என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 5 நவம்பர், 2012

SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]



S W E E T   S I X T E E N  
[இனிப்பான பதினாறு]

பதினாறு என்பது ஒரு மிகச்சிறப்பான 
எண்ணாகச் சொல்லப்படுகிறது. 

இளமையைக் குறிக்க 

‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’ 

என்கிறார்கள். 

அது ஒரு அறிந்தும் அறியாத 
புரிந்தும் புரியாத 
அற்புதமான பருவமே.

குட்டியூண்டு நொங்கு, 
வழுக்கையான இளநீர் 
போன்ற மிகவும் டேஸ்ட் ஆன 
பக்குவமான பதமான 
ஓர் அரிய பருவம். 

போனால் திரும்ப 
வரவே வராத வயது.

உடல் அளவில் முதிர்ச்சி 
ஏற்பட்டிருந்தாலும் 
18 வயது ஆனாலே 
சட்டப்படி மேஜர் 
என்று சொல்லுகிறார்கள்.  

’ஸ்வீட்ஸ்’ களிலும்
அதுபோல பலவிதமானவை உண்டு.

 ஒவ்வொன்றும் ஒவ்வொரு 
விதமான ருசிதான்.

அதிலும் மில்க் ஸ்வீட் எனப்படுபவை 
மிகவும் ருசியோ ருசிதான்.

இதோ இந்தாங்கோ 

’ஸ்வீட் சிக்ஸ்டீன்’

உங்களுக்குப்பிடிச்சதை 
நீங்களே எடுத்துக்கோங்கோ.

அதன் பிறகு  
இந்தப்பதிவினில் 
சொல்லவந்த 
முக்கியமான சமாசாரத்தை 
நான் சொல்லி விடுகிறேன். 


   

  

  



    




 

 


”ஸ்வீட் சிக்ஸ்டீன்” எல்லாவற்றையும் எல்லோரும் ருசி பார்த்தீங்களா?

அவற்றில் மில்க் ஸ்வீட் தானே மிகவும் ருசியாக இருந்திச்சு! 

இந்த மில்க் [அதாங்க ... பால்] நமக்கு எங்கேயிருந்து கிடைக்குதுன்னு நாம் யோசிப்போமா?.

பொதுவாக நாம் பெரும்பாலும் மாட்டுப் பாலைத்தான் உபயோகிக்கிறோம்.

அந்த மாடுகளிலும், நமக்கு பால் தருவனவற்றில் பசு மாடு, எருமை மாடுன்னு இரண்டு இனங்கள் உள்ளன. 

ஒரு பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தார். நம்மாளு ஒருத்தர் நடு ரோட்டிலே போகிறவர் கொஞ்சமும் நகருவதாகவோ ஒதுங்கிப்போவதாகவோ தெரியவில்லை. கோபம் வந்த ஓட்டுனர் “சுத்த எருமைமாடா இருக்கானே” எனப் புலம்பினாரு. 

அந்த நம்மாளுக்கு காது ஒரு வேளை சுத்தமா கேட்கவில்லையோ அல்லது தினமும் எருமைப்பாலையே, குடிப்பதால் இதுபோல நகராமல் எருமை போலவே சண்டித்தனம் செய்கிறாரோ என்னவோ? பாவம் என நான் என் மனதில் நினைத்துக்கொண்டேன்.

எருமைப்பாலைவிட பசும்பால் மிகவும் ஒஸத்திதாங்க. அது தாய்ப்பால் மாதிரி புனிதமானதுன்னு கூட சொல்லுவாங்க.  பசுவே புனிதமான பிராணி தானே! 

சரிங்க இப்போ நான் இந்தப்பதிவிலே சொல்லவந்த விஷயத்துக்கு சட்டுபுட்டுன்னு வந்துடறேனுங்க!  கோச்சுக்காதீங்க.


சத்தியம் நீயே! தர்ம தாயே!! 
குழந்தை வடிவே! தெய்வ மகளே!!




11.11.2012 ஞாயிறு
கோ வத்ஸ துவாதஸி

ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதஸிக்கு [தேய்பிறை 12 ஆம் நாள்] கோவத்ஸ துவாதஸி என்று பெயர்.  பிரும்மா, விஷ்ணு, சிவன், அம்பாள் முதலான அனைத்து தேவர்களும் பசுமாட்டின் உடலில் வாஸம் செய்கிறார்கள். 

இன்று [அதாவது 11.11.2012 ஞாயிறு அன்று] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய்ய வேண்டும். 

”கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி” என்று சொன்னாலே நம் மனதுக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது பாருங்கோ. நமக்குப் பிரியமானவர்களை நாம் இப்படித்தானே அழைப்போம்!

பசுவைக்குளிப்பாட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்களால் அலங்கரிக்கச்செய்து வைக்கோல், புல், அரிசி களைந்த நீர், கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை முதலியவற்றை அதற்கு ஆகாரமாகத் தந்து, விரிவாக பூஜிக்க வேண்டும். 

குறிப்பாக “கன்னுக்குட்டி என் செல்லக் கன்னுக்குட்டி” யை தன் இஷ்டப்படி பசுவிடம் பால் குடிக்குமாறு செய்ய வேண்டும்.

                               


11.11.2012 ஞாயிறு ஒரு நாள் மட்டும், நாம் நம் உபயோகத்திற்காகவோ, பிறரிடம் வியாபாரம் செய்யவோ பசும்பால் கறப்பதை தவிர்த்தல் நல்லது..   

கோ3க்ஷீரம் கோ3க்4ருதம் சைவ த3தி4 தக்ரம் ச வர்ஜயேத் 
[நிர்ணய - 147] 

என்பதாகச் சொல்லப்படுகிறது. 
ஆகவே இன்று ஒருநாள் மட்டும் 
பசும்பால், பசுநெய், பசுந்தயிர், பசுமோர் 
சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.   


 இன்று பசுவை பூஜை செய்து கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுமாட்டுக்கு புற்கள், மற்றும் அஹத்திக்கீரைக்கட்டு 
தருவது மிகவும் விசேஷமாகும்..


ஸுரபி4 த்வம் ஜக3ந்மாதர் தே3வி விஷ்ணுபதே3 ஸ்தி2தா !
ஸர்வ தே3வ மயே க்3ராஸம் மயாத3த்த மிமம் க்3ரஸ !!



கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி பசுவை வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஸர்வதே3வ மயே! தே3வி! ஸர்வ தே3வைஸ்ச ஸத்க்ருதா !
மாதர் ! மமா[அ]பி4லஷிதம் ஸப2லம் குரு நந்தி3னி !!

பிறகு முடிந்தால் பசுமாட்டின் 
கழுத்துப்பகுதியை 
சொறிந்து கொடுக்கலாம்.

”கோகண்டூயனம்” 

என்னும் இந்தச்செயல் மஹாபாவத்தையும் போக்கக்கூடியது. மிகப்பெரும் புண்ணியத்தைத்தரக்கூடியது.

11.11.2012 அன்று பசுவை நாம் நமஸ்காரம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் அழியாச்செல்வமும், மங்களமும் உண்டாகும்.






கோமாதா எங்கள் குலமாதா !

அதுபோலவே பசுவை வழிபட
21.11.2012 புதன் கிழமையன்று
கோபாஷ்டமீ [அல்லது] கோஷ்டாஷ்டமி
எனப்படும் விசேஷமான திருநாளாகும்.


கார்த்திகே யாஷ்டமீ சுக்லா க்ஞேயா கோ3பாஷ்டமீ பு3தை4:!
தத்ர குர்யாத் க3வாம் பூஜாம் கோ3க்3ராஸம் கோ3ப்ரதக்ஷிணம்!!

என்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமி திதிக்கு 
[வளர்பிறை 8 ஆம் நாள்] 
கோபாஷ்டமி” 
அல்லது 
“கோஷ்டாஷ்டமீ” 
எனப்பெயர்.

இந்த நாளில் [21.11.2012 புதன்கிழமை] கன்றுக்குட்டியுடன் கூடிய பசுமாட்டை பூஜை செய்து அஹத்திக்கீரை, புல் முதலியவற்றை சாப்பிடக் கொடுத்து, ஜலமும் குடிக்கச்செய்து, பக்தியுடன் பசுவை 16 முறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க  வேண்டும்.

இதனால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டும்.

பாபங்களும் விலகும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.  



பெரும்பாலும் நகர்புறப்பகுதிகளில் 
அதுவும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் 
இன்று வாழும் நமக்கு 
கன்றுடன் கூடிய பசுவைப்பார்ப்பது 
என்பதே மிகவும் அரிதானதோர் செயலாகும். 

அந்தக்குறையைப் போக்கவே 
இங்கு நிறைய பசுக்களும் கன்றுகளுமாகப் 
படத்தில் காட்டியுள்ளேன்.



 





அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்

என்றும் அன்புடன் தங்கள்
VGK


சனி, 3 நவம்பர், 2012

"ஆனந்த விகடன்--என் விகடன்--வலையோசை” இல் “என் வலைப்பூ”

அன்புடையீர்,

வணக்கம்.

முன்பெல்லாம் ஒரு எழுத்தாளரின் பெயரோ அல்லது ஒரு படைப்போ ஒரு பிரபல தமிழ் இதழில் [பத்திரிகையொன்றில்] அச்சேறி வெளியிடப்படுகிறது என்பது மிகப்பெரியதோர் விஷயமாக இருந்தது. இன்றும் கூட அதே நிலை தான். 

இதனால் பல எழுத்தாளர்களுக்கு, தங்களின் கற்பனை வளத்தினைப் பெருக்கிக்கொள்ளவும், நல்ல நல்ல படைப்புகளாக எழுத வேண்டியதோர் உற்சாகத்தை  ஏற்படுத்தவும், அவ்வாறு தரமான படைப்புகளைத்தரும் எழுத்தாளர்களை நாளடைவில் வாசகர்கள் மத்தியில் பிரபலமாக்கவும், இதுபோன்ற பிரபல பத்திரிகைகள் உதவி வந்துள்ளன என்பதை நாம்  மறுப்பதற்கு இல்லை..

நான் கூட 2005 முதல் 2010 வரை, பல படைப்புகளை எழுதி, பல்வேறு தமிழ் வார / மாத இதழ்களில்  அவை வெளியாகி, எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டி வந்தன என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறேன்..

இருப்பினும் பத்திரிகைகளுக்கு நம் படைப்புகளை எழுதி அனுப்பி, அவை வெளியாகுமா? வெளியாகாமல் நிராகரிக்கப்படுமா? என நீண்ட நாட்கள், காத்திருந்து காத்திருந்து பல நேரங்களில் நான் சோர்வடைந்ததும் உண்டு  

ஒரு பத்திரிகையால் நிராகரிக்கப்படும் ஓர் படைப்பு வேறு ஒரு பத்திரிகையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்பட்டதும் உண்டு. 

இதுபோல பிரசுரித்து வெளியாகும் நம் படைப்புகள் பலவற்றில், நாம் புஷ்டியாக அனுப்பி வைத்த நம் படைப்புகள் பலவும், ஆங்காங்கே வெட்டப்பட்டு, செதுக்கப்பட்டு, சுருக்கப்பட்டு, நசுக்கப்பட்டு   மிகவும் பலகீனமாகவே வெளியிடப்படுவதும் உண்டு. 

EDITING செய்யாமால் அவர்களால் எதையும் அப்படியே வெளியிட முடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. 

சம்பந்தப்பட்ட படைப்பாளிக்கு மட்டும், இந்த இவர்களின் EDITING என்ற செயல், மிகவும் வருத்தம் அளிப்பதுண்டு. எரிச்சல் ஊட்டுவதும் உண்டு. 

மொத்தத்தில் பத்திரிகையொன்றில் நம் படைப்பு வெளியாக வேண்டும் என்றால், அதற்காக நாம் செல்வழிக்கும் உழைப்பு, காலம், நேரம், தபால செலவு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவை மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. 

என் நண்பரும் பிரபல எழுத்தாளருமான  திரு. ரிஷபன் அவர்களால் எனக்கு தனியே ஒரு வலைப்பூ உருவாக்கிக்கொடுக்கப்பட்டது 

அதனால் 2011 முதல் என்னுடைய வலைப்பூவில் மட்டுமே, நான் எழுத ஆரம்பித்தேன். வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பிறகு பத்திரிகைகளுக்கு எழுதுவதை சுத்தமாக நான் நிறுத்தி விட்டேன்

அதுபோல வலைப்பதிவினில் மட்டும் எழுத ஆரம்பித்த பிறகு என் படைப்புகளுக்கு உடனுக்குடன், பலரின் கருத்துக்கள் கிடைக்கப்பட்டு என்னை மகிழ்ச்சியடையச்செய்தன. உற்சாகப்படுத்தி வந்தன. உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களை சுலபமாக என்னால் என் எழுத்துக்களால் எட்டிப்பிடிக்க ஏதுவாகிப்போனது.

இதுபோல பல எழுத்தாளர்களுக்கு  தங்கள் கருத்துக்களையும், கற்பனைகளையும், அனுபவத்தையும், படைப்புகளாக அழகாக முழு சுதந்திரமாக எழுதி வெளியிட,  அவர்களின் வலைப்பக்கமே உதவி வருகிறது.  

உடனுக்குடன் தங்கள் படைப்புகளுக்கு, வாசகர்களிடமிருந்து கருத்துக்கள் பெற முடிவதால், படைப்பாளிக்கு உற்சாகமும், ஆத்ம திருப்தியும் ஏற்பட்டு வருகிறது.

இன்று பத்திரிகை உலகமே, நம் வலைப்பூக்களின் பக்கம் தன் பார்வையைச் செலுத்தி வருகிறது என்பது, நம் வலைப்பூக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியும் அங்கீகாரமும் எனச் சொல்லி நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

குறிப்பாக தமிழ்ப்பத்திரிகை உலகில் மிகப்புகழ் பெற்ற “ஆனந்த விகடன்” என்ற பத்திரிகை செய்துவரும் பணி மகத்தானது. ”ஆனந்த விகடன்” குழுமத்தின் “என் விகடன்” என்ற இதழினில், ”வலையோசை” என்ற பகுதியில், வாராவாரம், ஒவ்வொரு ஊரிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்களை அடையாளம் கண்டு, சிறப்பித்து எழுதி வருகிறார்கள்.

சென்ற வாரத்தில் என்னைப்பற்றியும், என் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பித்து எழுதியுள்ளார்கள்.

இணைப்பு இதோ:

http://en.vikatan.com/article.php?aid=25811&sid=751&mid=33

humourous write up by Vai Gopalakrishnan





வை.கோபாலகிருஷ்ணன்

திருச்சியைச் சேர்ந்த வை.கோபாலகிருஷ்ணன் பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

தன்னுடைய http://www.gopu1949.blogspot.in/  
என்ற வலைப்பூவில் நகைச்சுவை, ஆன்மீகம், அரசியல் என்று கலந்துகட்டி எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...


ராம ராஜ்யத்தில் ஊழல் தொடங்கி இருந்தால்...

ராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ராமனின் அணி வெற்றிவாகை சூடியது. ராம பக்தன் ஹனுமார்,  தன் அலுவல் நிமித்தமாக சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்ததற்கான பயணச் செலவுகளைப் பட்டியலிட்டு, அயோத்தியா அரசு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கிறார்.

ஹனுமாருடைய பயணச் செலவுகளின் பட்டியலைச் சரிபார்த்து, பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரைக்கவேண்டிய குமாஸ்தா அதில் மூன்று விதமான ஆட்சேபணைகளைக் குறிப்பிட்டு மேலதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறார்.

குமாஸ்தா சுட்டிக் காட்டியுள்ள ஆட்சேபணைகள்:    

1. அப்போது முழுப் பொறுப்புக்கும் அதிகாரியாகவும் அயோத்தி ராஜாவாகவும் பதவி வகித்துவந்த பரதன் அவர்களிடம், முன் அனுமதி ஏதும் பெறாமல், ஹனுமார் அவர்கள், இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

2. கிரேடு ‘D’யில்  குட்டி அதிகாரியாக விளங்கிய ஹனுமார், ஆகாய மார்க்கமாக அலுவலகப் பயணத்தினை மேற்கொள்ளவும், அந்தப் பயணச் செலவுகளைத் திரும்பப் பெறவும், அரசாங்கச் சட்டதிட்டங்களின்படி தகுதியற்றவராக உள்ளார்.

3.ஹனுமாருக்குப் பணிக்கப்பட்டிருந்த வேலை, சஞ்சீவி மலையில் உள்ள ஒரே ஒரு சிறிய செடியினைப் பறித்துக்கொண்டு வருவது மட்டுமே. ஆனால், இவர் அவ்வாறு செய்யாமல், ஒரு மிகப் பெரிய சஞ்சீவி மலையையே அப்படியே பெயர்த்து எடுத்து வந்துள்ளார். இதனால், அவரின் ஆகாயப் பயணத்தில் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடை மிகவும் அதிகமாக உள்ளது.  



இவ்வாறெல்லாம் சொல்லி அந்த குமாஸ்தாவால் ஹனுமாரின் பயணப் பட்டியல் நிராகரிக்கப்பட்டது.  

இது ராஜாவான ராமரின் கவனத்துக்குச் சென்றது. இருப்பினும் தர்மத்தையே எப்போதும் அனுஷ்டிக்கும் ராஜாவான ராமராலும் இந்த விஷயத்தில், தன்னுடைய ஸ்பெஷல் பவர்களை உபயோகித்து ஹனுமாருக்கு உதவி செய்யமுடியாது போனதால், 'இந்த முடிவினை தயவுசெய்து, முடிந்தால் மறு பரிசீலனை செய்யவும்’ என்று அடிக் குறிப்பிட்டு திரும்ப அனுப்ப மட்டுமே ராமரால் முடிந்தது.

இதனையெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் வருந்திய ஜாம்பவான் (மிகப்பெரிய கரடி போன்ற அதிகாரி) சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை தனியாக அழைத்துச்சென்று, ஹனுமாரின் இந்த அலுவலகப் பயணத்தினால் கிடைக்கும் தொகையில் ஒரு பத்து சதவீதத்தை அந்த குமாஸ்தாவுக்கு ஒதுக்கீடு செய்துவிடுவதாக வாக்களிக்கிறார்.

இதைக் கேட்டதும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அந்த குமாஸ்தா, தான் ஆட்சேபணை எழுப்பிய அந்த பயணப் பட்டியலைத் திரும்பப் பெற்று, கீழ்க்கண்டவாறு எழுத ஆரம்பிக்கிறார்:

1. பரதன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தாலும், ராமரின் பாதுகைகளே அப்போது ராஜாவாக எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்தது. அதனால், ராஜா என்ற பெயரில் அதிகாரம் ஏதும் இல்லாமல் இருந்த பரதனிடம் பயணத்திற்கான, முன் அனுமதி பெறாதது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

2. மேலும், இதுபோன்ற ஒரு நெருக்கடியான அவசர வேலைகளின் நிமித்தம், தகுதியற்ற அதிகாரிகள்கூட ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று வேலைகளை முடித்துவந்து, பிறகு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்தக் கணக்கினை நேர் செய்துகொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அதுபோன்ற சில முன் உதாரணங்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.    

3. அதுபோலவே அதிகக் கனமுள்ள பொருளான ஒரு மிகப் பெரிய சஞ்சீவி மலையை ஹனுமார் கொண்டுவந்ததிலும் ஓர் நியாயத்தினை உணரமுடிகிறது. அவரால் கொண்டுவர பணிக்கப்பட்டச் செடிக்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு செடியினைத் தவறுதலாக அவர் கொண்டுவந்திருந்தால், அவர் மீண்டும் மிகச் சரியான செடியினைக் கொண்டுவர மீண்டும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் பொன்னான நேரம் வீணாவதுடன், அவருக்கான அடுத்தடுத்த பயணச் செலவுகளையும் நாம் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற தவறு ஏதும் நடப்பதற்கானச் சந்தர்ப்பம் இவரின் இந்தப் பயணவிஷயத்தில் எப்படியோ தவிர்க்கப்பட்டுள்ளது.

4. இவரின் பயணப் பட்டியல் செலவுத் தொகையினை முழுவதுமாக அனுமதிக்க நான் பரிந்துரைக்கிறேன்!

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:


ooooooooOoooooooo 

சாமர்த்தியமான பதில்!
முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்படி ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், தனது அறிவாற்றலால் தப்பிவிடுவார். 

ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாகப் பேசியது. அது அந்த நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.

அவருடைய அறிவாற்றலைப் சோதிக்க விரும்பிய மன்னர் ஒருநாள், முல்லாவை அரசவைக்கு வரவழைத்தார். முல்லாவும் வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.

''முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் மெச்சுகிறார்கள். நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால், உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன். 

நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்தச் சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உன்னுடைய தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்'' என்றார் மன்னர்.

மன்னர் இப்படிச் சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்க வேண்டும் என்று முல்லா தீர்மானித்தார். முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதைச் சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

முல்லா மன்னரிடம், ''மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில்தான் போடப் போகிறீர்கள்'' என்றார்.

முல்லா அப்படிச் சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார். 

முல்லா சொன்னது உண்மையானால், அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில்போட வேண்டும். தூக்கில்போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட வேண்டும்.  

இப்படி ஒரு குழப்பத்தைத் தம்முடைய அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்துவிட்டார். மன்னரால் எதுவும் தீர்ப்புகூற முடியவில்லை.

சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தைத் தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்!

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:




ooooooooOoooooooo 




மருத்துவரின் அறிவுரை!

கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவியிடம் டாக்டர் சில அறிவுரைகள்கூறினார்...

1. நல்ல சத்துள்ள ஆகாரமாக அவருக்கு அளியுங்கள்.

2. நல்ல மன நிலையில் எப்போதும் அவர் சந்தோஷமாக இருக்கும்படி மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. உங்கள் பிரச்னைகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள்.

4. டி.வி. சீரியல் நீங்களும் பார்க்க வேண்டாம். அவரும் பார்க்க வேண்டாம்.

5. புத்தாடைகளோ நகைகளோ கேட்டு அவரை நச்சரிக்க வேண்டாம்.

6. இவற்றை எல்லாம் ஓர் ஆண்டுக்கு மட்டும் கடைபிடியுங்கள் போதும். அவர்  பிழைத்து பழையபடி நல்லாவே ஆகிவிடுவார். கவலை வேண்டாம்.

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்: ''டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்?''

மனைவி: ''நீங்கள் உயிருடன் இருக்கக் கொஞ்சமும் சான்ஸே இல்லை என்று சொன்னார்.''

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:



ooooooooOoooooooo 




மகனின் சந்தேகம்!



தந்தையும் மகனும் ஒரு மிருகக்காட்சி சாலையில் புலியை அடைத்து வைத்துள்ள கூண்டின் வெளியே நிற்கின்றனர். 

புலியின் வேகம், ஆற்றல், சக்தி, பாய்ச்சல், அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் எனத் தந்தை விபரமாகச் சொல்ல மகனும் உன்னிப்பாகக் கேட்டுக்கொள்கிறான்.

மகன்: ''அப்பா, எனக்கு ஒரு சிறு சந்தேகம்...''

தந்தை: ''சந்தேகம் எதுவானாலும் உடனே கேட்டுத் தெரிந்துகொள்வதே நல்லது. கேள் மகனே கேள்!''

மகன்: ''அப்பா, ஒருவேளை இந்தப் புலி கூண்டில் இருந்து தப்பி வெளியேவந்து உங்களை அடித்துச் சாப்பிட்டுவிட்டால்?''

தந்தை: ''அதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லைதான்''

மகன்: ''அப்போ நான் எத்தனாம் நம்பர் பஸ்ஸைப்பிடித்து வீட்டுக்குப் போகணும்?''

முழுவதும் படிக்க இணைப்பு இதோ:




ooooooooOoooooooo 



வேடிக்கை வாய்ப்பாடு!

எதையுமே ஒரு ராகத்துடன் பாட்டாக... அதுவும் எல்லோரும் சேர்ந்து கோரஸாகச் சொல்லும்போது அதுசுலபமாக மனதில் பதியும். 

உதாரணத்துக்கு, நான் ஒண்ணாவது, இரண்டாவது படிக்கும்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு வேடிக்கையான பாடல் இதோ இங்கே:

1 +1=2 ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு...  ஜப்பான்காரன் குண்டு

2 +1=3 ரெண்டும் ஒண்ணும் மூணு...  ஐயா வீட்டுத் தூணு

3+ 1=4 மூணும் ஒண்ணும் நாலு...  கருப்பு நாயி வாலு

4+1=5 நாலும் ஓண்ணும் அஞ்சு...  பாட்டி தலை பஞ்சு

5 +1=6 அஞ்சும் ஒண்ணும் ஆறு...  ரோட்டுல ஓடுது காரு

6 +1=7 ஆறும் ஒண்ணும் ஏழு...  அம்மா தந்த கூழு

7 +1=8 ஏழும் ஒண்ணும் எட்டு...  மாமி தந்த புட்டு

8+ 1=9 எட்டும் ஒண்ணும் ஒம்போது...  வெத்தல பாக்கு திம்போது (தின்பது)

9 +1=10 ஒம்போதும் ஒண்ணும் பத்து...  உன் வாயக் கொஞ்சம் பொத்து!


முழுவதும் படிக்க இணைப்பு இதோ:



ooooooooOoooooooo 





என்னை அடையாளம் கண்டு சிறப்பித்துள்ள
 “ஆனந்த விகடன் - என் விகடன் - வலையோசை பகுதி” 
குழுவினருக்கு என் மனமார்ந்த 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
VGK







பின்குறிப்பு:

சென்ற வாரம் என் அன்புக்குரிய நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, இதே ஆனந்த விகடன், என் விகடன், வலையோசைப்பகுதியில் வெளியிட்டிருந்தார்கள்.

எனக்கும் ஆனந்த விகடனுக்கும் இதுவரை எந்தவொரு நேரடியான தொடர்பும் இல்லாமலேயே இருந்தபோதும், என்னை இந்தவாரம் அவர்களின் வலையோசையில் அடையாளம் காட்டியுள்ளது எனக்கே மிகவும் வியப்பாக உள்ளது. 

எனக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தின்  பின்னணியில் நிச்சயமாக திரு. ரிஷபன் அவர்கள் தான் இருக்கக்கூடும்  என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால் என் நலம் விரும்பியான திரு. ரிஷபன் அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதுபோல “ஆனந்தவிகடன் - என் விகடன் - வலையோசை” பகுதியில் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள் என்ற முதல் தகவலை எனக்கு இணைப்புடன் மின்னஞ்சலிலும், தொலைபேசி மூலமும் தெரிவித்த திரு. தி தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



[From  VGK]