைப்பதுபோல அழகாக பொறுமையாக ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகச் சொல்லிக்கொடுத்தாங்க, குருஜி. அதை நான் நன்கு புரிஞ்சுக்கிட்டு, பதிவினில் படங்களை இணைக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். யாரு இப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணுவாங்க ? 

அதுமட்டுமா, என் புத்தம் புதிய வலைப்பதிவுப் பக்கம் வந்து முதன்முதலாக சில கமெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப் படுத்தியிருந்தார்கள் நம் குருஜி. 




அந்த நேரம்தான், ’நினைவில் நிற்கும் பதிவர்களும் பதிவுகளும்’ என்ற தலைப்பினில் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கு, சுமார் 170 பதிவர்களின் ஆயிரக்கணக்கான பதிவுகளைச் சிறப்பித்தும், அவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறமைகளையெல்லாம் சொல்லி கெளரவப்படுத்தியும், தனது பதிவுகளில் எழுதி வெளியிட்டு வந்தார்கள். அதில் 35ம் நிறைவுத் திருநாள் அன்று புதுப்பதிவராகி நான்கே நாட்கள் மட்டும் ஆகியிருந்த என்னையும், அறிமுகப்படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துட்டாங்க. இதைக்கண்ட என் கண்களில் ஆனந்தக்கண்ணீரே வந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2015/07/35.html

என் அம்மி (தாயார்) பள்ளிக்கூடப்பக்கமே போனது இல்லை. அவர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. குருஜி கோபு சார் எழுதிய கதைகளை ஒவ்வொன்றாக அவர்களுக்கு நான் படித்துக்காட்டுவது உண்டு. மிகவும் ஆர்வமாக ரஸித்துக் கேட்டுப்பாங்க. நடு நடுவே சூப்பராக என்னிடம் தன் கருத்துக்களைக் கமெண்ட்டா அழகா நகைச்சுவை கலந்து பகிர்ந்து சொல்லி மகிழ்வாங்க.  குருஜி கதைகளை நான் படித்துச் சொல்லும்போதும், என் அம்மி அதனை கவனமாகக் கேட்கும் போதும், இருவருக்குமே ஒரே சிரிப்புப் பொத்துக்கொண்டு வரும்.

அப்போதுதான் எனக்கும் இந்த 2015ம் ஆண்டு நம் குருஜி அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டி பற்றிய தகவலே தெரிய வந்தது. இதுபற்றி எனக்குத் தெரிய வந்தது 2015 செப்டெம்பர் கடைசி வாரத்தில் மட்டுமே.

”விருப்பப்பட்டால் இந்த 2015ம் ஆண்டு, நான் அறிவித்துள்ள பின்னூட்டப்போட்டியில் நீங்களும் கலந்துகொள்ளலாம்” என குருஜி என்னிடம் சொன்னார்கள். 


”போட்டிக்கான இறுதித்தேதிக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட இல்லை என்பதால், நான் எப்படி அதற்குள் குருஜியின் 750 பதிவுகளுக்கும் கமெண்ட்ஸ் போட முடியும்? என்னால் இயலாது” எனச் சொல்லிவிட்டேன். உடனே குருஜி என்னை உற்சாகப் படுத்தினாங்க. ”முயற்சியே பண்ணாமல், என்னால் இயலாது என்று சொன்னால் எப்படி? ..... முதலில் நீங்க முயற்சி செய்து பாருங்க”ன்னு சொன்னாங்க.



ooooooooooooooo

அப்போ எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது:

கடவுளைக் கண்மூடித்தனமாக நம்பும் ஒரு ஆள் சாமியிடம் போனார். “சாமியே, உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன்.  இந்த மாத லாட்டரியிலே முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் இடது கையை வெட்டிக்கொள்வேன்” என்று வேண்டிக்கொள்கிறார். ஆனால் அந்த மாதம் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. மறுமாதமும்  சாமியிடம் வருகிறார். “சாமியே,  உன்னைத்தான் முழுசா நான் நம்பியிருக்கேன். சென்ற மாதம் இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே.  இந்த மாத லாட்டரியிலேயாவது ’முதல் பரிசு ‘ஒரு கோடி ரூபாய்’ எனக்கே கிடைக்கணும். இல்லாவிட்டால் என் வலது கையையும் வெட்டிக்கொள்வேன்”  என்கிறார். அந்த மாத லாட்டரியிலும் அவருக்குப் பரிசு கிடைக்கவில்லை.

இதைப்பார்த்த சாமியோட பொஞ்சாதி சாமிகிட்டே “அவன் உங்க மேலே இப்படியொரு பக்தியோட இருக்கானே, ஏன் நீங்க அவனுக்கு பரிசுப்பணம் கிடைக்கச் செய்யாமல் இருக்கீங்க” என்கிறார்கள். அதற்கு அந்த சாமி “போடி பைத்தியக்காரி, இங்க பாரு ..... நான் பெட்டி நிறைய பணத்தை வெச்சுக்கிட்டு தயாராகத்தான் இருக்கேன். அவன் லாட்டரி டிக்கெட்டே இதுவரைக்கும் வாங்கவே இல்லையே ...... அதாவது அவன் அதற்கான சிறிய முயற்சியைக்கூட செய்யவில்லையே” என்கிறார். சாமி சொல்வதும் மிகவும் கரெக்ட் தானே !

ooooooooooooooo


அதுபோலவே நானும் இருந்துவிடக்கூடாதுன்னு குருஜி பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடுகிற முயற்சிகளில் இறங்கி விட்டேன். தினமும் என்னென்ன பதிவுகளுக்குக் கமெண்ட்ஸ் போடணும்ன்னு, மூன்று மூன்று மாதப்பதிவுகளுக்கான லிங்ஸ் அனுப்பி அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கொண்டே வந்தார் நம் குருஜி. ”முயற்சி செய்தால் உங்களாலேயும் ஜெயித்துக்காட்ட இயலும்” என்று எனக்கு அடிக்கடி தன்னம்பிக்கையை ஊட்டி வந்தார் குருஜி.


தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்து வந்த நான் ஒரு காலக்கட்டத்திற்குப்பிறகு ”உங்களோட ஆன்மிகப் பதிவுகளுக்கெல்லாம் என்ன மாதிரி கமெண்ட்ஸ் கொடுக்கணும்ன்னு எனக்கு விளங்கவே இல்லை. அதனால் போட்டியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்” என்று மிகவும் வருத்தத்துடன் சொன்னேன். 

போட்டியில் பாதிக்கிணறு தாண்டிவிட்ட என்னை குருஜி அப்படியே அம்போன்னு விட்டுடுவாரா என்ன? தடுத்தாட்கொண்டார்கள்.:) ஆன்மிகப்பதிவுகளுக்கு மட்டும் எப்படி எப்படியெல்லாம் சிக்கலில்லாமல் பின்னூட்டங்கள் கொடுத்து நான் தப்பிக்கலாம் என ஒருசில ஆலோசனைகளும் சொல்லி, ஒருசில விசேஷ சலுகைகளும் தனியாக எனக்கு மட்டும் அளித்து,  நான் என் கமெண்ட்ஸ்களைக் கண்டின்யூ செய்ய வைத்தார்கள். 

மேலும் ”எனக்கு எல்லோரையும் போல தமிழில் அழகாக எழுத வராது .... எனக்குத் தமிழ் கொச்சையாக மட்டுமே எழுத வரும்” என்று நான் குருஜியிடம் சொல்லி வருத்தப்பட்ட போது, “அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது .... உங்களுக்கு எப்படி தமிழ் எழுத வருமோ அப்படியே எழுதுங்கோ போதும்” என்று சொல்லி ஊக்கப்படுத்தி விட்டார்கள்.   


இந்தப்போட்டியிலே நான் கலந்துகொண்டதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் இதற்கான பரிசுப்பணம் ரூபாய் ஆயிரம் (ரூ. 1000) என்பதால் மட்டுமே. எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாகவே இல்லை. மிடில் கிளாஸ் ஐ விட ஒருபடி கீழ்மட்டமாகவே இன்றும் உள்ளோம். இந்தப்பரிசுப்பணம் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரியதொரு தொகையாகும். எப்படியும் இந்தப்போட்டியில் நான் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வெறியையும் பேராசையையும் எனக்குள் தூண்டி விட்டது. 07.10.2015 அன்று பின்னூட்டமிட ஆரம்பித்து 06.11.2015 அன்று [வெறும் 31 நாட்களுக்குள்] குருஜியின் அனைத்து 750 பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு முடித்து விட்டேன்.

போட்டியில் நான் வெற்றிபெற்றுவிட்டதற்கான செய்தியை குருஜி வாயிலாகக் கேட்டதும், மகிழ்ச்சியுடன் கனவு காண ஆரம்பித்தேன். அந்த பரிசுத்தொகையை எப்படியெல்லாம் செலவு செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் போட்டுகிட்டு செலவுகளைக் கூட்டிப்பார்த்தால் ரூ. 1000 போதாமல் பக்கத்தில் ஒரு ஜீரோ சேர்த்து ரூ. 10000 ஆக அது வந்து நின்று என்னை பயமுறுத்தியது. பிறகு சிறிய குறைந்தபட்ச தேவைகளுக்கான பட்ஜெட்டில் ஓர் புதிய லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.

என் அம்மிக்கு (தாயாருக்கு) காலையிலே நாஸ்தாவாக ’குட்-டே’  பிஸ்கட் கொடுத்தால் அது மிகவும் இஷ்டமாகச் சாப்பிடும். அதனால் அம்மிக்கு ஒரு மாதம் முழுக்க சாப்பிட ‘குட்-டே’ பிஸ்கட் பாக்கெட்கள் ஒரு 10 அல்லது 15 வாங்கி வைக்கத்திட்டமிட்டேன். 


 

 


அடுத்ததாக என் அண்ணனுக்கு நல்லதா காட்டன்லே பேண்ட் + ஷர்ட் வாங்கித்தரணும் என்று குறித்துக் கொண்டேன். 

எனக்கு நல்லதொரு பேனா வாங்கிக்கொள்ள வேண்டும். இங்க் ஊற்றி எழுதும் நிப் உள்ள பேனா மட்டுமே எனக்குப் பிடிக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்கு என்னவோ இந்த பால்-பாயிண்ட் பேனாக்கள் பிடிப்பதே இல்லை. ஒஸ்தியான பார்க்கர் பேனா வாங்கிக்கொள்ளணும் என குறித்துக்கொண்டுள்ளேன். 

ஒஸ்தியான பெளண்டைன் பேனா வாங்கி அதிலேயே என்னோட C.A., (Chartered Accountants) பரிட்சையை எழுதி முதல் ரேங்கிலே பாஸ் பண்ணிவிடனும் என்பது என் ஆசை. 




இதிலே அம்மிக்கு நான் அளிக்கப்போகும் பிஸ்கட் ஒரு மாதத்திற்குள் காலி ஆகிவிடும். என் அண்ணனுக்கு நான் அளிக்கப்போகும் பேண்ட் + ஷர்ட் கொஞ்ச நாட்கள் கழித்து கசங்கிக் கிழிந்துபோகவும் கூடும். 

ஆனால் என் பேனா மட்டும் பெர்மணெண்டாக என் கிட்டேயே குருஜியின் நினைவாக போற்றிப் பாதுகாத்து என்னால் வைத்துக்கொள்ளப்படும்.

கமெண்ட்ஸ் போட்டியிலே ஒரு மாதத்துக்குள்ளாகவே நான் ஜெயித்துள்ளேன் என்றால் அதற்கு நான் மட்டும் காரணமில்லை. எனக்குத் தன்னம்பிக்கை + ஊக்கம் + உற்சாகம் எல்லாம் கொடுத்து என்னை ஜெயிக்க வைத்த பெருமையெல்லாம் எங்கட குருஜியை மட்டிலுமே சேரும். நன்றி குருஜி.



இப்படிக்கு,
 
 
MEHRUN NIZA

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


07.11.2015 அன்று செல்வி. மெஹ்ருன் நிஸா அவர்கள். தனக்கே உரிய கொச்சைத்தமிழில் எழுதி எனக்கு அனுப்பியிருந்த ‘நேயர் கடிதம்’ இதோ இங்கே கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பதிவினை வாசிக்கும் அனைவருக்கும் அது நன்கு புரிய வேண்டுமே என்பதற்காக மட்டுமே, அது மேலே சற்றே மெருகூட்டி என்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. -vgk

-=-=-=-=-=-=-=-=-=-

நேயர் கடிதாசி. (முருகு)

குரு வணக்கம்.


இங்கன நெறய பேருங்களோட நேயர் கடிதாசில்லா படிச்சிகிட்டன். எனக்கும் அதுபோல ஒரு கடிதாசி எளுதிபிடோணுமுனு தோணிபோச்சி ( புலிகள பாத்து இந்த பூனயும் சூடு போட்டுகிட ஆசப்பட்டிச்சி.)

மத்தவங்க எளுதின கடிதாசிலலா சிறுகத விமரிசன வெவரங்க குருஜியோட கத எளுதும் தெறம அல்லா பாராட்டி சொல்லினாக. எனக்கு அதுபத்திலா ஏதும் தெரியாது. 

மத்தவங்களுக்கெல்லா குருஜியோட பல வருசமா பளக்கம் இருக்குது. குருஜி கூட ஒவ்வொருத்தங்களுக்கும் வேற வேற மாதிரி பட்ட அநுபவங்க கெடச்சிருக்கும். மத்தவங்க எளுத்த பாராட்டி உற்சாக படுத்தி ஊக்கம் கொடுப்பத அல்லாருக்குமே தெரிஞ்சிருப்பீங்க.

எனக்கு குருஜியோட இப்ப ஒரு 6--- மாசமின்னதான் பழக்கம் கெடச்சிச்சி. ஃபேஸ் புக் ல தான் பாத்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டு அனுப்பிகிட்டன். பொறவால மனசு பூராக்கும் ஒரே ஒதறலுதான். நம்மள அல்லா ஃபரண்டா ஏத்துகிடுவாங்களா?  அடுத்த நாளே அக்ஸப்ட்பண்ணி சந்தோச ஷாக் கொடுத்தாக. பெரிய மனுசங்க எப்பயுமே பெரிய மனுசங்கதா.

அப்பதா இந்த பின்னூட்ட போட்டி பத்தி தெரிய வந்திச்சி அப்பவே செப்டம்பர் மாதக் கடசிவாரம் ஆகிபோச்சி. வலைப்பதிவு பத்திலா ஏதுமே தெரிஞ்சிருக்கல. குருஜி பதிவு படிச்சி கமண்டு கூட போட ஏலல. நாமளும் வலப்பதிவு வச்சிருந்தாதா கமண்டு போட ஏலும் போலன்னு எண்ணி போட்டு எங்கெங்கியோ தேடி புடிச்சி வலப்பதிவு ஆரம்பிச்சு போட்டேன் 

அது சொதப்பிகிச்சி. மறுக்காவும் வேற ஒன்ன ஆரம்பிச்சினேன். பொறவாலதா குருஜி பக்கம் வந்து கமண்டு போட மிடிஞ்சிச்சி. வலைப்பக்கம் தொடங்கிய பொறவால ஏதாச்சும் பதிவு போடோணுமில்ல. இன்னா எளுதறதுன்னுபிட்டு ஏதுமே வெளங்கல. குருஜி பதிவெல்லா எம்பூட்டு சூப்பரா இருந்துகிடுமோ அதவிட அவங்க போடுற போட்டோ படங்கல்லா அத்தர சூப்பரா இருந்துகிடும். 

படம்லா எப்பூடி போடணுமினு குருஜிய தொந்தரவு பண்ணிபிட்டேன்ல. பச்ச புள்ளக்கி சொல்லி வெளங்க வைக்காப்புல ஸ்டெப பை ஸ்டெப்பா வெளக்கினாக. 

புரிஞ்சிகிட்டு படம்போட கத்துகிட்டேன. ஆரு இப்பூடில்லா ஹெல்ப் பண்ணுவாக. அதுமட்டுமா என் பக்கம் (பதிவு பக்கம்) வந்து கமண்டுக போட்டு உற்சாக படுத்தினாக. அந்த நேரம்தா குருஜி வலைச்சர ஆசிரியரா பொறுப்பு ஏத்துகிட்டாக. நெறய பதிவர்களை அவங்க தெறமய அல்லா சொல்லி அறிமுக படுத்தினாக. கடசி நாளன்னக்கி என்னயும் அறிமுக படுத்தி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துபிட்டாக. பதிவு தொடங்கி நாலே நாளுல புத்தம் புதிய பதிவருன்னுபிட்டு அறிமுகம் செய்தாக. சந்தோசத்துல அளுவாச்சியே வந்திச்சி.

எங்கட அம்மி பள்ளியோட பக்கமே போனதுல்ல. எளுத படிக்கலா ஏலாது. குருஜியோட கதலா படிப்பிச்சி காட்டிபோடுவேன. ஆர்வமா ரசிச்சு கேட்டுகிடும் மிடில் மிடிலா சூப்பரா ஜோக்கா கமண்டிடும். ரெண்டு பேத்துக்கும குருஜி கதகள படிசசி னா சிரிப்பாணி பொத்துகிடும் 

பின்னூட்ட போட்டில கலந்துகிட குருஜி சொல்லினாகல்ல. டைமு ரொம்ப கம்மி இருக்குது மூணு மாசத்துக்குள்ளாற 750--- பதிவுக்கு எப்பூடி கமண்டு போட ஏலும் என்னால ஏலாதுன்னுபிட்டு சொல்லினன். குருஜி என்னய உற்சாக படுத்தினாக. முயற்சியே பண்ணிகிடாம என்னால ஏலாதுன்னா எப்பூடி. முயற்சி பண்ணிபாருன்னாக

அப்ப ஒருகத நெனப்புல வந்திச்சி. ஒரு ஆளு கடவுள கண்மூடித்தனமா நம்புறவர் ஒருக்கா சாமி கிட்டத்துல போயி சாமி உன்னயதா முளுசா நம்பிஇருக்கேன். இந்த மாச லாட்டரில மொதபரிசு ஒருகோடி எனக்ககு கெடைக்கோணுமினு அல்லாகாட்டி என் எடது கையை வெட்டிகிடுவேன்னு வேண்டிகிடுறான். அந்த மாசம் அவனுக்கு பரிசு கெடைக்கல. மறுமா சமும் கடவுளு கிட்டால வாரான். சாமி ஒன்னயதானே முளுசா நம்பிகினேன். இப்பூடி ஏமாத்தி போட்டியேன்னு அளுதான. சரி இந்த மாசத்துலாவது மொத பரிசு ஒருகோடி வாங்கி தந்துபோடோணுமு அல்லா காட்டி என் வலது கையும் வெட்டிகிடுவேன்னுரான். அந்த மாசமும் பரிசு கெடைக்கல.. சாமியோட பொஞ்சாதி சாமியாண்ட கேக்குறாக. ஒங்கட மேல இப்பூடி பக்தியா இருக்கான்ல ஏன் பரிசுபணம் கெடைக்க செய்யலன்னுரா. அதுக்கு அந்த சாமி சொல்லிச்சி போடி பைத்தியகாரி இங்க பாரு நா பொட்டி நெறய பணத்த வச்சிகிட்டு தயாராதா இருக்கேன். அவன்லாட்டரி டிக்கட்டே வாங்கிகிடலியே. அப்பூடின்னாரு.

அதாவது அவன் முயற்சியே செய்யலியே ங்குறாரு. டிக்கட்டு வாங்கறதுன்ற சின்ன முயற்சி செய்திருந்தா பணத்த கொடுத்திருப்பேன்னாரு கரீட்டுதானே

அதுபோல நா இருந்துகிட கூடாதுன்னுபிட்டு கமண்டு போடுற முயற்சில எறங்கி போட்டேன். மாசா மாசம் இன்னல்லா பதிவுகளுக்கு கமண்டு போடணுமின்னுபோட்டு வரிசயா லிங்க் அனுப்பி என்ன உற்சாகமும் ஊக்கமும் படுத்தினாக. முயற்சி செஞ்சா உன்னாலயும் கெலிச்சிகிட ஏலும்னு எனக்கு அடிக்கடி தன்னம்பிக்க வர வச்சாக.

ஒங்கட ஆன்மிக பதிவெல்லா இன்னா மாதிரி கமண்டு போடோணுமனுபிட்டு வெளங்கல நா போட்டீலந்தே வெலகிபோடுறேன்னுபிட்டு வருத்தமா சொல்லினன். குருஜி என்ன அப்பூடில்லா விட்டு போடுவாகளா??? தனியா எனக்குனு ஸ்பெசல் சலுக கொடுத்து கமண்டு கன்டின்யூ பண்ண வச்சாக. பொறவால எனக்கு அல்லாரயும்போல நல்ல தமிளு எளுத ஏலாது கொச்சயாதா எளுத வருமின்னன். அதெல்லா ஒரு பெரிய வெசயமே கெடயாது ஒனக்கு எப்படி வருமோ அப்படியே எளுதிக்கிடுனுபிட்டாக.

இந்த போட்டில கலந்துகிட இன்னொரு முக்கியமான காரணம் பரிசு பணம்1000---ரூவா. எங்கட குடும்ப நெலம மிடில்க்ளாச விட ஒரு மட்டம் கீளாகதா இருக்கூது. அந்த பணம் என்ன பொறுத்தவர ரொம்ப பெரிய தொகை. எப்பூடியும் இந்த போட்டீல கெலிச்சு போடோணும்னு பேராசயே வந்துபோட்டது.

மொதகா நா கெலிச்சுபிட்டேனுபிட்டு கனவுல கண்டுகிட்டன் அந்த பரிசு பணத்த எப்பூடிலா செலவு செய்யுதுன்னு லிஸ்டு போட்டுகிட்டு செலவ கூட்டி பாத்தாகாட்டியும 1000--- க்கு மேல ஒரு ஜீரோ சேக்க வேண்டியதா போச்சி. பொறவால மருக்கா சிறுசா லிஸ்டு போட்டுகிட்டன் "அம்மிக்கு காலேல நாஸ்டாவுல " குட் டே" பிஸூகோத்துனா ரொம்ப இஸ்டமா தின்னுகிடும் அதனால ஒர மாசத்துக்கு அம்மிக்காக "குட் டே" பிஸூகோத்து பொட்டணம் ஒரு பத்து பாயஞ்சி வாங்கிபோடோணும். அடுத்து அண்ணனுக்கு நல்லதா காட்டனுல பேண்ட் சர்ட். பொறவால எனுக்கு. நல்லா பேனா வாங்கிபோடோணும். இங்க் ஊத்தி நிப்பு போட்ட பேனா இருக்குல அது. ஆரம்பத்துலேந்தே எனக்கு பால்பாயிண்டு பேனா புடிச்சிகிடவே புடிச்சிகிடாது.
மிடிஞ்சா ஒஸ்தியான( பார்க்கரு) பேனா வாங்கி அதுலதா எங்கட ஸி. ஏ. பரிச்ச எளுதி மொத ராங்குல பாஸு பண்ணி போடோணும் இதுல பிஸூகோத்து ஒரு மாசத்துக்குள்ளார காலி ஆகிபோடும். பேண்ட் சர்டும் கொஞ்ச நாளுல கிளிஞ்சிடும் ஆனாக்க என் பேனா மட்டும் பர்மனண்டா என்கிட்டாலியே இருந்துகிடும்( குருஜி நெனவா போற்றி பாதுகாத்து வச்சிகிடுவேன்ல) 

கமண்டு போட்டில ஒரு மாசத்துக்குள்ளாராவே கெலிச்சு போட்டேனாக்க நா மட்டும் அதுக்கு காரணமில்ல. தன்னம்பிக்கை ஊக்கம் உற்சாகம்லா கொடுத்து என்ன கெலிக்க வச்ச பெருமயல்லா எங்கட குருஜிய (மட்டிலுமே) சேரும. நன்றி குருஜி

Sent from my Samsung Galaxy smartphone.


-=-=-=-=-=-=-=-=-=-

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


’விழுவது எழுவதற்காகவே’ என்கிறதோ ..... இந்தக்கிளி  !




அன்புள்ள (mru) முருகு,

வணக்கம்மா.

ஆத்மார்த்தமாகவும், மிகவும் யதார்த்தமாகவும், தாங்கள் மனம் திறந்து எழுதியுள்ள இந்த நேயர் கடிதம் என்னை மிகவும் மனம் நெகிழச்செய்து விட்டது. 

மிகவும் நியாயமான சின்னச் சின்ன ஆசைகளாகவேதான் தாங்கள் சொல்லியுள்ளீர்கள். நான் தங்களுக்கு அளித்துள்ள ஊக்கம் + உற்சாகம் + தன்னம்பிக்கை இவைகளையெல்லாம் தாண்டி, தங்களின் மிகக்கடுமையான உழைப்பு மட்டுமே, தங்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் இந்த மாபெரும் வெற்றியினைத் தேடித்தந்துள்ளது. 

மேலும் இந்த என் பரிசுப்பணம், அந்தக்காலத்தில் இளமையில் வறுமையை நன்கு அனுபவித்துள்ள என்னைப்போன்ற, ஓர் ஏழைக்குடும்பத்திற்கு இன்று சென்றடைவதைக் கேட்கும்போது, என் மனமகிழ்ச்சி இரட்டிப்பாகவே மாறியுள்ளது.  

’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பதை மறக்காமல் தாங்கள் நன்கு படித்து, தாங்கள் விரும்பிடும் C.A., படிப்பினையும் முடித்து, பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் / பிரார்த்திக்கிறேன் / ஆசீர்வதிக்கிறேன்.


  


  



பிரியமுள்ள
 குருஜி கோபு 



பின்குறிப்பு: 
தாங்கள் விரும்பிய பார்க்கர் பேனா கிடைக்குமா என இங்கு நான் முயற்சித்தேன். பொதுவாக இங்க் போட்டு எழுதும் பேனாக்களே கடைகளில் இப்போது அதிகமாக விற்பனைக்கு இல்லாமல் உள்ளது. இருப்பினும் மேலும் நான் சற்றே முயன்றதில் ஓர் கடையில் தாங்கள் விரும்பிய பார்க்கர் பேனாவே சீல் உடைக்காமல் புத்தம் புதிதாகப் பேக்கிங் உடன் கிடைத்தது. உடனே கொத்திக்கொண்டு வந்துவிட்டேன். இதோ அதன் படத்தினை இங்கு இணைத்துள்ளேன். 


 
{ Front Side of the Packing  }
{  Reverse Side of the Packing }

பரிசுப்பணத்துடன் இந்தப் பார்க்கர் பேனாவும் 
நிச்சயமாக உங்களை வந்தடையும் 
என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

’பேனா’ என்றதுமே, ஏற்கனவே உங்கள் மாவட்டப் பெண் பதிவர் ஒருவர், 
என்னிடம் மிகவும் விரும்பிக்கேட்டு, 
நான் அனுப்பிவைத்த பேனா கதையே எனக்கு நினைவுக்கு வருகிறது. 
அதைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு இதோ இந்த இணைப்புகளின் இறுதியில் 


’தேடினேன் வந்தது ...... நாடினேன் தந்தது.....’ 
என்ற தலைப்பினில் உள்ள செய்திகளை மட்டும் படித்துப் பார்க்கவும்: