என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-18]


{ நிறைவுப்பகுதி }

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-23


[சங்கரரின் அழகான சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த பட்டுவும் கிட்டுவும் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்]


பட்டு:


இது போல மிக இனிமையாகவும், மிகச் சுலபமாகப் புரியும்படியும் யாரால் உவமானங்கள் சொல்ல் முடியும்? 


கிட்டு:


ஆம். நம் சங்கரரால் மட்டுமே இதுபோல அழகாகப் பேச முடியும்.


ஆமாம். அதிருக்கட்டும். 


நம் சங்கரர், தான் மட்டும் ஏதோ ஹிமாசலம் போய் கேதார்நாத் செல்லப்போவதாகச் சொல்கின்றாரே! 


அவர்கூட,  நாம் யாராவது போக வேண்டாமா?


பட்டு:


யாரும் தன்கூட வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.


ஏதோ ஒரு குகைக்குள் தனிமையில் தியானம் செய்யப்போகிறாராம்.


எப்போது திரும்பி வருவார் என்று அவருக்கே தெரியாதாம்.


கிட்டு:


சங்கரர் இல்லாத இடத்தில் நமக்கு இனி என்ன வேலை?


நாமும் நம் ஊருக்கே திரும்பிப்போய் சங்கரருடன் பழகிய அனுபவங்களை பலருக்கும் தெரிவித்து, அவரின் புகழைப் பரப்புவோம்.


பட்டு:

ஆமாம்....  ஆமாம்.  நீ சொல்வது தான் சரி. 

நாளைக்கு சங்கரர் கேதார்நாத்துக்கு புறப்பட்டதும், நாமும் நம் ஊரைப்பார்க்கக் கிளம்பிடுவோம்.  

அதற்கான பயண வேலைகளை இப்போதே ஆரம்பித்து விடலாம் ..... வா!




ooooooooooooooooooooooooooooooooo




காட்சி-24
[ஆதி சங்கரர் படத்தை, பூ மாலைகளால் அலங்கரித்து வைக்கலாம். இரண்டு குத்து விளக்குகள், ஐந்து முகங்களுடன் அழகாக எரிவதுபோல வைக்கலாம். பின்னனியில் கீழ்க்கண்டவாறு குரல் மட்டும் கொடுக்கலாம்]



    




ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிகிறோம்.


அவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது.


புண்ணிய பூமியாம் நம் பாரதத் திருநாட்டில் பல்வேறு மடங்கள், ஆதி சங்கரரால் நிறுவப்பட்டு, இன்று வரை அவை மக்களை பக்தி மார்க்கத்தில் இட்டுச்சென்று, நல்வழிப்படுத்தி வருகின்றன.


மிகவும் பழமை வாய்ந்த வேதங்களும், சாஸ்திரங்களும், சனாதன தர்மங்களும், ஆலமரம் போல் விழுதுகள் விட்டு, உலகில் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் யார்?


நம் ஆதிசங்கரர் அவர்களால் வித்திட்டு, விதை விதைத்து, நீர் ஊற்றி, நன்கு வளர்த்ததனால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.


நமக்கு வழிகாட்டியாக இருந்த “சங்கரர்” என்கிற ஆதிசங்கரரை என்றும் நினைப்போம். 


அவரின் அவதார தினத்தை ஆண்டுதோறும் ”சங்கர ஜயந்தி”த் திருநாளாக எல்லோரும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.


அவர் இயற்றிய ஸ்லோகங்களை அனைவரும் படிப்போம்.


அனுதினமும் அவற்றை உச்சரித்து மகிழ்வோம்.


ஆதி சங்கரர் காட்டிய நல்வழியில் நாம் வாழ்வோம். 


நற்கதியை நாம் அடைவோம்.


[தோடகாஷ்டக ஸ்லோகத்தை ஒலிபரப்பி நாடகத்தை முடிக்கலாம்]    




ஸ்ரீ தோடகாஷ்டகம்



விதிதா கில சாஸ்த்ர ஸுதா ஜலதே 
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 1 ]


கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்!
ரசயாகிலதர்சன தத்த்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 2 ]



பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே!
கலயேச்வர ஜீவவிவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 3 ]



பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெள துதிதா
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 4 ]



ஸுக்ருதே (அ) திக்ருதே பஹூதா பவதோ
பவிதா ஸமதர்சன லால ஸதா!
அதி தீன மிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 5 ]



ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸ: ச்சலத:!
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி புரோ
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 6 ]



குருபுங்கவ புங்கவகேதந தே 
ஸமதா மயதாம் ந ஹி கோ பி ஸுதீ:!
சரணா கத வத்ஸல தத்த்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 7 ]




விதிதா ந மயா விசதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ!
த்ருத மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!! [ 8 ]


-ooooooooooooooooooooooooooo-

நாடகம் நிறைவுற்றது

-ooooooooooooooooooooooooooo-






சுபம்



  ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


இந்த நாடகத்திற்கு காட்சி வாரியாக என்னால் கொடுக்கப்பட்டிருந்த நேர ஒதிக்கீடுகள் [TIME SCHEDULE FOR EACH AND EVERY SCENE]

காட்சிகள்: 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 13, 17 மற்றும் 23 ஆகிய

12 காட்சிகள் தலா 2 நிமிடங்கள் வீதம் ............................ 12*2 = 24 நிமிடங்கள்

காட்சிகள்: 7, 11, 15, 16/1, 16/2, மற்றும் 21 ஆகிய  


6 காட்சிகள் தலா 6 நிமிடங்கள் வீதம்................................ 6*6 =  36 நிமிடங்கள்

காட்சிகள்: 12, 14, 18, 19, 20 மற்றும் 24 ஆகிய

6 காட்சிகள் தலா 4 நிமிடங்கள் வீதம் .............................. 6*4 =  24 நிமிடங்கள்

காட்சி 22 க்கு மட்டும் ..........................................................        10 நிமிடங்கள்

ஒவ்வொரு காட்சிக்கும் இடைவெளி 
Setting Time / Breathing Time ....................................................      26 நிமிடங்கள்

                                                                                                                ===================                                                               ========

ஆகமொத்தம் ...............................................................               120 நிமிடங்கள்
                                                                                                                ===================                                                              ========
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo



”ஸ்ரீ ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”


என்ற தலைப்பில் பள்ளிச்சிறுவர்களால் 2 மணி நேரத்திற்குள் நாடகமாக நடித்து முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய, நாடக ஆக்கம் பற்றிய எழுத்துப்போட்டி ஒன்றுக்காக, இந்த நாடகம் என்னால் 2007 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

குறிப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் இந்த நாடகம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதாலும், அதே நேரம் சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் யாவும், ஓரளவுக்காவது, முழுமையாகப் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதாலும், “பட்டு” “கிட்டு” என்ற இரண்டு கற்பனைக் கதாபாத்திரங்களை இந்த நாடகத்தில் நானாகவே நுழைத்துள்ளேன். 

நாடகத்தில் நடித்துக்காட்டப்பட நேரமில்லாத பகுதிகளை இந்த “பட்டு” “கிட்டு” ஆகிய இருவரின் உரையாடல்கள் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில். நான் இந்த இரு கதாபாத்திரங்களைக் கையாண்டுள்ளேன்.

ஆதிசங்கரரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று நூல்கள் எதிலும், இந்தப்பட்டுவையோ அல்லது கிட்டுவையோ நீங்கள் காணமுடியாது. 

இதுபோன்ற வரலாற்றில் காணப்படாத இருவரை, நானே [காமெடியன்ஸ் போல] இடையே நுழைத்துள்ளதால் தான், என்னுடைய படைப்பு முதல் பரிசுக்கோ இரண்டாவது பரிசுக்கோ பரிசீலிக்கப்படாமல் போய் விட்டதோ என்ற சந்தேகமும் எனக்கு பிறகு ஏற்பட்டது. 

ஏதோ என் படைப்பு, அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியொன்றில், மொத்தம் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட, படைப்பாளிகளின் இடையே, மூன்றாவது பரிசுக்காவது தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. 

பரிசளிப்பு விழா 02.10.2007 அன்று சென்னை தி. நகரில், வாணி மஹாலில் நடைபெற்றது. ரொக்கப்பரிசாக ரூபாய் ஐயாயிரம் அளிக்கப்பட்டது. என் குடும்பத்தார் அனைவருடனும் நேரில் போய் விழாவில் கலந்து கொண்டேன். 


அன்றைய தினம் அங்கு கூடியிருந்த எக்கச்சக்கமான கும்பலாலும், ஒருசில V.V.I.P. க்களின் வருகையாலும், அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளாலும், பரிசு பெறுபவர்களைத் தவிர வேறு யாரையும் மேடைக்கு அருகே, சென்று அமர அவர்கள் அனுமதிக்கவில்லை. 


அதனால் அன்று நான் பரிசு பெறுவதை, என் குடும்பத்தினர், மிகத்தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்தது சரியாகத் தெளிவாக அமையவில்லை. 






இந்த என் வெற்றிக்காக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் 16.10.2007 அன்று திருச்சியில், எனக்கு ஓர் பாராட்டு விழா நடத்தியது.



தமிழ்ப் பேராசிரியரும், தொலைகாட்சிப்புகழ் பட்டிமன்ற நடுவரும்
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான 
பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய 
திரு. சோ. சத்யசீலன் ஐயா அவர்களால்
16.10.2007 அன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

-oOo-






இந்தத் தொடர் நாடகத்திற்கு, அன்புடன் வருகை புரிந்து, அவ்வப்போது உற்சாகப்படுத்தி மகிழ்வித்த, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


என் அடுத்த பதிவினில், 
இந்த என் நாடகத்தின் 18 பகுதிகளிலும் 
அவ்வப்போது வருகை தந்து 
கருத்துக்கள் கூறி 
உற்சாகப்படுத்தியுள்ள 
 உங்கள் அனைவருக்கும் 
தனித்தனியே நன்றி கூறுவேன்.



என்றும் அன்புடன் தங்கள்
vgk

-oOo-


ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-17]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-22
[சங்கரர், தன் நான்கு பிரதான சிஷ்யர்களுடன் அமர்ந்திருக்க கூடவே வேறு சிலரும் உள்ளனர். சங்கரர் ஏதோ சொற்பொழிவு ஆற்றத் தயாராக உள்ளது போல அனைவருக்கும் தோன்றுகிறது.]




ஸ்ரீ பத்ரிநாத் ஆலயம்





சங்கரர்: 


பத்ரிநாராயணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் முடித்து விட்டோம்,  இப்போது தான் மனம் அமைதியாக உள்ளது. 


இந்த த்யான மண்டபத்தில் உங்களுக்கெல்லாம் ஏதாவது சொல்லணும்னு தோன்றுகிறது. 


நீங்கள் எல்லோரும் தொடர்ந்து அத்வைத சித்தாந்தங்களை, மிகவும் எளிய முறையில், மக்களுக்குப் புரியுமாறு எடுத்துக்கூற வேண்டும்.




ஒருவர்: [சங்கரரிடம் மிகவும் பெளவ்யமாக] 


தங்கள் திருவாயால் எங்களுக்கு எடுத்துக்கூறினால், நாங்கள் அதைப் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்ல செளகர்யமாக இருக்கும், என்று பெரியவாளிடம் விக்ஞாபனம் செய்து கொள்கிறேன். 


நான் ஏதாவது தப்பாப் பேசியிருந்தால் தயவுசெய்து பெரியவா என்னை க்ஷமித்துக்கொள்ளணும்.




சங்கரர்:


[1]


கடவுள் தான் பரமாத்மா.


பரமாத்மா ஒரு மிகப்பெரிய ஸமுத்ரம் போன்றவர். 


ஜீவாத்மா என்ற நாம் ஸமுத்ர நீரில், காற்றடிக்கும் போது ஏற்படும் நீர்க்குமிழிகள் போன்றவர்கள்.


பிடிமானம் ஏதுமின்றி தத்தளிப்பவர்கள்.


ஸமுத்ரம் வேறு, அந்த ஸமுத்ரத்தில் உள்ள நீர்க்குமிழிகள் வேறு அல்ல.


இரண்டும் ஒன்று தான்.


ஸமுத்ரமும் தண்ணீர் தான்; நீர்க்குமிழிகளும் ஸமுத்ரத் தண்ணீர் தான்.  


ஸமுத்ரத் தண்ணீராலேயே உருவாக்கப் பட்டவைகள் தான் நீர் குமிழிகள்.


அது வேறு இது வேறு அல்ல.


அது போலத்தான், அடிக்கும் காற்று என்பது, நாம் ஏற்கனவே செய்த அல்லது செய்து கொண்டிருக்கிற பாவ புண்ணியங்கள் போல என்று சொல்லலாம். 


காற்று நல்லதாக, இதமானதாக, விரும்பக்கூடியதாக, தென்றலாக வீசலாம். 


அதுவே மிகக்கொடூரமாக, சூறாவளியாக, அழிக்கும் ஆற்றல் கொண்டதாக, புயலாகவும் வீசலாம்.


கெட்ட காற்று வீசினால் கடல் அலைகளில் மாட்டித் தடுமாறும், நீர்குமிழி போல நாமும் தத்தளிக்கிறோம்.


மனம் சஞ்சலப்படுகிறது.


மனதை ஒருநிலைப் படுத்தினால் பக்தி ஏற்படுகிறது.


பக்தி ஏற்பட்டால் ஞானம் ஏற்படுகிறது.


ஞானம் ஏற்பட்டு விட்டால் ஜீவாத்மாவான நம்மால் பரமாத்மாவை அடைய முடிகிறது.


கடல் அலையில் தத்தளிக்கும் நீர்குமிழி மேல், நல்லதொரு அமைதியான காற்று வீசும்போது, நீர்க்குமிழி உடைந்து ஸமுத்ர நீருடன் கலந்து விடுகிறது. 


அதுபோலவே ஞானம் ஏற்பட்டு விட்டால் அக்ஞானம் ஒழிந்துபோய், நாமும் தெய்வமும் ஒன்று என்ற ஒரு உன்னத சம நிலையை எட்ட முடிகிறது.


இதுவே நாம் சொல்லும் அத்வைதக் கருத்தாகும்.


[2]


முக்காலமும் உணர்ந்த ஞானிகள் கூறுவதைக் கேட்டு நடப்பது தான் மிகவும் சுலபமான வழி.


ஆற்று நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. 


தாகத்தால் ஒரு சின்னக்குழந்தை நாக்கு வரண்டு போய்த் தவிக்கிறது.


அதனால் ஆற்றில் இறங்கி நீர் அருந்த முடியுமா?


ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை மொண்டுக் கொடுத்தால், குழந்தை சுலபமாகக் குடித்து தாக ஸாந்தி செய்துகொள்ள முடியும் அல்லவா?


நீரை மொண்டு குழந்தைக்குக் குடிக்கக் கொடுப்பது போலத்தான், நமக்கு ஞானிகள் காட்டிடும், வகுத்துத்தரும் வழிமுறைகள் யாவும் சுலபமானவை.


நாம் செய்யவேண்டியது, குருவிடம் முழுவதுமாக நம்பிக்கை வைத்து சரணாகதி அடைவது மட்டுமே; மற்றவைகள் அவர்பாடு என்று இருந்து விட வேண்டும்.


அவர் நம்மை இந்தப்பிறவிப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றி, பகவான் திருவடிகளில், கரை சேர்த்து விடுவார்.


கர்மானுஷ்டானங்கள் செய்வது நம் மன அழுக்கை நீக்க உதவும்.


பக்திசெய்தால் மனம் ஒரு நிலைப்படும்.


மனம் ஒருநிலைப்படுதலே, குருவிடம் சென்று ஞானம் பெறுவதற்கான முதல்நிலை.


[3]


ஒரு அறையில் நல்ல இருட்டாக உள்ளது.


ஒரு ஓரமாக ஒரு பூமாலை கிடக்கிறது.


கதவைத் திறந்துகொண்டு ஒருவர் உள்ளே வருகிறார்.


இருண்ட அந்த அறையில் நுழைந்தவருக்கு ஏதோ சுருண்டு பளபளப்பாக உள்ள அந்த வஸ்து பாம்பு என்று தோன்றுகிறது.


உடனே அவருக்கு மிகுந்த பயம் ஏற்படுகிறது.


நேரம் ஆக ஆக அந்த பயம் அதிகரிக்கிறது.


அந்த வஸ்து பூமாலை என்பது தான் சத்தியம்.


அந்த சத்தியம் தான் ப்ரும்மம்.


ப்ரும்மமாகிய சத்தியமாகிய மாலை என்பதை அவர் உணராமல் தடுப்பது தான் மாயை என்ற அறியாமை.


இந்த உலகமே மாயை தான்; அறியாமை தான்; பாம்பு தான்; பயம் தான்.


அறியாமையை அகற்றி எல்லோரும் ப்ரும்மத்தை உணர வேண்டும்.


அதற்கு ஞானம் என்ற ஒளி வேண்டும்.


ஞானம் என்ற ஒளியைப்பெற ஞானிகளின் வழிகாட்டுதல் வேண்டும்.


[4]


பெரிய பாறாங்கல்லாக இருந்த ஒரு வஸ்துவை சிற்பி ஒருவன் செதுக்குகிறான்,      


அதை தெய்வத்தின் தோற்றத்துடன் அழகிய சிலையாக வடிக்கிறான். 


அந்தச்சிலை கோயிலில் வைத்து தெய்வமாக வணங்கப்படுகிறது.


சிலையாக உருவாவதற்கு முன்பு அது கல்லாக இருந்தது.


சிலையாக உருவான பின்பும் அது கல்லே தான்.


வெறும் கல்லாக இருந்த அது இப்போது கற்சிலை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது.


பெரிய அந்தக்கல்லிலிருந்து தேவையில்லாத பாகங்கள் மட்டும் சிற்பியால் நீக்கப்பட்டுள்ளன அல்லது செதுக்கி எறியப்பட்டுள்ளன.


தேவையற்றவைகள் நீக்கப்பட்டு விட்டதால், அதே கல்லிலிருந்து அழகிய சிலை தோன்றி, அனைவராலும் வழிபட்டு போற்றக்கூடிய நிலை அந்தக்கல்லுக்கு ஏற்பட்டுள்ளது.


அதுபோலவே நம்மிடம் உள்ள 


தேவையற்ற எண்ணங்களையும், 
தேவையற்ற பேச்சுக்களையும், 
தேவையற்ற செயல்களையும், 
தேவையற்ற ஆணவத்தையும், 
தேவையற்ற ஆடம்பரங்களையும், 
தேவையற்ற சுயநலத்தையும் 


நாம் நம்மிடமிருந்து செதுக்கி எறிந்து விட்டால், இன்று பாறாங்கல் போன்று உள்ள நாமும்,, தெய்வாம்சம் பொருந்தியவராக மாறி, அனைவராலும் வணங்கப்படுவோம்.


இதுவே ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டும் ஒன்று என்ற அத்வைத தத்துவமாகும்.






[சங்கரர் தனது உரையை முடித்துக்கொள்கிறார். அனைவரும் எழுந்து சங்கரரை வணங்கி நமஸ்கரிக்கின்றனர்] .


ooooooooooOoooooooooo






இந்த தொடர் நாடகத்தின் இறுதிப்பகுதி 
{ பகுதி-18 [காட்சிகள் 23+24] }
நாளை 30.04.2012 திங்கட்கிழமை
  பகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும். 



  
குருவருளாலும்,

திருவருளாலும்,
 
பின்னூட்டம் என்ற உற்சாக பானத்தை 
அடிக்கடி அள்ளி அள்ளி தந்துள்ள 
உங்கள் அனைவரின் அருளாலும்

இது என் 300 ஆவது 
பதிவாக அமைந்துள்ளது.

மேலும் இது, இந்த 2012 ஆம் ஆண்டின் 
100 ஆவது பதிவுமாகும்.



தங்கள் அனைவரின்
ஒத்துழைப்புக்கும்
அடியேனின் மனமார்ந்த
இனிய நன்றிகள்!




நாளை மீண்டும் சந்திப்போம்.


என்றும் அன்புடன் தங்கள்
vgk



சனி, 28 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-16]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-21


[பட்டுவும் கிட்டுவும் வெகு நாட்களுக்குப்பின் சந்தித்து உரையாடுதல்]


பட்டு:


என்ன கிட்டு, உடம்பு சரியில்லைன்னு சொல்லி யாத்திரைக்கு வராமலேயே இருந்துட்டேளே! இப்போ உடம்பு எப்படி இருக்கு?


கிட்டு:


ஏதோ தேவலாம். 


அதெல்லாம் நாம பார்த்த இடம் தானேன்னு இருந்துட்டேன். 


வடக்கே பத்ரிநாத் யாத்திரைக்கு கட்டாயம் வருவேன். 


நீங்க போன இடத்திலெல்லாம் என்னென்ன நடந்ததுன்னு விபரமாச் சொல்லுங்கோ!


பட்டு:


திருவடைமருதூரில் இருந்த சைவாளெல்லாம், ஏதேதோ நம் சங்கரரிடம் வாதமும் விவாதமும் செய்தார்கள்.



திருவிடைமருதூர் கோயிலின் ஒரு பகுதி


திருவிடைமருதூர் கோயில் கோபுரம்




சங்கரர் அவர்களையெல்லாம் கோயிலுக்கு வாங்கோ, அங்கே போய் பேசிக்கலாம் என்று சொல்லி உள்ளே தெய்வ சந்நதிக்கே அழைச்சுண்டு போய் விட்டார். 


உள்ளே போனதும் “சத்யமே அத்வைதம்... அத்வைதமே சத்யம்” ன்னு மூன்று முறை அசரீரி மாதிரி பெரிய குரல் வந்தது.


சிவலிங்கத்தின் இரண்டு புறமும், இரண்டு பெரிய கைகள் நீண்டு வந்தன.


அது அந்த அசரீரிக்குரலை ஆமோதிப்பது போல இருந்தது.


எல்லா சைவாளும் நமஸ்கரித்து சங்கரரையே குருவாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.


கிட்டு:


ஆஹா! என்ன ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது!! நான் பார்க்காம விட்டுட்டேனே!!!


பட்டு:


அது மட்டுமா! ’திருவானைக்கா’ வுக்கு சங்கரர் போனபோது, பக்தாள் யாருமே அகிலாண்டேஸ்வரி அம்பாளை தரிஸிக்க முடியாமல் இருந்தது. 


அம்பாளுக்கு ஒரே கோபம். ஆக்ரோஷம். யாருமே கிட்ட நெருங்க முடியவில்லை. கருவறைக்குப்போனால் அனல் அடிக்குது. சங்கரரிடம் எல்லோரும் இதைப்பற்றிச் சொல்லி முறையிட்டனர்.


கிட்டு:


அப்புறம் சங்கரர் என்ன தான் செய்தார்?


பட்டு:


அம்பாள் காதுகளில் போட *தாடங்கம்* என்று ஒரு ஜோடி நகை செய்யச்சொல்லி, தன் கைகளாலேயே சங்கரர் அந்த அம்பாளுக்கு அணிவித்தார். 






அம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர். 


கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா? 


அம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது. 


பக்தர்கள் கூட்டம் சங்கரரைக் கொண்டாடியது.


விழுந்து விழுந்து அனைவரும் சங்கரரை நமஸ்கரித்து வணங்கினார்கள்.


கிட்டு: 


ஆஹா! இதையும் நான் நேரில் கண்டுகளிக்கக் கொடுத்து வைக்கவில்லையே!


பட்டு:


அது போகட்டும். திருப்பதியிலே நம் சங்கரர் “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்” ன்னு ஒண்ணு பாடினார் பாரு! காதில் அப்படியே தேன் பாய்வதாக இருந்தது. 


ஸ்ரீ மஹாவிஷ்ணுவை கால் முதல் தலை வரை அங்க அங்கமாக அழகாக வர்ணித்துப்பாடி அசத்தி விட்டார்.





கிட்டு:


பட்டு .... நீ சொல்வதைப் பார்த்தால் ஸ்ரீசைலத்திலும் ஏதாவது அதிஸயம் நடந்திருக்குமே!


பட்டு:


ஆமாம். அதிலென்ன சந்தேகம்?


மல்லிகார்ஜுன சிவனை மல்லிகை மணத்துடன் மரத்தடியில் பார்த்து பரவஸம் அடைந்த நம் சங்கரர், தன்னை மறந்து “சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல கணீரென்று பாடியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.



ஸ்ரீ மல்லிகார்ஜுன சிவன்



கிட்டு:


சரி ...... சரி! இதையெல்லாம் கண் இருந்தும் என்னால் காண முடியாமல் போய் விட்டது. 


பத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.







[இதன் தொடர்ச்சி நாளை 29.04.2012 ஞாயிறு 
காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.


அதில் அத்வைதம் பற்றி 
ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்வது போல அழகான
எளிமையான அருள் வாக்குகள் சில, 
தகுந்த உதாரணங்களுடன் 
கொடுக்கப்பட்டுள்ளன. 


காணத்தவறாதீர்கள்] 







[*தாடங்கம்*திருச்சி திருவானைக்கோயில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குக் காதில் அணிவிக்கப்படும் ஓர் ஆபரணம்; அது ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கக்கூடிய ஒன்று]

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-15]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-19


[பட்டுவும் கிட்டுவும் வழக்கம் போல் சந்தித்து உரையாடுதல்]


பட்டு:


கிட்டு, உனக்கு விஷயம் தெரியுமோ. நேற்று நீ இல்லாதபோது நடந்தது.


கிட்டு:


சொல்லுங்கோ பட்டு; கேட்கிறேன்.


பட்டு:


நம் சங்கரர் உடன் ”பத்மபாதர் என்கிற ஸனந்த்யாயா”, ”மண்டல மிஷ்ரா என்கிற சுரேஷ்வரர்” , ஊமையும் செவிடுமாக இருந்த “ஹஸ்தமலாகன்” ஆகிய மூன்று பேருடன் ”கிரி” ன்னு ஒருத்தர் இருந்தாரோல்யோ?


கிட்டு:


ஆமாம். அவர் தான் எது நடந்தாலும் வாயே திறக்காமல் கம்முனு இருப்பாரே; 


ஒண்ணும் தெரியாத செவிட்டு முட்டாள்ன்னு எல்லோரும் கூட கேலி செய்வார்களே; 


அவருக்கு என்ன ஆச்சு? 


பட்டு:


சங்கரர் தனது பிரதான சிஷ்யாளுக்கெல்லாம் அருமையானதொரு சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார்.


திடீர்ன்னு இந்த கிரி நம் சங்கரருக்கு மிக அருகில் வந்தார்.


தோடகாஷ்டகம்னு ஒரு அருமையான எட்டு ஸ்லோகங்களை கணீரென்ற குரலில் சொல்லி, ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், நான்கு முறை சங்கரரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டே இருந்தார்.


கிட்டு: 


அப்படியா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே!


எல்லோரும் அப்படியே அதிர்ச்சியாகிப் போயிருப்பாளே?


சங்கரர் என்ன சொன்னார்?


பட்டு:


அவருக்கான கிரி என்ற பெயரை மாற்றி ”தோடகர்” ன்னு பெயர் சூட்டி, அவரையும் தன்னோட நாலாவது பிரதான சிஷ்யராக ஏற்றுக்கொண்டு விட்டார்.





கிட்டு:


அவருக்கு என்ன ஒரு பாக்யம் பாரு!


நாம தான் இரண்டுங்கெட்டானாக வேளாவேளைக்கு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிண்டு இருக்கோம். 


நாம் வாயைத்திறந்தாலே எந்த ஸ்லோகமும் வரமாட்டேங்குது. 


ஏப்பமும் கொட்டாவியும் தான் நம் வாயிலிருந்து வருகிறது. 


நாம சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே ஜன்மா எடுத்திருக்கிறோம்னு நினைக்கிறேன்.


சங்கரருக்குக் கைங்கர்யம் செய்கிறோம்னு சொல்லிண்டு ஏதோ காலத்தைத் தள்ளிண்டு இருக்கோம்.


பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல, நாமும் ஏதோ சங்கரரோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் தான், ஏதோ நம்ப வண்டியும் ஓடிண்டு இருக்கு.


பட்டு:


சரி....  சரி....., நாளைக்கு நாம் சங்கரருடன் திருவிடைமருதூர் போகப் போகிறோம். அதன் பிறகு திருவானைக்கா, அதன் பிறகு திருப்பதி, அதன் பிறகு ஸ்ரீ சைலம்னு வரிசையாக யாத்திரை போக வேண்டியுள்ளது.


சீக்கரமாப்போய் அதற்கான வேலைகளைப் பார்ப்போம்.


ooooooooooooooooooooooooooo


காட்சி-20


[சங்கரரும் பிரதான சிஷ்யர்களும், பல்வேறு சிறுவர்களும் கூடியுள்ளனர்]


சங்கரர்: [ஒரு சிறுவனை நோக்கி]


உனக்கு எந்த ஸ்வாமியை ரொம்பவும் பிடிக்கும்?


பையன்:


எங்கள் எல்லோருக்கும் பிள்ளையாரைத்தான் ரொம்பவும் பிடிக்கும். 


சங்கரர்:


பிள்ளையாரை ஏன் ரொம்பவும் பிடிக்கும்?


பையன்:


பிள்ளையார் தான் அழகாக யானை முகத்துடன், பானைத் தொந்தியுடன், பார்க்கவே ஜோராக இருக்கிறார். 


தலையில் நாம் குட்டு போட்டுக்கொண்டால் போதும். 


பிள்ளையார் நமக்கு எல்லாமே தருவார்ன்னு எங்க அப்பா சொன்னாங்க!


சங்கரர்:


அப்படியானால் நான் ஒரு பிள்ளையார் ஸ்லோகம் சொல்கிறேன்.


நீங்க எல்லோரும் கூடவே சொல்ல வேண்டும், சரியா, சொல்லுவீங்களா?


குழந்தைகள் அனைவரும்: [ஒரே குரலில்] சொல்லுகிறோம்!


சங்கரர்:


[கணேச பஞ்சரத்னம் சொல்லுதல்; குழந்தைகளும் கூடவே சொல்லுதல்]





முதாகராத மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்


கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம்


அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்


நதாசுபாசு நாசகம் நாமாமிதம் விநாயகம்.       [ 1 ]


........... ........... ............ ............. ............. ...............
........... ........... ............ ............. ............. ...............


மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்


ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்வரம்


அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்


ஸமாஹிதா யுரஷ்டபூதி மம்யுபைதி ஸோசிராத். [ 6 ] 






[ஸ்லோகம் சொன்ன குழந்தைகள் எல்லோருக்கும் 
சங்கரர் கல்கண்டு கொடுத்து அனுப்புதல்]




   [இதன் தொடர்ச்சி நாளை 28.04.2012 சனிக்கிழமை 
காலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்] 


ooooooooooooooooooooooooooooooOoooooooooooooooooooooooooooooo

நேற்று திருச்சியில் நடைபெற்ற
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி பட ஊர்வலம்.

எங்கள் திருச்சி மாநகரத்தில் டவுன் ஸ்டேஷன் அருகே ஸ்ரீ நன்றுடையான் பிள்ளையார் கோயில் என்று ஒன்று உள்ளது. 

அதே போல மலைவாசல் நுழைவாயில் அருகே சின்னக்கடைத் தெருவில் பத்தாய்க்கடை சந்து என்ற இடத்தில் அத்வைத ஸபா என்று ஒன்று உள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும், வேதவித்துக்கள் சிலர் கூடி தினமும் வேத பாராயணங்கள் செய்வார்கள். 

குறிப்பாக கார்த்திகை மாதங்களில் வேதவித்துக்கள் பலரும் சேர்ந்து தினமும் மிகச் சிறப்பாக வேத பாராயணங்கள் செய்வார்கள்.

ஒவ்வொரு வருஷமும் இந்த ஸ்ரீ நன்றுடையான் விநாயகர் கோயில் சார்பாகவும், திருச்சி அத்வைத ஸபா சார்பாகவும் ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். 

மாலையில் இந்த இரண்டு ஸ்தாபனங்களும் ஸ்ரீஆதிசங்கரரின் திரு உருவப்படத்தைப் புஷ்பங்களாலும் புஷ்பமாலைகளாலும் மின்விளக்குகளாலும் அலங்கரித்து, மேள நாயன வாத்யங்கள் முன்புறம் முழங்க, வானவேடிக்கைகளாக வெடிகள் வெடித்து, திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும், புறப்பாட்டு  ஊர்வலமாக அழைத்து வருவார்கள். 

முன்னால் செல்லும் அனைவரும் 

ஹர ஹர சங்கர! 
ஜய ஜய சங்கர!!

காஞ்சி சங்கர! 
காமாக்ஷி சங்கர!!

காலடி சங்கர!
ஸத்குரு சஙகர!!

ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர!!

என்று சொல்லியபடியே போவார்கள்.

அந்த புறப்பாட்டு ஸ்வாமிப்பட வண்டியின் பின்புறம் நிறைய வேத வித்துக்கள் வேதகோஷமிட்டு வருவார்கள்.   

வேதம் என்ற ஆலமரம் இன்று வரை நம் பாரத தேசத்தில், தழைத்தோங்க வித்திட்டவரான ஸ்ரீ ஆதிசங்கரரின் பட ஊர்வலத்தையும், வேதம் படித்த பண்டிதர்களின் வேதகோஷத்தையும் ஒருங்கே பார்க்கும், நமக்கு நம்மையறியாமல் மெய்சிலிர்த்துப்போகும், 

நேற்று [26.04.2012 வியாழக்கிழமை] ஸ்ரீசங்கர ஜயந்தியை முன்னிட்டு இரவு சுமார் 7 மணியளவில், ஸ்ரீ நன்றுடையான் விநாயகர் கோயில் சார்பாக மிகச்சிறப்பாக அலங்கரிப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் பட ஊர்வலம், புறப்பட்டு வந்தது. 

[அப்போது என் கேமரா பாட்டரியில் சார்ஜ் இல்லாமல் போனதால் அதை கவரேஜ் செய்ய முடியவில்லை.]

பிறகு திருச்சி அத்வைத ஸபா சார்பாக எட்டு மணிக்கு புறப்பட்டு வந்த ஸ்ரீ ஆதிசங்கரர் பட ஊர்வலத்தை மட்டும் புகைப்படம் எடுக்க முடிந்தது. இதோ தங்கள் பார்வைக்காக:





[ஸ்ரீ ஆதிசங்கரர் திரு உருவப்பட ஊர்வலத்தின் பின்புறம் வேதகோஷமிட்டுச்செல்லும் வேத வித்துக்கள்]
    




சுபம்






வியாழன், 26 ஏப்ரல், 2012

ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]


ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் 
நாடகம் [பகுதி-14]

By வை. கோபாலகிருஷ்ணன்

காட்சி-17


[பட்டுவும் கிட்டுவும் மட்டும் உரையாடுதல்]


பட்டு:


கிட்டு, சங்கரரின் அம்மா காலமான பின்பு நாமும் சங்கரருக்கு கைங்கர்யம் செய்வதாகச் சொல்லி, நம் ஊரை விட்டுப் புறப்பட்டு வந்து விளையாட்டுப்போல ஒரு வருஷம் ஆச்சு.


கிட்டு:


ஆமாம் பட்டு. இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? 


எல்லாம் நாம் பூர்வ ஜன்மத்திலே செய்த புண்ணியம் தான்.  


பல புண்ணிய நதிகளிலே சங்கரரோடு நாமும் ஸ்நானம் செய்ய முடிகிறது.

பல கோயில்களுக்கு சங்கரரோடு போய் ஸ்வாமி தரிஸனமும் திவ்யமாகச் செய்ய முடிகிறது.

பட்டு: 

அது மட்டுமா? எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பும், ராஜ உபசாரமும் கிடைத்து வருகிறது. 


பல மொழிகள் பேசும் பல ஜனங்களைப் பார்த்து, பழகிட முடிகிறது. 


மதம் மாற்றப்பட்டு, அறியாமையால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோரையும், அத்வைதத்தில் நம்பிக்கை வைக்குமாறு கூறி, நம் வைதீக மதத்திற்கே அவர்கள் திரும்பி வருமாறு சங்கரர் செய்து வரும் அரும் தொண்டைக் காண முடிகிறது. 


சங்கரர் தன் தபோ வலிமையாலும், அபூர்வ சக்திகளாலும், யந்திரப் பிரதிஷ்டை செய்து, பல கோயில்களுக்கு புணருத்தாரணம் [கும்பாபிஷேகம்] செய்து வருவதையும், பராசக்தியின் அருளைப் பரப்புவதையும், நம் கண்களால் கண்டு மகிழமுடிகிறது.

கிட்டு:

நாளைக்கு நாம் சங்கரரோடு கொல்லூர் மூகாம்பிகையை தரிஸிக்கப்போகிறோம், பட்டு.

பட்டு:

ஆமாம்.... ஆமாம்..... அதற்கான பயண வேலைகளையெல்லாம் கவனிப்போம்.

oooooooooooooooooooooooooo


கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை

காட்சி-18

[மூகாம்பிகை கோயில் செல்லும் வழியில் கூட்டமாக ஜனங்கள்]

யாரோ ஒருவர்:

மூகாம்பிகை கோயிலுக்கு சங்கராச்சார்யார் வருகிறார்கள்.

ஓரமாக வரிசையாக நில்லுங்கோ!

பாதையில் யாரும் தயவுசெய்து நிற்காதீர்கள்.

[ஒரு ஏழை பெரியவர் தன் மகனுடன் சங்கரரிடம் வருதல்]

பெரியவர்: [தன் வாயை வலது கை விரல்களால் பெளயமாக மூடியபடி]

இவன் என் குழந்தை. 

பிறந்ததிலிருந்து வாயும் பேச வராமல் காதும் கேட்காமல் இருக்கிறான், 

பெரியவா தான் இவனுக்கு அனுக்ரஹம் செய்யணும்.     

சங்கரர்: [அந்தப்பையனைத் தன் கரங்களால் தொட்டபடி]

நீ யாரப்பா?

பையன்:

இந்த என் உடல் என்னுடையது அல்ல. 

அது பரமாத்மாவுக்கே சொந்தம். 

நான் யார் என்று எப்படிச் சொல்வது?

சங்கரர்: [அந்தப் பையனைப் பார்த்து]

உன்னுடைய பதில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

இந்தா [நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தல்] இதைச் சாப்பிடு.

சங்கரர்: [மற்றவர்களைப் பார்த்து]

இன்று முதல் இவன் பெயர் “ஹஸ்தமலாகன்”.

என்னுடன் என் பிரதான சிஷ்யர்களில் ஒருவனாக இருப்பார். 

பெரியவர்:

ஐயனே! என் குழந்தையை முதன் முதலாகப் பேச வைத்த நீங்கள் தான் நடமாடும் தெய்வம். 

என்னே என் குழந்தையின் பாக்யம்! 

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

[பெரியவரும், அந்தச்சிறுவனும் சங்கரரின் காலில் விழுந்து நமஸ்கரித்தல்]



கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத் தேர் ஓட்டம்


oooooooooooooooooooooooooooooooo



இன்று 26.04.2012 வியாழக்கிழமை [குருவாரம்]
சித்திரை மாதம் - திருவாதரை நக்ஷத்திரம்
ஸ்ரீ ஆதி சங்கரர், 
கேரளாவில் உள்ள “காலடி” என்ற சிற்றூரில் 
அவதாரம் செய்த திருநாள்.
”சங்கர ஜயந்தி” 
என்று எங்கும் கொண்டாடப்படுகிறது.
நாமும் அவரை நினைத்து வணங்கி 
குருவருள் பெறுவோமாக!

ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!!


-oOo-



[இதன் தொடர்ச்சி நாளை 27.04.2012 வெள்ளிக்கிழமை 
பகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]