என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை


மின்னூல் ஆசிரியர்
திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்



இவரைப்பற்றி நாம் அறிவது

Jayasree Shanker

About the author
1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.



என் பார்வையில் 
’தணியாத தாகங்கள்’
மின்னூல்




இது ஒரு மிக அழகான குடும்பக்கதை. ஒரேயொரு கதை. நான்கு அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஓர் நெடுங்கதை. தலைப்புத் தேர்வு வெகு அருமை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் தேவைகளும் தாகங்கள் போலவே ..... என்றும் தணியாதவை + முடிவே இல்லாதவை என்பதை வெகு அழகாக இந்தக்கதையின் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.   

ஒரு கதைக்கான கருவினை கையில் எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் எப்படி எப்படி வேண்டுமானாலும் கதையை வடிவமைத்துக்கொண்டு செல்ல முடியும். ஆனால் இவரைப்போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டும் தான், இவ்வளவு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதில்தான் என் வியப்பே அடங்கியுள்ளது.  

வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது. 


 


கதையில் தேர்ந்த நடையழகுடன் கச்சிதமான வார்த்தை பிரயோகங்கள் மனதுக்கு இதமாக உள்ளன.

கதையின் ஆரம்பமே நமக்குள் மாபெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அடுத்து என்ன ...... அதற்கு அடுத்து என்ன ...... என கதையினிலேயே நம் மனதை ஒன்றச்செய்து, முழுக்கதையையும் வாசித்து முடிக்காமல் அங்கு இங்கு என எங்கும் நகரச் செய்யாமல் கட்டிப்போட்டுவிடுகிறது. 





Copy and Paste செய்யவே முடியாத அந்த மின்னூலின்,  9ம் பக்கத்தில் உள்ள சில வரிகள் .... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல .... என்னால் மிகவும் கஷ்டப்பட்டு டைப் செய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய செய்தித்தாளின் வந்திருந்த அபுதாபி வேலை வாய்ப்பு விளம்பரம் அவனது நம்பிக்கைக்கு கலங்கரை விளக்கம் போல ஒளிர்ந்தது

பணம்....! இந்தச் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாக வாழவைக்கும் அச்சாணி பணம். இந்தியாவில் என்னதான் கஷ்டப்பட்டு மாடாய் உழைத்துச் சம்பாதித்தாலும், ரெண்டு தங்கைகளுக்குக் கல்யாணத்தைக் கனவில்தான் செய்து பார்க்க முடியும். திட்டம் போட்டு வரவு செலவுகள் எழுதி எழுதி, தினமும் கணக்கு உதைத்து நிம்மதியாகத் தூங்கமுடியாமல், நாளைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கணும், தங்கைக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும்... 

ஒரு இருபதாயிரம் இருந்தால் போதும்....  இந்த வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, கைச்செலவுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டுப்போனால் ..... அபுதாபி பணம்....! இந்தப்பஞ்சத்தைப் பஞ்சர் ஒட்டிவிடும்என்றெல்லாம் கனவு கண்டு.... கல்யாணியிடம் சொன்னதும், கல்யாணியின் கை வளையல்கள் சேட்டுக்கடைக்குப்போக, ரவி அபுதாபிக்குப் போகத்தயாரானான்

இன்னும் இரண்டே நாள்தான்.... இன்னும் ஒரே நாள்தான்.... இதோ இன்னிக்கு.... ஆச்சு இன்னும் இரண்டே மணி நேரத்தில் புறப்படணும்.... என்று காலத்தைக் கணக்குப்போட்டு நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது.

நாளைக்காலைப் பொழுது அண்ணாவுக்கு அபுதாபியில் விடியுமாக்கும்.... !

தங்கைகள் ஆளுக்கொரு ஆசையாக அடுக்கிக்கொண்டே போனார்கள்




கதைச்சுருக்கம்:

ஒரு கதாநாயகன் .... பெயர் ரவி. அவனுக்கு அப்பா, அம்மா, ஒரு காதலி .... கல்யாணி, படிக்கும் பருவ வயதினில் திருமணத்திற்கும் தயாரான இரண்டு சகோதரிகள் .... மைதிலி+வைதேஹி. இவர்களே மெயினான அந்தக் குடும்பத்தின் கதா பாத்திரங்கள். 

இஞ்சினீரிங் படித்து வேலை தேடி அலைந்துவரும் ரவி, ஒரு நாள் தான் காதலித்து வந்த சொந்த தாய் மாமன் மகள் கல்யாணியை, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக, அவசர அவசரமாகக் கோயிலில் கல்யாணம் செய்துகொண்டு தன் வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுகிறான். 

ஏற்கனவே தன் மைத்துனர் மேல் கடும் கோபத்தில் இருக்கும், ஹார்ட் பேஷண்ட் ஆன ரவியின் அப்பா இதைக்கேள்விப்பட்ட உடனேயே, படபடப்புடன் கத்திவிட்டு, ஹார்ட்-அட்டாக்கில் இறந்து விடுகிறார். 

குடும்பப்பொறுப்பு முழுவதையும் ரவியே ஏற்றுக்கொள்ளும் நிலைமை அவனே சற்றும் எதிர்பாராமல் நேர்ந்துவிடுகிறது. மருமகள் வந்த வேளை மாமியார் மூலையில் அமர வேண்டிய துர்பாக்யம். 

இருப்பினும் தன் சொந்த அண்ணன் மகள் கல்யாணியே தனக்கு மருமகளாக வந்திருக்கிறாள் என்பதால் ரவியின் அம்மாவுக்கும், தன் சொந்த அத்தையே தன் மாமியாராக அமைந்து இருக்கிறார்கள் என்பதால் கல்யாணிக்கும் மனதுக்குள் மிகவும் சந்தோஷமே. அதனால் இந்த மாமியார்-மருமகள் ஜோடி, சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி கடைசிவரை, இந்தக்கதையில் வெகு அழகாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதில் என் மனதுக்கு மிகவும் திருப்தியே. 

நாத்தனார்களான மைதிலி + வைதேஹி ஆகிய இருவரின் படுத்தல்கள் அவ்வப்போது இருக்கத்தான் செய்கிறது. குடும்பத்தேவைகளையும், கடன்களையும் உணர்ந்த கதாநாயகன் உள் நாட்டில் வேலை தேடியும் கிடைக்காமல், தன் மனைவி கையிலிருந்த தங்க வளையல்களை அடமானம் வைத்து, வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறான். அங்கு மிகக்கடுமையாக உழைக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். தன் காதல் திருமணம் தன் அப்பாவின் உயிரையே பறித்துவிட்ட, குற்ற உணர்வினில், தன் குடும்ப முன்னேற்றத்திற்காக, தன் மனைவியின் நிர்வாகத்தின் மூலமாகவே  நிறைய செலவழிக்கிறான். 

அவன் மனைவி கல்யாணி தவிர, குடும்பத்தார் அனைவரும், அவரவர்கள் தாகத்தை அவரவர்கள் வெகு சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி அவன் மூலமும் அவன் மனைவி மூலமும் தணித்துக் கொள்கின்றனர். 

என்ன இருந்து என்ன பயன்? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவளுடன் நிம்மதியாக சேர்த்து தன் வாழ்க்கையை அவனால் அனுபவிக்க முடியாமல் பல்வேறு தடங்கல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. கல்யாணமாகியும்கூட மொபைல் போனிலும், ஸ்கைப்பிலும் அவர்கள் இன்னும் காதலித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

எப்படியோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, தன் மனைவியுடன் அவ்வப்போது வந்து சில நாட்களாவது ரவியால் சேர முடிந்ததில் அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது.  அதை உடனடியாக நேரில் வந்து பார்க்கக்கூட முடியாத பணிச்சுமையில் அவன் மூழ்க நேரிடுகிறது. வெளிநாட்டு வேலையில் அமர்ந்துள்ள கதாநாயகன் ரவி, அந்த தன் சொந்தக் குழந்தையையும் ஸ்கைப்பில் மட்டுமே தினமும் கொஞ்சி மகிழ்கிறான். 

பெரும் பணச்செலவில் கல்யாணம் கட்டிக்கொடுத்த தங்கைகளுக்கு தலை தீபாவளி, வளைகாப்பு-சீமந்தம், பிரஸவம் என அடுத்தடுத்து ஏதேதோ செலவுகளும், தாய்க்கு மிகப்பெரியதொரு மருத்துவமனையில், ராஜ வைத்தியம் செய்ததில் எதிர்பாராத மருத்துவச் செலவுகளும் ஏற்படுகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு, எதிர் நீச்சல்போட்டு, வெளிநாட்டு வருமானத்தால் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்தும் விடுகிறான்.

எல்லாம் ஒருவழியாக இனிதே முடிந்ததும், இனியும் வெளிநாட்டு வாழ்க்கை கூடவே கூடாது என முடிவெடுத்து, தன் தலை முழுவதும் நரைப்பதற்குள்ளும், முடிகள் கொட்டி முழு வழுக்கையாவதற்கு முன்பும்,  தன் காதல் மனைவியிடம் இதுபற்றி, அவன் சந்தோஷமாகச் சொல்ல வரும்போது, அவளின் தாகமும், அவளின் பெண் குழந்தை பார்க்கவியின் தாகமும் இப்போது சேர்ந்து அவன் எடுக்கும் முடிவு தவறு என்று சுட்டிக்காட்டி அவனை மீண்டும் ஹிம்சிக்கிறது.





இவ்வாறாக ஒரு நடுத்தர குடும்பத்தில் உள்ளோரின் பல்வேறு மனித உணர்வுகளை நன்கு பின்னிப் பிசைந்து கதையில் எந்தவிதமான விரசமும் இல்லாமல் ஓர் தெய்வீகக் காதல் கதையாகவே கடைசிவரை மிளிரச் செய்துள்ளது உண்மையிலேயே பாராட்ட வேண்டியதாக உள்ளது.




என்னதான் இந்தக்கதையைப் பற்றிய கதைச்சுருக்கம் + சிறப்பம்சங்களை இங்கு மேலே மேலோட்டமாக நான் கூறியிருப்பினும் அந்த முழுக்கதையையும் நம் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துநடையில் படித்தால் மட்டுமே தாங்களும் அந்த சுகானுபவத்தை முற்றிலுமாக அடையக்கூடும்.

மிக நல்லதொரு கதையாக அமைந்துள்ள இந்த மின்னூலின் விலை மிகவும் மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோட்டோரக்கடையில் ஒரேயொரு  இட்லியும், ஒரு கப் காஃபியும் சாப்பிடக்கூடிய விலை மட்டும்தான். 


 


திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் இந்த மின்னூலை வாங்கிப்படித்து முடித்து விட்டால்,  எங்கட வீட்டுக்கல்யாணங்களில் படா-கானா விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சியும் மயக்கமும் உண்டாகிவிடும்.  ஆஹ்ஹாஹ்ஹா!

விருப்பமுள்ளோர் உடனடியாக வாங்கிப்படிக்க http://www.pustaka.co.in/home/author/jayasree-shankar என்ற இணைப்புக்குச் சென்று ’Buy Now’ என்பதை க்ளிக் செய்யுங்கோ, போதும். உங்களைத்தேடி மின்னல் வேகத்தில் இந்த மின்னூல் வந்து சேரும் . 




திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் 
அடுத்த மின்னூல் மதிப்புரையில் 
மீண்டும் விரைவில் நாம் சந்திப்போம்

  
 



என்றும் அன்புடன் தங்கள்,




சனி, 29 ஏப்ரல், 2017

புதிய மின்னூல் ஆசிரியர் அறிமுகம்

திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள் 


 

ஹைதராபாத்தில் வசித்துவரும் திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் என்ற தமிழ் வலைப்பதிவரை தங்களில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம்.

அவர்களின் வலைத்தளங்கள்: