என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 31 மார்ச், 2013

5] ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் !


”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

1985 ஆம் வருடம். எனக்கு முப்பதைந்து வயது. வரிசையாக அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். அவர்களின் வயது முறையே பத்து, எட்டு, மூன்று. என் வரவுகளும் வீட்டுச் செலவுகளும் மிகச்சரியாக இழுத்துக்கோ பறிச்சுக்கோ என இருந்த காலக்கட்டம்.  

என் தாயார் உள்பட எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஆறு நபர்கள். என் ஒருவனின் வருமானம் மட்டுமே. வேறு ஏதும் சொத்தோ சுகமோ கிடையாது. அலுவலகத்திலோ, வேறு தனி நபர்களிடமோ எக்காரணம் கொண்டும் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்தவன் நான்.

எனது அலுவலக நண்பர் ஒருவர்,  திரு. B. ராமகிருஷ்ணன் என்று பெயர். ஸ்ரீராம் சிட்ஸ் இல் ஓர் சீட்டு சேருமாறு என்னை மிகவும் நிர்பந்தப்படுத்தினார். அவர் தன் மனைவி பெயரில் ஸ்ரீராம் சிட் ஃபண்டில் ஏஜண்ட் ஆக செயல்பட்டு வந்தார். 

அப்போது ஸ்ரீராம் சிட்ஸ் கம்பெனி திருச்சியில் கிடையாது. சென்னையில் இருந்தது. மாதம் ரூ. 250 வீதம் 40 மாதங்கள் = ரூ. 10000/- என்ற சீட்டில் என்னை சேர்த்து விட்டார். ஏலச்சீட்டில் தள்ளுபடி போக, மாதம் சுமார் ரூ 180 முதல் 220 வரை மட்டும் கட்டும்படியாக இருக்கும். 

நவராத்திரி சமயத்தில் சேர்த்து விட்டதால் சுமார் 50 கிராம் எடையுள்ள ஒருபுறம் மட்டும் பிள்ளையார் படமும், மறுபுறம் ஸ்ரீராம் சிட்ஸ் சின்னமும்  பொறித்த வெள்ளிக்காசு ஒன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதோ இங்கே. மிகவும் சந்தோஷமாக இருந்தது.


ஒவ்வொரு மாதமும் அந்த ஏஜண்ட் என்னிடம் வந்து பணத்தை வசூல் செய்து போவார். என்னைப்போல பலரிடமும் மொத்தமாக வசூல் ஆகும் தொகையை சென்னைக்கு ஒரே DD யாக வாங்கி அனுப்பிவிடுவார். 

ஒவ்வொரு மாதமும் ஏலம் கேட்கலாமா? ஏலச்சீட்டை தள்ளி எடுக்கலாமா? குடும்பத்தில் ஏதாவது அவசர செலவுகள் இருக்கிறதா? என என்னைக்கேட்பார். 

சும்மா இல்லாமல் நான், ஏழாவது மாதத்தில் ஏலம் கேட்கச்சொல்லி சொன்னேன். ரூ. 3000 தள்ளி ரூ. 7000 கிடைத்தால் எடுத்துக்கொள்வதாக சம்மதக்கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து விட்டேன். 

அதுபோலவே ஏலம் கேட்ட பலநபர்களில், குலுக்கல் முறையில் என் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், ரூ 7000 சீட்டுப்பணத்தை வாங்கிக்கொள்ள, ஏற்கனவே இதுபோல சீட்டுக்கட்டி வரும், இரண்டு தனி நபர் ஜாமீன் வேண்டும் எனவும் எனக்கு சென்னை ஸ்ரீராம் சிட்ஸ்லிருந்து  கடிதம் வந்தது. 

எனக்கு அந்த நேரத்தில் அந்தப்பணம் தேவைப்படாததாலும், இரண்டு தனி நபர் ஜாமீனுக்கு யாரிடமும் போய்க்கேட்க எனக்கு விருப்பம் இல்லாததாலும், நான் என்னசெய்வது என்று யோசித்து ஓர் முடிவுக்கு வந்தேன். 

அதாவது அவர்களிடமே,  ஸ்ரீராம் சிட்ஸ் சென்னையிலேயே [ஸ்ரீராம் மோட்டார் ஃபைனான்ஸ் கம்பெனியில்]  அந்தப்பணத்தை மூன்று வருடங்களுக்கு டெபாஸிட்  செய்துகொள்வதாகச் சொல்லி அதற்கான மனுவை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தேன்.  

மனுவைப்பூர்த்தி செய்து அனுப்பும்போது, ஏற்கனவே அவர்கள் எனக்குக் கொடுத்த 50 கிராம் வெள்ளிக்காசுகள் போல மேலும் மூன்று காசுகளாவது, இந்த என் புதிய டெபாஸிட் தொகைக்காக அனுப்பி வைக்கும்படி, ஓர் கோரிக்கைக்கடிதமும் வைத்து அனுப்பினேன்.  

என் கோரிக்கை உடனே அவர்களால் ஏற்கப்பட்டது. FIXED DEPOSIT RECEIPT FOR RS. 7000 உடன் மூன்று 50 கிராம் வெள்ளிக்காசுகளும் REGISTERED POST மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 



ஒரு வெள்ளிக்காசில் 
தாமரைமலரில் 
நிற்கும்  ஸ்ரீ கெஜலக்ஷ்மி. 



இரண்டாவது வெள்ளிக்காசில்
  ஸ்ரீ வெங்கடாசலபதி .



மூன்றாவது வெள்ளிக்காசில் 
ஸ்ரீ கோதண்டராமர் 
ஸீதை + லக்ஷ்மணன் +  ஹனுமனுடன்.  



ஒரே கல்லில் 
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றுல்ல 
நான்கு மாங்காய்கள் போல 

அதுவும் ஒரே ஒரு ஏலச்சீட்டில் - 
நான்கு வெள்ளிக்காசுகள்
கிடைக்கப்பெற்றேன்.

அன்று முதல் இன்று வரை என் பணப்பெட்டியில் இந்த வெள்ளிக்காசுகள் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை என்னிடம் வந்தது முதல் இன்று வரை எனக்குப் பணப் பஞ்சம் என்பதே ஏற்பட்டது இல்லை. 

நம்மைவிட கஷ்டப்படும் சிலருக்காவது உதவி செய்யும் விதமாகவே என் பொருளாதர நிலை இருந்து வருகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

அப்போது நான் 40 மாதங்களிலும் சேர்த்து கட்டிய மொத்தத்தொகை ரூ. 8500 க்கு மேல் இல்லை. ரூபாய் ஏழாயிரத்தை ஏலச்சீட்டில் ஏழாவது மாதம் எடுத்து அதை அவர்களிடமே டெபாஸிட் செய்ததில் மூன்றாண்டுகள் கழித்து கிடைத்த மொத்தத்தொகை  ரூ 10570/-. 

இந்த சிறுசேமிப்பில் நான் முதன் முதலாகச் சேர்ந்ததினால், 40 மாதங்களில் எனக்குக் கிடைத்த நிகர லாபம் ரூ.2070 + நான்கு வெள்ளிக்காசுகள்.

அப்போதெல்லாம் இப்போது போல யாருக்கும் கைநிறைய சம்பளம் தரப்படவில்லை. 

மூன்றாண்டுகள் கழித்து சுளையாக பத்தாயிரம் ரூபாயை என் கண்களால் நான் பார்க்க, 40 மாதங்கள் சிறுகச்சிறுக சீட்டுக்கட்டியுள்ளேன் என்பதை இன்று நினைத்தாலும் மிகவும் வேடிக்கையாகவும், ஆச்சர்யமாகவும் தான் உள்ளது.


அதன் பிறகு திருச்சியிலேயே ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டது.  பிறகு பல ஏலச்சீட்டுகளில் நானும் சேர்ந்துள்ளேன். லட்ச ரூபாய் சீட்டுக்களிலெல்லாம் கூட துணிந்து சேர்ந்துள்ளேன்.   

அந்த நான் சேர்ந்த புதிய சீட்டுக்களுக்கெல்லாம் அவ்வப்போது ஏதேதோ பரிசுப்பொருட்கள் எனக்கு அளித்தார்கள். 

இருந்தாலும் முதன் முதலாக நான் கஷ்டப்பட்டுச் சேர்ந்த மிகச்சிறிய Rs. 250 x 40 Months = Rs. 10000 என்ற சீட்டின் மூலம்  நான்கு வெள்ளிக்காசுகள் கிடைத்தது தான் சந்தோஷமான நினைவலைகளாக இன்றும் உள்ளது. 

அந்த நான்கு வெள்ளிக்காசுகளும் இன்றும் என்னிடம் பொக்கிஷங்க்ளாகவே உள்ளன. 





தொடரும்

இந்த ’பொக்கிஷம்’ பதிவின் தொடர்ச்சி 
05.04.2013 வெள்ளிக்கிழமையன்று
வெளியிடப்படும்.


மாதா, பிதா, குரு, தெய்வம் 
என்று சொல்வார்கள் அல்லவா!

இனிவரும் என் பொக்கிஷப்பதிவுகளில்
அவர்களும் ஆங்காங்கே வரக்கூடும்.

oooooOooooo


 நாம் இன்று மறந்துபோன 
ஒருசில நாணயங்கள் 
இதோ இங்கே!
[உங்கள் ஞாபகத்திற்காக]


1960 இல் வெளியிட்டுள்ள 
ஒரு நயா பைசா


1 பைசா [2 வடிவங்களில்]
 2 பைசா [2 வடிவக்களில்]
 3 பைசா, 
5 பைசா,
10 பைசா [3 வடிவங்களில்]
20 பைசா [தாமரைப்பூ போட்டது]
 1/4 ரூபாய் [25 பைசாவுக்கு சமமானது]
 1/2 ரூபாய் [50 பைசாவுக்கு சமமானது]

நடுவில் உள்ளது தான் ஓட்டைக்காலணா


1/2 ரூபாய் நாணயம் 
[அதாவது 50 பைசாவுக்குச் சமமானது]
 தாமரைப்பூ போட்ட 20 பைசா, 
கெட்டியான நெளிநெளியான 10 பைசா
3 பைசா, 2 பைசா, 1 பைசா


சமீபத்தில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த 25 பைசா

-oOo- 


அடுத்து பலியாகத் 
தயாராகக் காத்திருக்கும் 
[இன்று நம்மிடைய புழக்கத்தில் உள்ள] 
50 பைசா நாணயங்கள் இதோ:






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




புதன், 27 மார்ச், 2013

4] அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!




                                                                      
”பொக்கிஷம்”
            
தொடர்பதிவு 
   By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

[1] BHEL நிர்வாகம் 
எனக்கு அளித்த
சில பொக்கிஷங்கள்


            

BHEL பற்றி நான் எழுதிய பாடலுக்கு
BHEL நிர்வாகம் எனக்கு அளித்துள்ள 
மிகப்பெரிய அங்கீகாரம்.

மேலும் விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html


நான் எழுதிக்கொடுத்த கீழ்க்கண்ட பாடல் அழகாக இசையமைக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளிலும், அது தவிர தனியாக புல்லாங்குழல் இசையிலும் BHEL நிர்வாகத்தால் CD யாக வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழிலோ அல்லது ஹிந்தியிலோ இசையைக்கேட்டு மகிழ விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டுமே கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது: @@@@@

BHEL Song | Muziboo

நம் ஆலை ஓர் ஆலயம் 

[பாடல்]



பாரத மிகுமின் தொழிலகமே
பாரினில் நல்ல எழிலகமே

இதில் உழைப்பவர் நாங்கள் அரை லட்சம்
பலனில் பிழைப்பவர் உலகில் பல லட்சம்

தரத்தினில் நாங்கள் தங்கமென்று
தரணியில் புகழை எட்டிவிட்டோம்

இந்தியத் திருநாட்டின் ஆலை இது
நெஞ்சில் நவரத்தினம் பதித்த மாலை இது

ஜாதி மத இன மொழி நிற பேதமின்றி
அனைவரும் பழகிடும் பசுஞ்சோலை இது

சோதனை பலவும் பார்த்து விட்டோம்
சாதனை பலவும் புரிந்து விட்டோம்

வேதனை என்றும் பட்டதில்லை
வெற்றிகள் எட்டாமல் விட்டதில்லை

அனுதினமும் திட்டங்கள் பல தீட்டிடுவோம்
அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றிடுவோம்

உழைப்பினில் கவனம் செலுத்திடுவோம்
உற்பத்தி இலக்கினை எட்டிடுவோம்

உலகச்சந்தையில் போட்டியிட்டு
உன்னத ஆணைகள் பெற்றுவிட்டோம்

மின்னொளிச் சாதனச் சந்தையிலே
என்றும் முன்னனியாகத் திகழ்கின்றோம்

நம் நிறுவனத்தின் நல்ல வளர்ச்சி போலவே
நாமும் இன்று வளர்ந்து விட்டோம்

வி சா ல மா ன ஆலையில் உழைத்தே, நாம்
வி லா ச மு ள் ள வ ர்  ஆகி உள்ளோம்

வளரட்டும் நம் ஆலை - வாழட்டும் நம் மக்கள்
மலரட்டும் நம் வாழ்வு - மகிழட்டும் நம் மனது

இன்றுபோல் என்றும் நாம்
இன்புற்று வாழ்ந்திடுவோம்

தாய்போல் நம்மை வளர்த்த 
நம் ஆலையை

தலையால் வணங்கிடுவோம் 
ஓர் ஆலயமாய்.

-oOo-


 


BHEL துவங்கி வெற்றிகரமாக 
50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி
[ 1956-2006 ]
BHEL நிர்வாகம் எனக்களித்த 
10 கிராம் எடையுள்ள சுத்தத்தங்க நாணயம்


 


நான் பணி ஓய்வு பெற்ற அன்று 
BHEL நிர்வாகம் 
எனக்களித்த நினைவுப்பரிசு.
மேலும் விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/2.html


 




தொழிலகப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் 
தமிழ் சிறப்பு வாக்யத்திற்கு (SLOGAN) 
முதல் பரிசு 
மற்றும் 
தமிழ் கவிதைக்கு 
இரண்டாம் பரிசு.

26.05.2008 அன்று நடைபெற்ற 
மிகப்பெரிய விழாவில்
Mr.S.Rathinam, 
Dy.  Chief  Inspector of  Factories 
அவர்களால் வழங்கப்பட்டது 



 




அவசர மருத்துவ சிகிச்சை பெற 
'BHEL' HOSPITAL OUT-PATIENT BOOKS.

[இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி
அவசியமாகத் தேவைப்படும் 
பொக்கிஷங்களாகவே இவைகளும் உள்ளன.]

 



[2] நாணயமான சில செய்திகள்




ஒருசில பழங்கால நாணயங்களைச் சேர்ப்பது என் வழக்கமாக இருந்து வந்தது. அதில் பலவற்றை யார் யாருக்கோ கொடுத்து விட்டேன். கைவசம் உள்ளதில் மிகப்பழமையான ஓர் நாணயம் இதோ:





இது 1835 இல் EAST INDIA COMPANY காரர்களால்
வெளியிடப்பட்டுள்ள அரை அணா நாணயம்.

நல்ல வெயிட்டாக சுமார் 50 கிராம் எடை உள்ளது. 
அதன் விட்டம் [3 CMs Dia.] மூன்று செண்டிமீட்டர் உள்ளது. 
தாமிரத்தால் செய்யப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்.

இந்த அரை அணா என்பது 
ஒரு முழு ரூபாயில் 32 இல் ஒரு பாகமாகும்.

THIS WAS EQUAL TO 
OUR PRESENT 3.125 PAISE, ONLY !

178 YEARS OLD COIN !! ;)



அந்த அரை அணா
நாணயத்தின் மறுபக்கம்

 



மேலே காட்டப்பட்டுள்ளது இந்திய அரசாங்கத்தால் 1972 இல் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயம். நல்ல வெயிட் ஆக இதன் எடை சுமார் 100 கிராம் உள்ளது. இதன் விட்டம் நான்கு செண்டிமீட்டர் [ 4 CMs Dia.] உள்ளது. 

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகள் ஆனதை உத்தேசித்து 1947-1972 என்று சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ளார்கள். 

1972 எனக்கு திருமணம் நடந்த ஆண்டு. அப்போது எனக்கு 22 வயது. இந்தக்காசில் ஒன்றும் என்னிடம் பொக்கிஷமாகவே 1972 முதல் இருந்து வருகிறது. 




அந்த 10 ரூபாய் நாணயத்தின் பின்புறம் டெல்லி செங்கோட்டையும், நமது தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு ஒரு ஆணும், அருகில் ஒரு பெண்ணும் 1947-1972 என்ற வருஷமும் குறிக்கப்பட்டுள்ளன.

இன்று வெளியிடப்படும் ஐந்து ரூபாய் நாணயங்களுக்கும் ஐம்பது பைசா நாணயங்களுக்கும் உருவத்தில் வித்யாசமே தெரியாமல், தேய்ந்து போய் மிகச்சிறியதாக உள்ளது என்பது, மிகவும் வேத்னை அளிக்கும் ஓர் விஷயமாகும்.


 


[3] என்னிடம் சிக்கினார் 
ஓர் ஸ்ரீ ஹனுமார்



இந்த நூறு ரூபாய் நோட்டின் [Water Mark] 
வெள்ளைப்பகுதியை கவனியுங்கள்.
அதில் ஓர் பறக்கும் ஹனுமார்
ரப்பர் ஸ்டம்ப் ஆக வைக்கப்பட்டுள்ளது.
என்னிடம் சிக்கிய இந்த ரூபாய் நோட்டை 
பல வருடங்களாகக் கட்டிக்காத்து வருகிறேன்.  

 

4] துபாயில் ஒருவர் வீட்டில் அளித்த  
மாபெரும் விருந்தும் அன்பளிப்பும்


துபாய் சென்றிருந்தபோது அங்குள்ள 
திருமதி: ஜனகாசுதா ஸ்ரீநிவாஸன் என்பவர் 
21.10.2004 அன்று எனக்களித்த 
ஸ்பெஷல் விருந்துடன் கூடிய
அன்பளிப்புப் பொக்கிஷம்

 


[5] பொக்கிஷங்களைவிட 
பொக்கிஷமாய் உணரப்படும்  
இன்றைய நம்
அத்யாவஸ்ய தேவைகள்

காசே தான் கடவுளப்பா!


”பணம் என்னடா பணம் பணம் 
குணம்தானடா நிரந்தரம்”

எனப் பாட்டுப்பாடலாம்!

ஆனால் பணம் இல்லாதவன் 
இன்று பிணம் அல்லவா !

பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!!

அது தான் இன்றைய உண்மையான நிலை.



அன்றாடத்தேவைகள் 
அனைத்துக்கும் 
துட்டு மட்டுமே 
பிரதானத் தேவையாய் உள்ளது.

துட்டைவிட பெரிய
பொக்கிஷமும் உண்டோ?

 

தொடரும்


இந்தப் ’பொக்கிஷம்’ தொடரின் 
மிகவும் விறுவிறுப்பான அடுத்த பகுதி
01.04.2013 திங்கட்கிழமையன்று
வெளியிடப்படும்.


என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்


@@@@@

24.03.2013 ஞாயிறு அன்று, குழந்தை செல்வி ரோஷ்ணி அவர்கள் முதன் முதலாக எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


செல்வி ரோஷ்ணி தன் பெற்றோர்களுடன் வந்திருந்ததால், இசையுடன் கூடிய பாடலை இந்தப்பதிவினில் இணைக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது.  


திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், காலத்தினால் செய்த இந்த உதவிக்கு, என் மனமார்ந்த இனிய நன்றிகளை இங்கு பதிவுசெய்து கொள்கிறேன்.

சனி, 23 மார்ச், 2013

3] பொக்கிஷமான ஒருசில நினைவலைகள் !


”பொக்கிஷம்”

தொடர்பதிவு 
By
வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள்

ஒருசில நீங்காத இனிய நினைவலைகளை மட்டும்
இங்கே தங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.



வென்ற முதல் பரிசு : 
’தங்க நெக்லஸ்’
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html







தேசிய விருது - முதல் பரிசு
சான்றிதழும் தங்கப்பதக்கமும்
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/3.html


MY POSTER + SLOGAN ENTRY WHICH HAS WON 
THE ALL INDIA LEVEL FIRST PRIZE
OF 'I N S S A N' NATIONAL AWARD



 முதல் சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
முதல் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html


ரொக்கப்பரிசுடன் அளிக்கப்பட்ட 
‘அற இலக்கியக் களஞ்சியம்’
என்ற நூல் பரிசு
[1008 பக்கங்கள் கொண்டது]








இரண்டாவது 
சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
இரண்டாம்  பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html









திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அளித்த 
’சிந்தனைப்பேரொளி’ 
என்ற விருது
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html





மூன்றாவது 
சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு
முதல் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html





அகில இந்திய அளவில் நடைபெற்ற 
நாடக ஆக்கப் போட்டியில் 
மூன்றாம் பரிசு 
விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/04/18.html




2009 ஆண்டு ‘அன்னையர் தினத்தை’ ஒட்டி தினமலர் - பெண்கள் மலரால் ஓர் சிறப்பு வாக்கியக் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.  

என் வீட்டிலும், என் சொந்தக்காரர்கள் வீட்டிலும் உள்ள அனைத்துப் பெண்களையும் கலந்து கொள்ளச்செய்தேன். சுமார் 10 படைப்புகள் எங்களால் அனுப்பப்பட்டன.  

கலந்து கொண்ட அனைவருமே, நான் அஞ்சல் அட்டைகளில் எழுதிய ஏதோ ஒரு வாசகத்தின் கீழ் கையெழுத்து மட்டும் போட்டுக்கொடுத்து விட்டுச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இரண்டே வரிகளில் எழுதிய படைப்பு ஒன்று இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புது ’பஜாஜ் மிக்ஸி’ பரிசினை தட்டிக்கொண்டு வந்தது. 

இன்றும் நாங்கள் உபயோகிக்காமல் புத்தம் புதிதாகவே வைத்திருக்கும் பொக்கிஷம் இதோ இங்கே:  


போட்டியில் வென்ற வாசகம்:

”அம்மா ! 
நீ மட்டுமே எப்போதும் 
என் தொடர்பு எல்லைக்குள் !!”

போட்டியில் பரிசினை வென்ற அஞ்சல் அட்டை  
என் இரண்டாவது மருமகள்:
திருமதி. மீனாக்ஷி சங்கர், திருச்சி
என்ற பெயரில் என்னால் அனுப்பப்பட்டது.




’விளக்கேற்றி வைக்கிறேன் ..... 
விடிய விடிய எரியட்டும்’ 

என்று 
“சமையல் அட்டகாசங்கள் - 
திருமதி ஜலீலா கமால் அவர்கள்”

சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள
பொக்கிஷமான பரிசு.

விபரங்களுக்கு இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html





எனக்குப் பலரிடமிருந்து அவ்வப்போது பாராட்டுக் கடிதங்கள், தபாலிலும் மின்னஞ்சல் மூலமும் வருவது உண்டு. அவற்றை நான் பொக்கிஷமாக சேகரித்து வைப்பதும் உண்டு. 

என் சிறுகதைத்தொகுப்பு நூல்களை, பலருக்கும் நான் அன்பளிப்பாக வழங்கியபோது, ஒவ்வொரு புத்தகத்திலும், என் சுயவிலாசமிட்ட ஒரு அஞ்சல் அட்டையையும் வைத்தே கொடுத்திருந்தேன். 

படித்தபின் குறை நிறைகளைச்சுட்டிக்காட்டி எழுதி, அவர்கள் அந்த அஞ்சல் அட்டையை தபால்பெட்டியில் சேர்த்தால் போதும் என்ற நோக்கத்தில். 

அதுபோல எனக்கு இதுவரை வந்துள்ள ஏராளமான கடிதங்களில் இங்கு ஒரேயொரு கடிதத்தை மட்டும் தங்கள் பார்வைக்காக காட்டியுள்ளேன். 

இதில் மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால், இதை எழுதியவர் மிகவும் வயதான ஒரு அம்மாள். அவருக்கு அப்போதே வயது 95 க்கு மேல் ஆகிவிட்டது. 

அவர் பெயர்: ஜெயலக்ஷ்மி அம்மாள். [வயது 2010 இல் : 96 ]

விலாசம்: [கணவர் பெயர்: திரு.ஹாலாஸ்யம்] மேல அக்ரஹாரம், பிக்ஷாண்டார் கோயில் கிராமம், உத்தமர்கோயில் இரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில், திருச்சி மாவட்டம். PIN: 621 216.

இவர், தன் கடைசி காலம் வரை தேக ஆரோக்யத்துடன் நன்கு நடமாடிக்கொண்டும், கண்ணாடி ஏதும் அணியாமலேயே, எதையுமே ஆசையாகப்படிப்பதிலும், எழுதுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தவர். 

என்னுடைய மூன்றாவது  சிறுகதைத்தொகுப்பு நூலை முழுவதுமாக ரஸித்துப் படித்துவிட்டு, தானே தன் கைப்பட அதில் உள்ள 15 சிறுகதைகளைப் பற்றியும், தனித்தனியே பாராட்டி விமர்சித்து, ஒரே போஸ்ட் கார்டுக்குள் அவற்றை அழகாக மணிமணியாகக் கொண்டுவந்து,  சிரத்தையாக ஒழுங்காக திட்டமிட்டு எழுதியுள்ளது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. 


அவர்கள் இந்தக்கடிதம் எழுதியுள்ள நாள்: 31.01.2011

கடிதம் என் கைக்குக் கிடைத்த நாள்: 01.02.2011 

சமீபத்தில் தன் 98 ஆவது வயதில், அந்த அம்மாள் காலமாகி விட்டார்கள் எனக் கேள்விப்பட்டு நான் மிகவும் வருந்தினேன். 

இன்று அவர்கள் உயிருடன்  இல்லாவிட்டாலும், அவர்கள் எனக்கு எழுதிய கடிதம் உயிருடன் பொக்கிஷமாகவே என்னிடம் உள்ளது.


தொடரும்




’பொக்கிஷம்’ 

தொடரின் அடுத்த பகுதி

28.03.2013 வியாழக்கிழமையன்று 

வெளியிடப்படும்







என்றும் அன்புடன் தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்